செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

காரேய் கருணை ராமானுஜர்
-லாவண்யா ஜெயராம்தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்

தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்காய்

இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை

உன்னுவதே சாலவுறும் 

 -என எம்பெருமானார் சாதித்தருளியபடி காரேய் கருணை ராமானுஜர் அவதரித்து தமது சித்தாந்தத்தை நிலைநாட்டி பூவுலகிலுள்ளவரை வாழ்விக்கச் செய்தார். நூற்றியிருபது ஆண்டுகள் வாழ்ந்து அளப்பரிய ஒப்பந்தக் கைங்கர்யப் பணி செய்த ராமானுஜரைப் பற்றி சீர்திருத்தவாதியா, மறுமலர்ச்சியாளரா, புதுமைகள் படைத்தவரா, புரட்சியாளரா, நெறியாளரா என்ற கேள்விக்கணைகள் தற்பொழுது தோன்றியுள்ளன.  

அம்மகானை எப்படி வகைப்படுத்தினாலும் அவர் செய்த அற்புதத் தொண்டுகள் தொன்றுதொட்டு பின்பற்றி வரப்படுகின்றன. பக்தர் குழாமிற்கு ஆசாரியராகவும் ஆசானாகவும் தத்துவஞானியாகவும் வேதாந்தியாகவும் காணப்படுவதின் காரணம் அவரது நற்பண்புகளாகும். அவற்றுள் முதன்மையாயிருப்பது அன்னாரின் கருணையாகும். அதனை அன்பு, மனிதாபிமானம், சமுதாயப்பற்று, தெய்வபக்தி, சமூக உணர்வு எனப் பலவாறு பெயரிடலாம். இவற்றைக் காட்டும் விதமாக ஒரு சில நிகழ்வுகளைக் கோடிட்டு காட்டும் முயற்சியே இக்கட்டுரை.
***
 ‘காரேய் கருணை ராமானுஜ! இக்கடலிடத்தில்

ஆரே அறிபவர் நின் அருளில் தன்மை?’ 

-மேகம் போன்ற கருணை உடைய ராமானுஜரே! உமது அருளின் தன்மையைக் கடல் சூழ்ந்த இவ்வுலகில் அறியவல்லவர் யார்? என ராமானுஜ நூற்றந்தாதியில் ஆசிரியர் திருவரங்கத்து அமுதனார் கூறுகிறார். இவ்வரிகள் ராமானுஜரின் பற்பல கருணைப் பெருஞ்செயல்களை உணர்த்துவதாகக் கருதலாம். பொதுவாக மேகத்தைப் பரம பக்தர்களின் நினைவுக் குறியாகக் கொள்வதுண்டு. வானவீதி எங்கும் நன்னீரைச் சுமந்து செல்லும் மேகம் பாகவதர்களின் உபலட்சணமாகக் கருதுவதாக நம்மாழ்வார் பாசுரம் ஒன்று குறிப்பிடுகிறது.

அந்த நீர்மேகம், சூல்மேகம், கார்மேகம் எனப் பாராட்டப்படுவதுண்டு. இது திருமாலின் திருமேனி வண்ணத்தினை ஒத்திருக்கிறது. சார்ங்கம் உதைத்து சரமழை பெய்வது போல் உலகினை ஊட்டி வளர்க்கத் தேவையான நீரினைத் தந்து உதவுகிறது. நீர்வளம் பெருகுவதால் நெல்வளம், பால்வளம் என வாழ்க்கையில் வளங்கள் பெருகிட வழிவகுக்கிறது. சிவந்த மேனியரான ராமானுஜர் கார்முகிலை ஒத்த கருணை உள்ளம் கொண்டு உலகு உய்ய வழி காட்டினார். குருவின் ஆணையினையும் மீறி தாம் பதினெட்டு முறை இட்டகால் இட்டகைகளாக நடந்து கற்ற திருமந்திரத்தைக் கோபுரத்தின் மீதேறி ஆசையுடையவரெல்லாம் அறிந்துகொள்ள முழங்கினார்.

ராமானுஜர் சாதி இன குல மதவேறுபாடின்றி தொண்டு மனப்பான்மையுடையவர்களைத் தமது மடத்தில் சேர்த்துக் கொண்டதுடன் அனைவரையும் சமமாக நடத்திய கருணையுள்ளம் கொண்டிருந்தார்

சிற்றின்பப் பிரியர்களான உறங்காவில்லிதாசர் போன்றவர்களுக்கு நல்வழி காட்டினார். யாதவப் பிரகாசர் என்ற தமது குரு தம்மையே தீர்த்துக்கட்ட செய்த முயற்சிகளை எல்லாம் தமது கருணையால்  மன்னித்து துறவியாக்கினார். புறச் சமயிகளையும் திருத்தி ஆட்கொண்டார். கதியுற்றவர்களுக்கெல்லாம் கதியாவது என வலியுறுத்தினார். நாற்பாற்குலத்திற்கும் கீழ்பட்டவர்கள் எனக் கருதப்பட்டவர்களைத் திருக்குலத்தாராக்கி திருத்த முயன்றது ராமானுஜரின் திருவுள்ளம். பாகவதர் குழாத்தில் ஜன்மநிரூபணம் கூடாது என்ற கொள்கையினை ராமானுஜரின் வாழ்க்கையும் உபதேசங்களும் உணர்த்துகின்றன

வில்லிதாசரை ஆட்கொண்ட கருணை ஊமை ஒருவனுக்கும் அருள்புரிந்ததாகும். தனியிடத்தில் கதவுகளை அடைத்துக் கொண்டு சைகைகள் மூலம் உண்மைகளை அவனுக்குப் புலப்படுத்தினார்.  ராமப்பிரியருடன் இரண்டறக் கலந்த பீவிநாச்சியாரைத் துலுக்க நாச்சியராகத் திருநாராயணபுரத்தில் பிரதிஷ்டை செய்தது அக்கால சூழ்நிலையில் ஒரு மகத்தான செயலாகும். மேலும் வரும் வழியில் தங்களைக் காப்பாற்றிய இனத்தாருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை ஆலயப் பிரவேசம் செய்யும் உரிமையைத் துணிவுடன் வழங்கினார். கனிவு பொங்க அவர்களைத் திருக்குலத்தார் எனப் பெயரிட்டார்

பிற்காலத்தில் காந்தியடிகள் ஹரிஜனங்கள் என இவ்வகுப்பினரை அழைப்பதற்கு முன்னோடி ராமானுஜர். மைசூரில் இந்தக் கருணை வள்ளல் மோதி நவாப் என்ற ஒன்றினை உருவாக்கினார். ராமானுஜர் என்ற கருணை மேகம் மைசூர் சீமையில் பொழிந்த ஞான வெள்ளத்திற்கு  ஓர் அறிகுறியாகும்.

அன்றையச் சூழ்நிலையில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தருணத்தில் சமூக ஏற்றத் தாழ்வுகளைத் தகர்ந்தெறிந்து துணிவுடன் சமத்துவத்தை நிலைநாட்டினார். ஆசாரிய மணிமாலையின் நடுநாயகமாக விளங்கும் ராமானுஜரின் வாழ்க்கையும் உபதேசங்களும் காரேய் கருணை ராமானுஜரின் புகழினை உலகிற்குப் பறைசாற்றுகின்றன. புரட்சிக் கருத்துகள் நிறைந்த இந்த சீர்திருத்தவாதி கார் முகில் போல் இன்றும் நம்மை தமது பக்தியாலும் ஞானத்தாலும் வழிநடத்துகிறார். உயிர்க் குலத்தின் பசியினையும் தாகத்தையும் ஒருங்கே போக்கும் மேகம் போல் கருணை மழை பொழிந்துள்ளதைப் பக்தகவி ஒருவர்தான் அறப்பெய்து மாயும் தடமுகில்நயம்படக் கூறியுள்ளார்.


நன்றி:
விஜயபாரதம் - ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்பிதழ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக