செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

எம்பெருமானார் ராமானுஜர்-எஸ்.ஆர்.எஸ்.ரங்கராஜன்


வைணவ சமயத்தின் தத்துவப் பொருண்மையை உட்கொண்டனவாக ஆழ்வார்களின் பாசுரங்கள் விளங்குகின்றன. ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஏற்றம் கொடுத்தவர்கள், ஆச்சார்யர்கள் என்றழைக்கப்பெறும் ஆழ்வார் வழிக்குரவர்கள் ஆவர். இவர்கள் உரைகளே அல்லாமல், பல இலக்கியங்களையும் அருளியுள்ளனர். இவற்றால் வைணவம் சிறப்புற்றது.

ராமானுஜர் 

வைணவ சமயத்தை ஓர் இயக்கமாக வளர்த்தவர் ராமானுஜர். எம்பெருமான் முதலாக, மணவாள மாமுனிகள் ஈறாக உள்ள, ஆழ்வார் வழிக்குரவர் வரிசையில் ராமானுஜர் நடுநாயகமாக விளங்குகிறார்

ஆதிசேடனின் அவதாரமெனக் கருதப்படும் ராமானுஜர், ஸ்ரீபெரும்புத்தூரில் கி.பி. 1017ல் அவதரித்தார். பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி ஆகியோரிடம் வைணவத் தத்துவங்களை உணர்ந்தார். ஆளவந்தாரைப் பின்பற்றி தம் படைப்புகளை ஆக்கினார்.

சமத்துவம் கண்ட ராமானுஜர்

மனிதர்கள், சக மனிதர்களிடம் அன்பு கொள்ளும் பண்பே மனித நேயம். ஒருவருக்கு ஒருவர் இவ்வன்பைப் பகிர்ந்து கொள்ளப் பெருந்தடையாய் இருப்பன சாதி, மத, இன வேறுபாடுகளே. இவை நீக்கப்படின், அன்பு மலர்ந்து, சமத்துவம் ஏற்படும். அதன் வழி நடந்து, வாழ்ந்து காட்டியவர் ராமானுஜர். அவரது வாழ்க்கை மூலமே நாம் இதை அறியலாம்.

ராமானுஜர், நாள்தோறும்  நீராடச் செல்லும் போது தன் உறவினரான முதலியாண்டான் என்பாரின் தோளின் மீது கை போட்டுச் செல்வார்.

நீராடிவிட்டுத் திரும்பி வரும்போது வில்லிதாசன் எனும் மல்லர் குலத்தைச் சேர்ந்த சீடனின் தோள் மேல் கைகளைப் போட்டுக்கொண்டு வருவது வழக்கம். ‘நீராடிய பின் கீழ் சாதிக்காரனைத் தொடுதல் தக்கதா?’ என்று சிலர் கேட்டதற்கு ராமானுஜர், நான் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவன்என்ற கர்வம் இருப்பவனின் உள்ளத்தில் இறைவன் குடியிருக்க மாட்டான். முக்குறும்பு நீங்கியவர்களிடமே எம்பெருமான் குடியிருப்பான். இவ்வில்லிதாசனைத் தொடுவதால்தான் நான் சுத்தமடைகிறேனே தவிர நீராடுவதால் அல்ல!" என்று விளக்கினார்.

மைசூரிலிருந்தபோது ராமானுஜர், பஞ்சமர்கள்  கண்டு எடுத்த சிலையைக் கண்டு மகிழ்ந்து அதற்குத்திருநாராயணப் பெருமாள்எனப் பெயரிட்டார். உற்சவர் சிலையானசெல்லப் பிள்ளையை டெல்லி சுல்தானிடமிருந்து தேடிப் பிடித்துக் கொணர்ந்தார். திருநாராயணபுரத்தில் திருட வந்த திருடர்களை விரட்டி, கோயில் கட்ட உதவிய அரிஜனங்களைக் கோயிலுக்குள் வரலாம் என ஆலயப் பிரவேசம் செய்து வைத்தவர் ராமானுஜரே. அவர்கள் திருமுறை படிக்கவும், பஞ்ச சம்ஸ்காரம் எனும் ஐந்தங்கம் பெறவும் வழிவகை செய்தவர் ராமானுஜரே. திருக்குலத்தார் எனப் பெயரிட்டு, அவ்வின மக்களுக்கு ஏற்றமளித்து, குலத் தாழ்ச்சி என்பதில்லாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முனைந்தார் ராமானுஜர்.

சமய நல்லிணக்க முன்னோடி

மைசூர் மேல்கோட்டை உற்சவராகிய செல்லப்பிள்ளையிடம் தம் மனதைப் பறிகொடுத்த டில்லி சுல்தானின் மகள்துலுக்க நாச்சியாருக்குப்பெருமாள் கோயில்களில் இடமளித்துச் சமய நல்லிணக்கத்துக்கு வழிகோலினார், ராமானுஜர். ஸ்ரீமுஷ்ணம், திருக்கண்ணபுரம் போன்ற திவ்ய தேசங்களில் நடைபெறும் திருவிழாக்களில், இஸ்லாமியர்கள் பங்கு கொள்வதும் ஈண்டு ராமானுஜர் காட்டிய சமய நல்லிணக்கத்தினால்தான் என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கதாகும்.

வைணவ சமயம் பரவத் தொண்டாற்றியவர்

திருக்கோயில்களில் வடமொழி கோலோச்சி இருந்த காலத்தில், தமிழ்மறையான திவ்யப் பிரபந்தத்தைப் பாடுவதைக் கட்டாயமாக்கினார் ராமானுஜர். இதனால், பல இன மக்களும் பெரும் திரளாக வைணவத்தைத் தழுவினர். எனவே, வைணவ சமயம் நாடெங்கும் பரவச் செய்த பெருமை ராமானுஜரையே சாரும். இவ்வாறு பக்தி இயக்கத்தைச் சாதிகளில்லாத சமதர்ம இயக்கமாக மாற்றினர் ராமானுஜர்.

அனைவருக்காகவும் நரகம் செல்லத் துணிந்தவர்

திருக்கோட்டியூர் நம்பியை  குருவாகக் கொண்டு திருஎட்டெழுத்தின் உட்பொருளை உபதேசமாகப் பெற வேண்டும் என்பது ராமானுஜரின் உள்ளக் கிடக்கையாக இருந்தது.

நம்பியைப் பதினெட்டு முறை சந்தித்தும் பலனில்லை. கோயிலில் சென்று, ஒரு மாதம் வரை உண்ணாவிரதமிருந்து,  பிறகு வா என்று திருப்பி அனுப்பினார் நம்பி. மனம் சலிக்காத ராமானுஜர் மறுபடியும் திருக்கோட்டியூர் நம்பியிடம் வந்தார். மகிழ்ந்த நம்பி, மூல மந்திரத்தையும் அதன் பொருளையும் உபதேசித்தார். இதன் பொருள் அறிந்தவர்கள் மரணம் அடையும்போது, பரமபதம் செல்வர் என்பது வைணவர்களின் திடமான நம்பிக்கையாகும். குரு, இம்மந்திரத்தின் உட்பொருளை வேறு யாருக்கும் சொல்லக்கூடாது" எனக் கூற, அவ்வாறே உறுதி அளித்தார் ராமானுஜர்.

ஆனால், குருவின் சொல்லை மீறிக் கோபுரம் மீது ஏறி  நின்று, ஊர் மக்களிடம் மந்திரப் பொருளை எடுத்துக் கூறினார். ‘உலகங்களுக்கெல்லாம் தலைவனான ஸ்ரீமத் நாராயணனே முழு முதற் கடவுள். உயிர்கள் எல்லாம் அவனது உடைமைகள். அவனுக்கும் அவனது அடியவர்களுக்கும் தொண்டு செய்வதே வைகுந்தம் செல்லும் வழி!’ என்ற மந்திரப் பொருளின் மையக் கருத்தை எடுத்துக் கூறினார். இதனால் குரு கோபமடைந்து, சத்தியத்தை மீறிய நீ நரகம் புகுவாய்!" என்று கூறினார்.

 நான் ஒருவன் நரகம் சென்றாலும் ஆயிரக்கணக்கான மக்கள் வைகுந்தம் செல்வதே எனக்கு மகிழ்ச்சி!" என்று ராமானுஜர் கூறினார். பிறகு நம்பியே மகிழ்ந்து அவரை, எம்பெருமான் கருணையையும் விஞ்சிய எம்பெருமானாரோ’‘ என்று பாராட்டினார். மக்கள் வாழ்வில் ஈடேற்றம் பெறத் தான் நரகம் செல்லவும் துணிந்த ராமானுஜரை, சாதி சமய பேதமற்ற சமத்துவத்தைப் போற்றிய ராமானுஜரை, மத நல்லிணக்கம் கொண்டு விளங்கிய ராமானுஜரை எங்கள் கதியே! ராமானுஜமுனியே!" எனப்போற்றி நாளும் வணங்கித் துதிப்போமாக!    நன்றி: விஜயபாரதம் - ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா சிறப்பிதழ்.
.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக