திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சிறப்புடை ஒருமை

-பத்மன்ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்புத் தகுதியும், கூடுதல் மதிப்பும், சிறப்பு உரிமைகளும் உண்டல்லவா? அதுபோல்தான் வேதாந்தத்தில் பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, சில சிறப்புத்தன்மைகளால் ஜீவாத்மாக்களை விட பரமாத்மா மேலானது என்று வாதிடும் தத்துவம்தான்  ‘விசிஷ்டாத்வைதம்’.

விசிஷ்டாத்வைதத்தை  ‘விசிஷ்ட அத்வைதம்’ என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அத்வைதம் என்றால்  ‘இருமையற்ற ஒருமை’ என்று பொருள். விசிஷ்ட என்றால்  ‘விசேஷத் தன்மை வாய்ந்த, அதாவது சிறப்புத் தன்மையுடன் கூடிய’ என்று பொருள். ஆக, விசிஷ்டாத்வைதம் என்றால்  ‘சிறப்புடை ஒருமை’ என்று கூறலாம்.


பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் வேறு வேறு அல்ல, பரமாத்மாவின் பிரதிபலிப்புதான் ஜீவாத்மா, ஆகையால் இருப்பது பரப்பிரும்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம். விசிஷ்டாத்வைதம் இதில் இருந்து சற்று மாறுபடுகிறது.

 “பரமாத்மா எனப்படும் பரப்பிரும்மம்தான் அனைத்திலும் வியாபித்திருக்கிறது என்ற வகையில் இரண்டும் ஒன்றே என்றபோதிலும், ஜீவாத்மாக்களைவிட மேம்பட்டதாக பரப்பிரும்மம் எப்போதும் இருப்பதால், அது சற்று வேறுபட்டது-சிறப்புடையது” என்கிறது விசிஷ்டாத்வைதம்.

ஆற்றில் உள்ள நீர்த்துளிகள் எல்லாம் சேர்ந்து ஆறு என்று ஒற்றைச் சொல்லில் அழைக்கப்பட்டாலும், ஆற்று நீர்த்துளியைவிட ஆறு பெரியதும், சிறப்பும் வாய்ந்தது அல்லவா? அதைப்போல்தான் பரமாத்மாவும் ஜீவாத்மாக்களோடு ஒன்றியிருக்கின்றபோதிலும், அவற்றில் இருந்து மேம்பட்ட தனித்தன்மை வாய்ந்த சிறப்புடையதாகவும் திகழ்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.

அத்துடன், பரப்பிரும்மத்தை எவ்வித குணங்களும் அற்ற நிர்குணமாய் அத்வைதம் கூறுவதை விசிஷ்டாத்வைதம் ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்குண பிரும்மத்துக்குப் பதிலாக நற்குண பிரும்மத்தை முன்வைக்கிறது. அதாவது, ஜீவாத்மாக்கள் தங்களது முக்திக்காக சகுண (நல்ல குணங்கள் நிரம்பிய) பிரும்மத்தை ஆராதிக்கலாம் என்று அத்வைதம் கூறுகிறதல்லவா, அந்த நற்குணங்கள் எல்லாம் நிரம்பப் பெற்றதாகவே பரப்பிரும்மம் இருக்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.

ஸ்ரீ ஆதிசங்கரர்
மேலும் அத்வைத ஆசார்யர் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகின்ற மாயாவாதத்தை விசிஷ்டாத்வைதம் அடியோடு நிராகரிக்கிறது.  பிரும்மம் மட்டுமே உண்மை, உலகம் ஒரு மாயை (உண்மை போன்ற மயக்கம்) என்பதே சங்கரரின் அத்வைதம். ஆனால், பிரும்மத்தின் ஓர் அங்கமாகிய உலகமும் உண்மைதான் என்கிறது விசிஷ்டாத்வைதம்.

அக்காலத்தில் படித்தவர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற  தத்துவங்களான பௌத்தம், சமணம், சாங்கியம், மீமாம்சை ஆகியவற்றை ஒரு புறம் வாதத்திறமையால் சமாளித்தும், பாமரர்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்து மூர்க்கத்தனம் நிரம்பியவையாகக் காட்சியளித்த காபாலிகம், தந்திரம் போன்றவற்றை சீர்திருத்தியும், வேத, உபநிஷதங்களின் அடிப்படையிலான வேதாந்தக் கருத்துக்கு பாரதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனிப்பெரும் செல்வாக்கை நிலைநாட்டிய பெருமை ஆதிசங்கரரையே சாரும். இருப்பினும் அவர் வகுத்த பாதையில் சற்று பயணித்து புதிய மார்க்கங்களை பிற்கால வேதாந்திகள் உருவாக்கினர். அவர்களில் முக்கியமானவர் விசிஷ்டாத்வைதத்தை வகுத்தளித்த ராமானுஜர்.

பாரதத்தில் அமைதியான சூழல் நிலவிய காலத்தில் இயற்கையோடு இயைந்த சடங்குகள் சார்ந்த தத்துவங்களும், அக்காலத்திலேயே உருவான அண்டவியல், அணுவியல் உள்ளிட்ட அறிவியல் மற்றும் உளவியல் ஆய்வுகளின் அடிப்படையிலான தத்துவங்களும் தோன்றின. ஆகையால் வேள்விச் சடங்குகள் நிறைந்த மீமாம்சை, அணுவியல் பேசும் வைசேஷிகம், பொருள் வாதத்தையும் கருத்து வாதத்தையும் இணைத்து உருவான சாங்கியம், மனிதனின் மன ஆற்றலை மேம்படுத்தி உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் யோகம், காரண காரியங்களை விவாதிக்கும் நியாயம் என, வேதத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு வேறு வேறு தளங்களில் பயணப்பட்ட தத்துவங்கள் எழுந்தன. மாற்றுக் கருத்துகளோடு சமரசமாக இணைந்திருக்கும் பரிபக்குவம் அப்போது இருந்தது. ஆனால் காலப்போக்கில் தத்துவத்தின் பிடி தளர்ந்து, வேதத்தை ஆதாரமாகக் காட்டி வறட்டுத்தனமான சடங்கு, சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற போக்கு ஏற்பட்டது. அப்போது அதனைச் சீர்படுத்த வேள்விச் சடங்குகளை கடுமையாகக் கண்டித்து, சிந்தனையைக் கிளறிவிடும் சமணம், பௌத்தம் ஆகியவை தோன்றின.

காலப்போக்கில் சமண, பௌத்த மடலாயங்களிலும் ஊழல் மலிந்த சூழல் ஏற்பட்டபோது, ஆரம்பத்தில் அவை எழுப்பிய கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியான புதிய தத்துவச் சிந்தனையாக, அதேநேரத்தில் வேத உபநிஷதக் கருத்துகள் மீதான மீள்பார்வையுடன் சங்கரரின் அத்வைதம் புறப்பட்டது. அக் காலகட்டத்திலும் பாரதீய மெய்ஞான பாரம்பரியப்படியே வீண் மோதலற்ற தத்துவ விவாதங்களுக்கும், வழிபாடுகளைவிட ஞான, யோக மார்க்கங்களுக்கும் முக்கியத்துவம் நீடித்தது. பின்னர், அன்னியப் படையெடுப்புகளால் சீர்குலைவு தொடங்கியபோது, புரிந்துகொள்ளக் கடினமான ஞான மார்க்கத்தைவிட, எளிமையான பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது. அந்தச் சூழலில்தான் விசிஷ்டாத்வைதம் எழுந்தது.

வேதாந்த தேசிகன்
சங்கரரைப் போலவே உபநிஷதக் கருத்துகளையே தனது கொள்கைக்கான ஆதாரமாக ராமானுஜர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் தனது சிறப்புடை ஒருமையை (விசிஷ்டாத்வைதத்தை) நிரூபிக்க, அந்த உபநிஷதக் கருத்துகளுக்கு நேரடியான பொருள் அன்றி சிறப்புத் தன்மை வாய்ந்த விளக்கத்தை எடுத்துரைக்கிறார்.

அந்த வகையில், அத்வைதம் சார்ந்ததாகக் கருதப்படும் உபநிஷதங்களின் முக்கியக் கருத்துகளுக்கு ராமானுஜர் விசிஷ்டாத்வைதக் கண்ணோட்டத்தில் தரும் விளக்கங்களை தற்போது காண்போம். 

‘சர்வம் கல்வ இதம் பிரும்ம’ என்கிறது சாந்தோக்ய உபநிஷதம். இதன் நேரடிப் பொருள் – ‘இவை அனைத்தும் பிரும்மமே. ராமானுஜர் தருகின்ற சிறப்புப் பொருள் – இங்கே இவை என்பது பரப்பிரும்மம் எனப்படும் ஈஸ்வரன், அதன் அறிவுடை அங்கமாக விளங்கும் அதாவது சித் பிரும்மமாக விளங்கும் ஜீவர்கள், அதன் அறிவற்ற அங்கமாக அதாவது அசித் பிரும்மமாக விளங்கும் பொருள்மய உலகம் ஆகிய மூன்றைக் குறிக்கிறது. இந்த மூன்றும் ஒருங்கிணைந்ததே பிரும்மம்’ என்கிறார் ராமானுஜர். ஆக சித், அசித், ஈஸ்வரன் ஆகிய வேறுபட்ட மூன்று தத்துவங்கள் ஒன்றுபட்டிருப்பதே பிரும்மம், இந்த மூன்றுமே உண்மையானவை, எதுவுமே மாயையோ பொய்யோ அல்ல என்கிறார்.

‘அயம் ஆத்மா பிரும்ம’ என்பது மாண்டூக்ய உபநிஷதத்தின் மகா வாக்யம். இதன் நேரடிப் பொருள் இந்த ஆன்மாவே பிரும்மம். அதாவது ஆன்மாவாக எது திகழ்கிறதோ அதுவேதான் பிரும்மம் என்று பொருள். இதற்கு ராமானுஜர் தரும் சிறப்புப் பொருள் – சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இணைந்ததே பிரும்மம் என்பது விளங்கிக் கொண்டபடியால், அதாவது அனைத்துமே பிரும்மம் என்பதை அறிந்து கொண்டபடியால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய பிரும்மத்தில் இருந்து வேறுபட்டதல்ல.

சாந்தோக்ய உபநிஷதத்தின் மிகச் சிறந்த மகா வாக்கியம், தத்வமஸி (தத் த்வம் அஸி). இதன் பொருள், அது நீயேதான். இங்கு அது என்பது பிரும்மம், நீ என்பது ஜீவாத்மா. ஆக, ஜீவாத்மாதான் பரமாத்மா, இரண்டும் வேறு வேறு அல்ல என்கிறது அத்வைதம். இதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் தருகின்ற சிறப்புப் பொருள் – அனைத்தின் உள்ளிருப்பாகவும் அந்த பிரும்மம் இருப்பதால், உனக்குள்ளும் அந்த பிரும்மம் இருக்கிறது என்று இதற்குப் பொருளே அன்றி, நீயே (தானே) பிரும்மம் ஆகிவிட முடியாது என்பதே. அதாவது, உயிரினங்கள் (சித் ஆகிய ஜீவர்கள்), பொருள் மய உலகம் (அசித்) ஆகியவற்றை உடலாகக் கொண்டுள்ள அந்த பரப்பிரும்மமே, ஒவ்வொரு ஜீவருக்குள்ளும் உள்முகமான ஆத்மாவாகவும் திகழ்கிறார் என ராமானுஜர் கூறுகிறார்.

மணவாள மாமுனிகள்
இதேபோல் நேதி, நேதி என்ற உபநிஷதக் கருத்துக்கு, இதுவன்று- இதுவன்று என்பது நேரடிப் பொருள். இதற்கு அத்வைதம் தரும் பொருள்,  இதுவா, இதுவா என்று தேடிக்கொண்டே போனால் எந்தவொரு விளக்கத்துக்கும் அகப்படாததே பிரும்மம் என்பதே. இதற்கு விசிஷ்டாத்வைதம் தருகின்ற சிறப்புப் பொருள் – இது மட்டுமே அன்று, இது மட்டுமே அன்று. அதாவது பிரும்மம் என்பது இது மட்டும்தான் என்று வகைப்படுத்திவிட முடியாது, எண்ணிலடங்கா பல குணங்களைப் பூண்டது பிரும்மம்.
இவ்வாறாக, பிரும்மம் என்பது ஒருமைதான் என்றபோதிலும், அதற்கு சித், அசித் ஆகிய விசேஷ குணங்கள் இருப்பதால் அது சிறப்புடை ஒருமை என்கிறது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். 

மரம் ஒன்றுதான் என்றபோதிலும், அதற்குப் பல கிளைகள் உள்ளன, இந்தக் கிளைகள் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை என்றபோதிலும், அவை மரம் என்ற ரீதியில் ஒன்றாகவே உள்ளன என்பதைப்போல்தான் சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இணைந்த வகையில் பிரும்மம் ஒன்றாய் இருக்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.

சாங்கிய தரிசனம், பிரகிருதி, புருஷன் என்று கூறுவதைத்தான் விசிஷ்டாத்வைதம் முறையே அசித், சித் என்று கூறுகிறது. சாங்கியம் ஈஸ்வரனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், விசிஷ்டாத்வைதம் அசித் (பிரகிருதி), சித் (புருஷன்) ஆகியவற்றுடன் ஈஸ்வரனையும் முன்னிறுத்துகிறது. சித்தும், அசித்தும் புருஷனின் இருவித வடிவங்கள் அதாவது தோற்றங்கள் என்றால், அந்தப் புருஷனின்  சாராம்சமாக இருப்பதே ஈஸ்வரன் என்கிறது. அந்தப் புருஷன் நிர்குணமுடையது அல்ல, கல்யாண குணங்கள் (நற்குணங்கள்) நிரம்பியது. இதுவே புருஷனின் முதன்மைக் குணம். அது மாற்றம் இல்லாதது. அதனுடைய இரண்டாவது குணமாகிய சித், அசித் என்ற வடிவத்தில்தான் பரிணாமங்கள் (மாற்றங்கள்) தோன்றுகின்றன.

அசித் எனப்படுவது உயிரற்ற பொருள்மயமான உலகம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட அனைத்துமே சித் எனப்படும் ஜீவன்கள் ஆகும். அதாவது ஆத்ம அறிவு கொண்ட அனைத்துமே சித், ஜீவன்கள் ஆகும். இந்த ஜீவன்கள் மூவகைப்படும். முதலாவது, ஒருபோதும் சம்சார சாகரத்தில் (பிறவிப் பெருங்கடலில்) ஆட்படாமல் எப்போதுமே சுதந்திரமாக இருப்பவை. இவற்றுக்கு ‘நித்ய’ என்று பெயர். இரண்டாவது வகையைச் சேர்ந்தவை, பிறவிகளை எடுத்து, விடுதலையை அடைந்தவை. இவற்றுக்கு  ‘முக்த’ என்று பெயர். மூன்றாமவை, சம்சார சாகரத்தில் கட்டுண்டு கிடப்பவை. இவற்றுக்கு  ‘பத்த’ என்று பெயர்.

ஸ்ரீ ராமானந்தாச்சார்யா
சித், அசித் ஆகியவற்றை ஆட்சி செய்வதே ஈஸ்வரன். இந்த மூன்றும் இணைந்த நிலையே பிரும்மம். அதுவே சர்வேஸ்வரன். அந்த பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றி, இயங்கி, மீண்டும் ஒடுங்குகிறது. முக்தி அடைவதே ஜீவன்களின் லட்சியம். அதற்கு அந்த சர்வேஸ்வரனிடம் பக்தியும், பிரபத்தியும் (சரணடைதல்) அவசியம் என்கிறார் ராமானுஜர்.

பிரும்மம், சர்வேஸ்வரன் என்று தான் குறிப்பிடுவது நாராயணன் எனப்படும் விஷ்ணுவே என்கிறார் அவர். அந்த விஷ்ணுவின் ஆற்றலாக (சக்தியாக) இருப்பது  ‘ஸ்ரீ’ எனப்படும் லக்ஷ்மி என்கிறார். ஆகையால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம்,  ‘ஸ்ரீ சம்பிரதாயம்’ என்றும்  ‘ஸ்ரீ வைஷ்ணவம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ராமானுஜருக்கு முன்பே ஓரளவு விசிஷ்டாத்வைதக் கருத்துகளும், விஷ்ணு வழிபாடும் இருந்திருக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி, பெரிய தத்துவமாகவும், மதமாகவும் வளர்த்த பெருமை ராமானுஜரையே சாரும். வேத, உபநிஷதக் கருத்துகளோடு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கட்டமைத்தார் ராமானுஜர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தமது மார்க்கத்தில் உரிய பங்களித்த சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் மதிக்கப்படுகிறார்.

ராமானுஜரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீவைஷ்ணவத்தில் வடகலை- தென்கலை என்ற முக்கிய வேறுபாடு தோன்றியது. தமிழகத்தின் வடக்கில் உள்ள காஞ்சியைச் சேர்ந்த வேதாந்த தேசிகர் வழிவந்த ஆசார்யர்களைப் பின்பற்றுவோர் வடகலையினர் என்றும், தமிழகத்தின் தெற்கில் உள்ள ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிள்ளைலோகாசார்யர், மணவாள மாமுனிகள் ஆகிய ஆசார்யர்களைப் பின்பற்றுவோர் தென்கலையினர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அக்காலத்தில் மற்ற தத்துவங்களோடு கடும் விவாதம் நடைபெற்ற காஞ்சியைச் சேர்ந்தவர்கள் அதற்கு உதவிகரமான சம்ஸ்கிருத உபநிஷதங்கள், தத்துவ நூல்களைப் பயின்றதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதேநேரத்தில் பாமரர்கள் நிறைந்த ஸ்ரீரங்கத்தில் பக்தி பஜனைகள், சொற்பொழிவு ஆகியவையே கோலோச்சியதால் அதற்கு உதவிகரமான தமிழில் உள்ள ஆழ்வார் பாசுரங்களை அதிகம் பயின்று அதற்கு முக்கியத்துவம் தந்தனர். ஆகையால் வடகலையினர் வடமொழியான சம்ஸ்கிருதத்துக்கும், தென்கலையினர் தென்மொழியான தமிழுக்கும் முக்கியத்துவம் தருவது முக்கிய வேறுபாடாக உள்ளது.

மேலும் தத்துவ அடிப்படையில் வடகலையினருக்கு, முக்தியை வேண்டி தன்னை இறைவனிடம் ஒப்படைத்து அவரை இறுகப் பற்றிக்கொள்ளும் சரணாகதிதான் முக்கியமானது. (குரங்குக் குட்டி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன் தாயை இறுகப் பற்றிக் கொள்வதைப்போல.) ஆனால் தென்கலையினருக்கோ, முக்திக்காக சரணாகதி அடைந்து இறைவனை நிர்பந்திப்பது தகாது, ஆகையால் இறைவனின் விருப்பப்படி நமக்கு எப்போது வேண்டுமானாலும் முக்தி கிடைக்கட்டும், நமக்கு அவரது நினைப்பே போதும் என்ற பக்தியே பிரதானம். (பூனைக் குட்டியைக் காப்பாற்ற அதன் தாய் இறுகப் பற்றிக் கொள்வதைப்போல.)

சுவாமி நாராயணர்
வடகலையினருக்கு, விஷ்ணுவின் இணையான ஸ்ரீ எனப்படும் மகாலக்ஷ்மி (திருமகள்), விஷ்ணுவைப் போலவே ஆண்டவன், பரமாத்மா, முக்திக்குப் பரிந்துரைப்பவர். ஆனால் தென்கலையினருக்கோ, மகாலக்ஷ்மி முக்திக்குப் பரிந்துரைப்பவராக இருக்கின்றபோதிலும் அவரும் ஜீவாத்மாவே, அவரே ஆண்டவன் அல்ல.

பாரதத்தின் வட மாநிலங்களில் பக்தி இயக்கம்- குறிப்பாக கிருஷ்ண (விஷ்ணு) பக்தி இயக்கங்கள் உருவானதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைத- ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயக் கருத்துகளின் தாக்கமே பெரிதும் காரணம். வடமாநிலங்களில் செல்வாக்குப் பெற்றுத் திகழும் ஸ்ரீ ராமானந்த சம்பிரதாயம், குஜராத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ ஸ்வாமிநாராயண் சம்பிரதாயம் ஆகியவையும் வைஷ்ணவ விசிஷ்டாத்வைதத்தையே பின்பற்றுகின்றன.

அதேநேரத்தில் தமிழகத்தில் தோன்றிய சித்தாந்த சைவம், கர்நாடகத்தில் தோன்றிய வீரசைவம், ஸ்ரீகண்டரின் சிவ அத்வைதம் ஆகியவை சைவ விசிஷ்டாத்வைத தத்துவங்களாகத் திகழ்கின்றன. ராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைதம்  ‘ஈஸ்வரன், சித், அசித்’ என்று கூறுவதை சித்தாந்த சைவம் முறையே  ‘பதி, பசு, பாசம்’ என்று கூறுகிறது.

ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி (உண்மை ஒன்றே, அறிஞர்கள் அதனைப் பலவிதமாகச் சொல்கிறார்கள்) என்ற பாரதீய மெய்ஞானத்தின் அடிப்படைப் பண்பின் பிரகாரம், பல்வேறு விதங்களில், பல சுவைகளில் விளக்கப்பட்டுள்ள அந்த ஒற்றை உண்மை குறித்த விளக்கத்தின் ஒரு பாதையை நாம் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், மாற்றுப் பாதைகளையும் மதித்து பேதமின்றி ஐக்கியமாக வாழ்வோமாகுக!


குறிப்பு:

பத்மன் அவர்களின் இயற்பெயர் நா.அனந்தபத்மநாபன்; தமிழ் இதழியல் உலகில் பலரும் அறிந்த மூத்த பத்திரிகையாளர். இவரது ‘மூன்றாவது கண்’ என்ற இதழியல் அறிமுக நூல், தமிழக அரசின் பரிசு பெற்றது. மேலும் பல நூல்களை பத்மன் எழுதி இருக்கிறார். தினமணி இணையதளத்தில் புதன்கிழமை தோறும் இவர் எழுதிவரும் தத்துவ தரிசனம் தொடர் பாரத ஞான மரபின் அனைத்து முகங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
திரு.

இத்தளத்தில் அவர் எழுதிய  ‘ராமானுஜர் வழியில்’ கட்டுரை, ஒரு புதிய விவாதத்தைத் துவக்கியுள்ளது. விசிஷ்டாத்வைத சித்தாந்தம் குறித்த இந்த விளக்கக் கட்டுரையும் அதன் ஓர் அங்கமே.

.


2 கருத்துகள்:

  1. ராமானுஜர் 1000ம் ஆண்டில் ராமானுஜரின் தத்துவங்களுக்கு மிக எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி எழுதியுள்ள அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு