புதன், 17 ஆகஸ்ட், 2016

ஸ்ரீ ராமானுஜர் வழியில் தொண்டு செய்வோம்!-சுவாமி சைதன்யானந்தர்


இறைவனின் அவதாரமாகவே கருதி பக்தர்களால் வழிபடப்படும் ஸ்ரீ ராமானுஜர் நாம் எவ்வாறு வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியுள்ளார். பொதுவாக நாம் பெரியோர்களைப் பூஜித்து வழிபடுவதில் மட்டும் திருப்தியடைந்து விடுகிறோம். ஆனால் அவர்கள் கூறிய, வாழ்ந்து காட்டிய வழியை மறந்து விடுகிறோம். உண்மையில் நாம் பெரியோர்களுக்கு, ஏன் இறைவனுக்குச் செய்யும் உண்மையான பூஜை அவர் காட்டும் வழியில் வாழ்வதேயாகும்.


ஸ்ரீ ராமர் திரேதாயுகத்தில் அவதரித்து வேடனான குகனையும் வானரனான சுக்ரீவனையும் அரக்க குல விபூஷணனையும் வேடுவச்சி சபரியையும் குணத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அருள்பாலித்தார்.

ஹிந்து மதத்தில் எங்குமே பிறப்பால் ஜாதி எனக் கூறப்படவில்லை. ஸ்ரீமத் பகவத்கீதையில் கண்ண பரமாத்மா, ‘நான்கு வர்ணத்தை, நானே குணத்தினுடையவும் கர்மத்தினுடையவும் அடிப்படையில் படைத்தேன்என்கிறார்.

ஆனால் யார் செய்த சூழ்ச்சியோ ஹிந்து மதத்தில் பிறப்பால் ஜாதி எனும் நிலை தோன்றியது மட்டுமல்ல, ஜாதியில் உயர்வு தாழ்வு சொல்லி தீண்டாமை எனும் கொடிய நோயும் தொற்றிக்கொண்டது. எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் உயர்வடையுமோ அப்போதெல்லாம் நான் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவேன் என கண்ண பரமாத்மா கூறிய கூற்றிற்கேற்ப ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார்.

இவர் அந்தண குலத்தில் பிறந்தார். யார் அந்தணர் என்பதற்கு இலக்கணம் வகுத்தார். வேளாளர் குலத்தில் உதித்ததிருக்கச்சி நம்பிஎன்ற பெரியவரைச் சந்தித்த ஸ்ரீராமானுஜர் அவர் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து தொழுது தன்னை அவர்தம் சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஆனால் திருக்கச்சி நம்பியோ, நான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன். தாங்களோ அந்தணர்; சாஸ்திரம் அதிகம் கற்றவர். தாங்கள் தான் என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். ஸ்ரீராமானுஜர், பல நூல்களைப் படிப்பதனால் ஒருவன் பண்டிதனாக முடியாது. ஆனால் தாங்கள் பண்புடன் வாழும் பண்டிதர்" எனக் கூறி அவர் தம் சீடரானார்.

இங்கேஅந்தணர் என்போர் அறவோர்என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறார் ஸ்ரீராமானுஜர்.

நந்தனைப்போல் ஒரு பார்ப்பான்
இந்தப் பாரினில் இல்லை. குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் உணர்வு
இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்...’,
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..’

-என்று கூறும் தெய்வீகக் கவி பாரதியின் வாக்குகள் இங்கு நினைவு கூரத்தக்கது.

ஸ்ரீராமானுஜரிடம் மேலும் ஓர் அதிசய பழக்கம் இருந்தது. தாழ்ந்த குலத்தில் பிறந்த உறங்காவில்லியின் பெருமையை தனது சீடர்களுக்கு உணர வைத்தார்.  பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாக மாட்டான். குணத்தால் தான் உயர்ந்தவனாவான் என்பதை புரிய வைத்தார்.

அனைவரும் இறைவடிவம்எனக் கூறும் ஹிந்து மதத்தில் பிறந்த எவரும் எவரையும் தீண்டத்தகாதவர் எனக் கூறமாட்டார்; கூறவும் கூடாது.

அடுத்து ஸ்ரீராமானுஜர் நமக்குத் தரும் செய்திபரோபகாரம் புண்ணியம்’. அதாவது பிறருக்கு உதவுவதே புண்ணியம் என்பதாகும். ஸ்ரீராமானுஜரின் குரு திருக்கோஷ்டியூர் நம்பி, நாராயண மந்திரத்தை உபதேசித்து, இம்மந்திரத்தைக் கேட்பவர்கள் வைகுந்தப் பதவியடைவர்; இதை யாருக்கும் கூறாதே; இது பரம ரகசியம்; இதை நீ பிறருக்கு உபதேசித்தால் நரகையடைவாய்" என்றார்.

ஆனால், ஸ்ரீ ராமானுஜரோ, திருக்கோஷ்டியூர் ஆலய கோபுரத்தில் ஏறினார்; அனைவரையும் கூவி அழைத்தார். எட்டெழுத்து மந்திரத்தை உரக்க ஓதி, அனைவரும் இம்மந்திரத்தை உச்சரியுங்கள். அனைவரும் வைகுந்தப் பதவியடைவீர்கள்" என்றார்.

இங்கே ஸ்ரீராமானுஜரின் எண்ணம் குருவாக்கை மீறுவதல்ல. தான் ஒருவன் நரகை அடைந்தாலும் இம்மந்திரத்தை உச்சரிக்கும் ஆயிரக்கணக்கானோர் வைகுந்தப் பதவியடைவார்கள் என்பதுதான். ‘பிறரின் நன்மையைக் குறித்து யார் சிந்திக்கிறார்களோ அவர்களே சிறந்தோர். பிறருக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள்; மற்ற அனைவரும் நடைபிணத்துக்குச் சமம்என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

நாம் முழுமையாக பிறருக்காக வாழ, துறவியாகவோ, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்.) முழுநேர ஊழியராகவோ மாறித் தொண்டாற்றலாம்.

மக்கள் சேவை மகேசன் பூஜைஎன்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பொதுவாக  நாமெல்லோரும் சுவாமி விவேகானந்தர் போன்றத் துறவிகள் ஏராளம் வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் நாமோ, நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ முழுமையாக சமயத்திற்காக, நாட்டிற்காகத் தொண்டாற்றச் செல்வதை ஏனோ விரும்புவதில்லை.

இது நமது மதத்திற்கு ஒரு குறைபாடுதான். இந்நிலைமாறி நமது சமயத்திற்காக, நாட்டுக்காகத் தொண்டாற்ற முழுநேர ஊழியராக ஆயிரமாயிரமாக இருபாலரும் முன்வர வேண்டும்.

தியாகேந ஏகே அம்ருதத்வமானசு - தியாகத்தாலன்றி தெய்வநிலை அடைய இயலாது. முழுநேரத் தொண்டாற்ற இயலாதவர்கள் தம் வாழ்வின் சில வருடங்கள் தொண்டாற்றலாம். அதுவும் இயலாதவர்கள், தினசரி சில மணிநேரம் தொண்டாற்றலாம்.  நமது குடும்பத்தினர், குழந்தைகளோடு நம் கிராமத்தில் உள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். பணத்தாலோ, பொருளாலோ செய்ய இயலாவிடில் ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்றுவது, ஆன்மிகத்தை, நமது பண்பாட்டை, நமது கலாசாரப் பெருமையை எடுத்துக் கூறுவது கூட பெரும் தொண்டுதான்.

பிறருக்காகப் பிரார்த்திப்பது கூட ஒரு தொண்டுதான். ஹிந்துவிற்காக, நாட்டிற்காகப் பாடுபடும் இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நமது குழந்தைகளை, குடும்பத்தினரை அழைத்துச் செல்வதும் தொண்டுதான். எனவே அனைவரும் தொண்டு செய்வோமாக.

சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் குறிக்கோள் வாக்கியமாகஆத்மனோ மோட்சார்த்தம் ஜகத் ஹிதாயசஎன்பதனைத் தேர்ந்தெடுத்தார். உலகிற்கு (மக்களுக்கு) தொண்டு செய்வதன் மூலம் இறைநிலை அடைதல் என்பதே இதன் பொருள். நாமும் இவ்வழியில் முயற்சிப்போமாக!

ஹிந்து அனைவரும் சோதரர்கள்!
ஹிந்துவில் எவரும் தாழ்ந்தவரில்லை!
ஹிந்துவைக் காப்பது நம் விரதம்!
சரிசமானமே நமது மந்திரம்!


குறிப்பு:
பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர். 
இக்கட்டுரை, விஜயபாரதம் வார இதழின் ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா மலரில் இடம் பெற்றதாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக