திங்கள், 22 ஆகஸ்ட், 2016

வைணவம் தழைக்கச் செய்த ஸ்ரீ ராமானுஜரின் திக்விஜயம்-திருநின்றவூர் ரவிக்குமார்
பாரத நாடே புண்ணிய பூமி. பெரிய மகான்களும் சிறந்த குருமார்களும் இந்த நாட்டை வலம் வந்து வணங்கியதுடன் தங்கள் தத்துவத்தை பாரத மக்களிடையே பரப்புவது வழக்கம். அவ்வாறே ஸ்ரீ ராமானுஜர் மேற்கொண்ட திக்கு விஜயத்தைக் காண்பதன் மூலம் நாமும் இந்த புண்ணிய பூமியை வலம் வருவோம்.


...ஸ்ரீ ராமானுஜர் அழகர் கோயிலில் ஆண்டாளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். பின் நித்ய கைங்கரியங்கள் தொடர்ந்து நடத்திவர ராமானுஜ மடம் ஒன்றை உருவாக்கினார். பிறகு அங்கிருந்து மதுரை சென்று கூடலழகரை வணங்கி வாழ்த்தினார். அப்போது அங்கிருந்த புலவர்களுடன் வாதிட்டு வென்றார். அதன்பின் திருமோகூர், திருதங்கால் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை சேவித்து திருவில்லிபுத்தூர் சென்றடைந்தார். திருவில்லிபுத்தூர் கோயிலுக்குள் புகும்போது ஆண்டாள் நாச்சியார் தன் நேர்த்திக் கடனை திருமாலிருஞ்சோலையில் தன் சார்பாக நிறைவேற்றியதால் தாமே நேரில் வந்து ஸ்ரீராமானுஜரைவாரும் என் அண்ணனேஎன்று தன் மூத்த சகோதரராக விளித்ததாக கூறப்படுகிறது. அங்கு ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் தாய்வீட்டு சீதனம் சமர்ப்பித்து வாழ்த்தி வணங்கினார்.

பிறகு அங்கிருந்து நவதிருப்பதியில் உள்ள பெருமாள்களை மங்களாசாசனம் செய்து திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) சென்று நம்மாழ்வார் பாதம் பணிந்தார். நம்மாழ்வாரின் திருவடிகள் (சடாரி) மதுரகவிகள் என்று பெயர் இருந்தது. ஸ்ரீ ராமானுஜர் நம்மாழ்வாரை பணிந்து வேண்டிக் கொண்டதற்கு இணங்க, அதன் பிறகு ஆழ்வார் திருநகரியில் சடாரிக்கு ராமானுஜன் என்று பெயர் வழங்கலாயிற்று.

அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்கு அவரை எதிர்த்து வாதிட்டவர்களை வென்று யதிராஜ மண்டபம் ஒன்றை நினைவாக எழுப்பினார். சேர மன்னன் ஸ்ரீராமானுஜரை பணிந்தான். அவனைக் கொண்டு திருவனந்தபுரம் உள்ளிட்ட திருப்பதிகளின் வழிபாட்டை சிறப்பாக நடத்தி வர ஆவண செய்தார்.

பின்பு குஜராத்திலிருந்து காஷ்மீரம் சென்றார். அங்கு புகழ்மிக்க சாரதா பீடத்தில் கூடியிருந்த வேறு தத்துவவாதிகளுடன் வாதிட்டு வென்றார். பிறகு அங்கு இருந்த போதாயனரின் பிரம்ம சூத்திரத்திற்கான விளக்கவுரை என்ற நூலை ஒருமுறை படித்துப் பார்த்தார். படித்த அளவிலேயே அதை மனதில் பதித்துக் கொண்டார். தான் எழுதிய வேதாந்தசாரம் என்ற நூலை அரசரிடம் கொடுக்க, அதை அரசர் சாரதாதேவி கையில் வைத்தார். பின்பு சன்னதியை சாத்திவிட்டார். மறுநாள் காலையில் திறந்து பார்க்க சரஸ்வதி தேவி கையிலிருந்த அந்த  நூல் கல்விக் கடவுளின் தலையின் அலங்காரமாக வீற்றிருப்பது கண்டு அரசரும் மற்ற அறிஞர்களும் வியப்படைந்தனர். ஸ்ரீ ராமானுஜரை போற்றிப் புகழ்ந்தனர்.

அங்கிருந்து திருமந்திரம் அவதரித்த பத்ரிகாச்ரமத்துக்கு சென்றார். அங்குள்ள பெருமாளை வணங்கி வாழ்த்தி, பக்தர்களுக்கு விசிஷ்டாத்வைத நல்வழியை போதித்தார். அதைத் தொடர்ந்து செயல்படுத்த ஒரு மடத்தை நிறுவினார்.

பத்ரிகாச்ரமத்திலிருந்து  தற்போது நேபாளத்திலுள்ள முக்திநாத் எனப்படும் சாளக்ராமத்தை சென்றடைந்தார். சாளக்ராமங்களை உருவாக்கும் கண்டகி நதியில் புனித நீராடி அங்குள்ள பெருமாளை வழிபட்டார். முக்திநாத்திலிருந்து புறப்பட்டு  ராமபிரான் அவதரித்த அயோத்திக்கு வந்தார். ஸ்ரீராமபிரானை சேவித்து அங்கிருந்து காசி நகர் புகுந்தார். அங்கு வைணவ தரிசனத்தை நிறுவி, பின் நைமிசாரண்யம், தண்டகாரண்யம், சித்ரகூடம், சிருங்கிபேரபுரம் பெருமாள்களை வணங்கி ஒடியாவிலுள்ள கட்டாக் நகர் வந்தடைந்தார்.

ஸ்ரீராமானுஜர் தன் கோஷ்டியுடன் அங்கிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீகூர்மத்தை வந்தடைந்தார். அங்கு நீண்ட காலம் தங்கி கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு தென்னாட்டு கலைப்பண்பாட்டை வணங்கும்படி செய்தார்.

பிறகு அங்கிருந்து சிம்மாசலம், சீகாகுளம், வாங்கல் (வாரங்கல்) பகுதிகளில் வைணவ சித்தாந்தப் பிரச்சாரம் செய்து அகோபிலம் சென்று நவநரசிம்மர்களை வணங்கி வாழ்த்தினார்.

அகோபிலத்திலிருந்து திருமலை சென்று திருவேங்கட நாதனை சேவித்தார். சிலர் திருவுருவத்தை சிவன் என வாதிட, ஸ்ரீராமானுஜர் சமரசத்தை பெருமாளின் முடிவிற்கே விட்டுவிட தீர்மானித்து, அனைவர் முன்பும் சிவனது அடையாளமான திரிசூலத்தையும் உடுக்கையையும் பெருமாளின் சிறப்பு அம்சமான சங்கு சக்கரத்தையும் மூலவர் முன்பு வைத்து கருவறையை மூடிவிட்டார். மறுநாள் காலையில் அனைவரும் கூடி கதவைத் திறக்க, பெருமாள் சங்கு சக்கரதாரியாக காட்சியளித்தார். ஸ்ரீராமானுஜர் பெருமாளை வணங்க அனைவரும் உடையவர் அடி பணிந்தனர்.

அங்கிருந்து திருவள்ளூர் வழியாக திருவேங்கடநாதனுக்கு நேரானநின்றவூர் நித்திலத் தொத்துஎனப்படும் திருநின்றவூர் பத்தராவி பெருமாளை வணங்கி காஞ்சிபுரம் சென்றார்.

பிறகு காஞ்சி மாநகரில் எழுந்தருளியுள்ள பெருமாள்களை வணங்கி,  மாமல்லபுரம், திருவல்லிக்கேணி, திருமயிலை வழியாக மதுராந்தகம், திருவயிந்திரபுரம் சென்று சீர்காழி வந்தடைந்தார். கடலோரமாக பயணித்து ராமேஸ்வரம் வந்து திருப்புல்லாணி சென்று சேர்ந்தார். சேது நீராடி பின்பு தர்ப்பை புல்லின் மீது சயனித்து உள்ள ஸ்ரீராமபிரானை சேவித்தார்.

25 ஆண்டுகள் திக்குவிஜயம் செய்த ஸ்ரீராமானுஜர்,  திருப்புல்லாணி சென்று  சேது தரிசனம் செய்து  ‘ஆசேது ஹிமாச்சலம்என்ற தேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வாக்கியத்திற்கு வலு சேர்த்து திருவரங்கம் சென்று திருவரங்கன் திருமுற்றம் சென்று சேர்ந்தார். 


நன்றி:
விஜயபாரதம் - ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்பிதழ்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக