சனி, 13 ஆகஸ்ட், 2016

ராமானுஜர் வழியில்...

-பத்மன்விவாதிக்கலாம், வாருங்கள்...

நமது தளத்தில் அண்மையில் வெளியான  நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டுகோல் ஆகியுள்ளது. சகோதரர் திரு. சுஜாதா தேசிகன் எழுதிய ‘நான் இராமானுசன்’ நூலின் மதிப்புரைக் கட்டுரை, அத்வைதிகளையும் சைவர்களையும் தாழ்த்துவதாக உள்ளதாக, அன்பர்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.
 நமது தளம், ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி, அவர் புகழ் பாடுவதன்மூலமாக, சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இத்தளத்தின் நாயகர் ஸ்ரீ ராமானுஜரே. அவரது வாழ்பனுபவங்களும், போதனைகளுமே நமது தளத்தின் ஆதாரம். ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சூழலில் அவர் சைவத்தையும் அத்வைதத்தையும் விமர்சனப்பூர்வமாக அணுகி இருக்கிறார். அவை தற்போதைய கட்டுரைகளில் பதிவு பெறுவதைத் தவிர்க்க முடியாது.
எனினும், தற்போதைய சமுதாய ஒற்றுமைப் பணிகளுக்கு குந்தகம் இல்லாமல் ராமானுஜரின் போதனைகளையும் வாழ்வனுபவங்களையும் பயன்படுத்த வேண்டிய காலச்சூழலில் நாம் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது.
அந்த வகையில், பத்திரிகையாளர் திரு. பத்மனின் விமர்சனக் கட்டுரை - கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் இங்கு வெளியிடப்படுகிறது. 
திரு. பத்மன் அவர்களின் இயற்பெயர் நா.அனந்தபத்மநாபன்; தமிழ் இதழியல் உலகில் பலரும் அறிந்த மூத்த பத்திரிகையாளர். இவரது ‘மூன்றாவது கண்’ என்ற இதழியல் அறிமுக நூல், தமிழக அரசின் பரிசு பெற்றது. மேலும் பல நூல்களை பத்மன் எழுதி இருக்கிறார். தினமணி இணையதளத்தில்  புதன்கிழமை தோறும் இவர் எழுதிவரும் தத்துவ தரிசனம் தொடர் பாரத ஞான மரபின் அனைத்து முகங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. 
ஒரு நல்ல விவாதத்தை இக்கட்டுரை துவக்கும் என எதிர்பார்க்கிறோம். 

-கவிஞர் குழலேந்தி

(தள நிர்வாகி)
சனாதன ஹிந்து தர்மத்தின் அங்கங்களாகிய ஸ்ரீவைஷ்ணவ மதத்தையும், விசிஷ்டாத்வைத வேதாந்தத்தையும் வளர்த்த ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு தற்போது வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் ஹிந்து மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகத்தைத் தர வேண்டும். ஆனால் ராமானுஜரையும் அவரது கருத்துகளையும் தொண்டுகளையும் போற்றுகின்ற கொண்டாட்டத்தின் ஊடே,  மாற்று சம்பிரதாயங்களான அத்வைதத்தையும் சைவத்தையும் தூற்றுகின்ற தவறும் அரங்கேறி வருகிறது. பொதுவான ஹிந்து சமுதாய அமைப்புகளின் களங்களும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஹிந்துக்களாகிய நமக்கு இப்போதைய தேவை  ‘ஹிந்து’ என்ற பொது அடையாளம்தான். அதற்கு எதிரான எதுவும் எதிர்க்கத் தகுந்தவையே. அந்த வகையில்  ‘ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுக் கொண்டாட்டம்’ என்ற பெயரில், அத்வைத, சைவ சம்பிரதாயங்கள் மீதான தூஷணைகள் நடைபெறுவதற்கு எதிராக இந்தக் கருத்துரையைப் பதிவிடுகிறேன். அதேநேரத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துவிட்டபிறகு, அதற்கான மறுப்புரையும் அவ்வாறே கடுமையானதாக இருக்கும் என்பதை மறைப்பதற்கில்லை.

ராமானுஜர் மிகப் பெரிய மகான். சந்தேகமில்லை. அவ்வாறெனில் அவருக்கு எதிராக வாதாடலாமா? செய்யலாம். இதுவும் ராமானுஜர் வழிதான். தனது குரு யாதவபிரகாசரின் கருத்துகளில் ராமானுஜருக்கு உடன்பாடில்லை. குருவோடு சீடர் முரண்பட்டதால்தான் விசிஷ்டாத்வைதம் விரிந்தது. மேலும் தனக்கு முந்தைய ஆசார்யர்களை  அதிலும் குறிப்பாக சங்கராசார்யரை கடுமையாக விமர்சிப்பதை ராமானுஜர் விட்டுவைக்கவில்லை. ஆகையால் ராமானுஜர் வழியைப் பின்பற்றி, அவரது கருத்துகளோடும் அவரது பெயரால் செய்யப்படும் பிரசாரங்களோடும் இனி நான் முரண்படுகிறேன், விமர்சிக்கிறேன்.

***

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை, ஒதுக்கப்பட்டவர்களை ‘திருக்குலத்தார்’ என்று ராமானுஜர் அரவணைத்தார். அது போற்றுதலுக்குரிய செயல். ஆனால், அத்வைதிகளும், சைவர்களும் இதற்கு எதிராக இருந்ததைப் போன்ற மாயத் தோற்றத்தை வைஷ்ணவ விசிஷ்டாத்வைதவாதிகள் தற்போது ஏற்படுத்துகின்றனர். நந்தனார், நீலகண்ட யாழ்ப்பாணர் போன்ற சைவ நாயன்மார்கள் எந்தக் குலத்தினர்? அந்தணராகிய திருஞான சம்பந்தரால் அப்பரே என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் பிராமணர் அல்லாத திருநாவுக்கரசரன்றோ? 63 நாயன்மார்களில் அனைத்துச் சாதியினரும் அல்லவோ அடங்கியுள்ளனர்? கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வைதீக சைவரான பசவண்ணர்தானே 16 வயதில் பூணூலைக் கழற்றி எறிந்து, சாதி பேதமற்ற வீர சைவ மரபை பின்னாளில் நிறுவினார்? அத்வைதிகளுக்கு அனைத்துமே பேதமற்ற அந்த ஆண்டவன் எனும்போது எங்கிருந்து சாதி பேதம் புகும்? அண்மைக்காலத்தில் ஆலயப் பிரவேசம் என்ற புரட்சியை செய்து காட்டிய மதுரை வைத்தியநாதய்யர் அத்வைதிதானே? அதற்கு வாய்ப்பளித்த பெருமையும் சைவக் கோவிலான மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் ஆலயமன்றோ? அத்வைத மடங்களில் இல்லாவிட்டாலும் சைவ மடங்களில் பிராமணர் அல்லாதோர் ஆதீனங்களாக (மடத்தின் தலைவராக) உள்ளனர். பல சிவாலயங்கள் பிராமணர் அல்லாதோரான ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் எந்த விசிஷ்டாத்வைத வைஷ்ணவ ஜீயர் மடத்திலாவது பிராமணர் அல்லாதோர் ஜீயராக (மடத்தின் தலைவராக) இருக்கிறாரா?

ராமானுஜரின் விசிஷ்டாத்வைத வைஷ்ணவம்தான் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறது, சைவமும் அத்வைதமும் அவ்வாறு தருவதில்லை என்பது மற்றொரு விமர்சனம். ராமானுஜரின் முயற்சியால் பல வைணவ ஆலயங்களில் ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படும் பாரம்பரியம் தொடங்கியது உண்மைதான். அதேநேரத்தில் தனியொருவர் முயற்சியின்றி தாமாகவே சிவாலயங்களில் தேவாரமும், திருவாசகமும் பாடப்படுகின்றனவே? கடல் கடந்த பாலித்தீவு (இந்தோனேசியா), தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தேவார, திருவாசகத் தமிழ் பாசுரங்களைத்தானே சைவம் கொண்டுபோய் சேர்ப்பித்தது. ராமானுஜரின் காலத்துக்கு மிகவும் முந்தையவரான வைதீக பிராமண குலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தர், தமிழில்தான் தேவாரம் பாடினார் என்பதோடு தமிழ் ஞானசம்பந்தன் என்று அழுத்தம்திருத்தமாக பல பாடல்களில் முத்திரை போட்டிருக்கிறாரே? தமிழ் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருமந்திரம் படைத்த திருமூலர் தத்துவத்தால் அத்வைதி அல்லவா?

அரசனே அனைத்து அதிகாரமும் படைத்தவன் என்று கூறி சோழப் பேரரசை நிறுவுவதற்கும் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் அத்வைதமும், சைவ மதமும் பயன்பட்டதாக, கம்யூனிஸ்ட்டுகளிடம் கடன் வாங்கிய வர்க்கப் பார்வையோடு, சில வைஷ்ணவர்கள் கூறுகின்றனர். இதை தங்களது நூல்களிலும் எழுதுகின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம் ‘நான் ராமானுசன்’ நூல்.

அத்வைதிகளுக்கு அரசனும் ஆண்டியும் அனைவரும் ஒன்றே. அனைத்தும் அந்த பிரும்மமே. ஆனால், “பிரும்மமாகிய பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் இந்த உலகமும் ஒருவகையில் ஒன்றுதான் என்ற போதிலும் பரமாத்மா அவற்றிலிருந்து மேம்பட்ட தனிச் சிறப்பு உடையவர், ஜீவன்களும், இந்த உலகமும் பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளவை” என்கிறது விசிஷ்டாத்வைதம். அதன்படி, ‘அரசன்தான் மேலானவன், குடிமக்களும் மக்கள் வாழும் நிலமும் அரசனுக்குக் கட்டுப்பட்டவை’ என்று அரசனின் மேலாதிக்கத்தை நிறுவ விசிஷ்டாத்வைதமன்றோ பொருத்தமான தத்துவமாக உள்ளது?


‘நான் இராமானுசன்’ நூல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள விசிஷ்டாத்வைதியான சுஜாதா தேசிகன், ராமானுஜரின் பெருமை குறித்து அமுதனார் எழுதிய ராமானுஜர் திருநூற்றந்தாதிச் செய்யுள் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். அதில் ‘தாழ்சடையோன் சொல் கற்ற சோம்பரும்’ என்று அமுதனார் குறிப்பிட்டுள்ளார். தாழ்ந்தவனான சடையன் (சடை முடி கொண்டவர்) என்று சிவபெருமான் இழித்துக் கூறப்பட்டிருக்கிறார். தலையில் சடை தரித்து, இடையில் தோலாடை உடுத்தியதால் சிவன் தாழ்ந்தவனா... உயர்வும் தாழ்வும் வெளித்தோற்றத்தில் இருக்கிறதா, பண்பும், குணங்களுமாகிய உள்தோற்றத்தில் இருக்கிறதா... உலகம் உய்வதற்காக, ஆலகால விஷத்தைப் பருகிய தியாகி தாழ்ந்தவனா... இதுபோன்ற எண்ணங்கள்தான் நமது நன்மைக்காக அசுத்தங்களை அள்ளி நீக்குபவனை தாழ்ந்தவன் என்று ஒதுக்கிவைக்கக் காரணமாக அமைந்தன.

இவ்வாறான தாழ்ந்த சடையோனின் போதனைகளைக் கேட்ட தாமஸ குணம் (சோம்பல்) குணம் கொண்ட சைவர்கள் என்று அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எது தாமஸ குணம்? சதா நடனமாடிக்கொண்டே அதாவது இயங்கிக்கொண்டே இருப்பது தாமஸ குணமா, அல்லது ஓய்வாக படுத்துக்கொண்டே இருப்பது தாமஸ குணமா? சத்வ எனப்படும் அமைதி குணத்தின் அடையாளம் வெண்மை, ரஜோ எனப்படும் துடிப்பான (செயல்பாடு) குணத்தின் அடையாளம் சிவப்பு, தமோ எனப்படும் மயக்க குணத்தின் அடையாளம் கருப்பு. பிரும்மா வெள்ளையாகவும், சிவன் சிவந்தவராகவும், விஷ்ணு கருத்தவராகவும் சித்திரிக்கப்படுகின்றனர். அந்த வகையில் யார் தாமஸ குணம் கொண்டவர்? மேலும் தமிழில் ‘மால்’  என்றும்  ‘மாயோன்’ என்றும் விஷ்ணுவுக்குப் பெயர் உண்டு. கருமை என்ற பொருள் தரும் மையில் இருந்து தோன்றியது இந்த மாலும், மாயமும். உடல்கள், உலகம் ஆகிய மயக்கத்தைத் தருபவர் விஷ்ணு. அதனால்தான் கருநிறம். அவற்றுக்குள் உயிர்ப்பாக இருப்பவர் சீவனாகிய சிவன். அதனால்தான் அவருக்கு செந்நிறம். ‘தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்கிறார் திருமூலர்.

அனைத்தும் பிரும்மமே, அவித்தை எனப்படும் அஞ்ஞானம்தான் நாம் பிரும்மம் என்பதை அறியவிடாமல் தடுக்கிறது என்று அத்வைதம்- ஐக்கியவாதம் பேசுவதையும் விசிஷ்டாத்வைதிகள் விமர்சிக்கின்றனர். அப்படியானால் பிரும்மத்தைப் போலவே அஞ்ஞானத்துக்கும் இருப்பு இருக்கிறது என்று அத்வைதம் கூறுவதாக கிண்டலடிக்கிறார்கள்.  ‘பிரக்ஞானம் பிரும்மம்’ என்பது உபநிஷத மகாவாக்கியம். அதாவது அறிவே ஆண்டவன் என்பது இதன் பொருள். இருட்டு என்பது ஒளியில் இருந்து வேறுபட்ட ஒன்றல்ல, ஒளியின் குறைவு. அதேபோல் அஞ்ஞானம் என்பது என்ன? ஞானத்தின் குறைபாடு. அப்படியானால் இருப்பது ஞானம் மாத்திரம்தானே?

எப்போதும் எது உள்ளதாக இருக்கிறதோ, அதுவே உண்மை. அதுதான் பிரும்மம் என்றார் ஆதிசங்கரர். குறிப்பிட்ட காலம் வரை இருந்து பின்னர் மறைந்துபோவதை நிலையான உண்மை (உள்ளது) என்று கொள்ளத் தகுமா... அதனால்தான் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மறைந்துபோகக் கூடிய வஸ்துக்களையும் ஜீவன்களையும் மாயை, அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு உண்மை போல் தோன்றுகின்ற பொய் என்று கூறினார். இதன் உட்பொருள்- அழியக்கூடிய இந்த உடல் மீதும் உலக விஷயங்கள் மீதும் பற்றுக் கொள்ளாதே, என்றும் நிலையாக உள்ள பரமாத்மாவை பற்றிக்கொள் என்பதுதான்.

சங்கரரின் அத்வைதம், கடவுளை இந்த ரூபத்தில்தான் நீ வணங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கவில்லை. எந்த வடிவிலும் வணங்கலாம், எந்த வடிவமும் அற்ற நிர்குணமாகவும் தியானிக்கலாம் என்பதே அவர் கொள்கை. குறிப்பிட்ட குணங்களோடு பிரும்மத்தைக் குறிப்பிட்டால் எல்லையற்ற அந்த சக்திக்கு வரையறை செய்ததாகிவிடுமே என்பதால் நிர்குணம் என்று கூறினார். அத்வைதத்தைப் பொருத்தவரை சிவனோ, சக்தியோ, பெருமாளோ, விநாயகரோ, முருகனோ, சூரியனோ வேறு எந்த வடிவில் கடவுளை வணங்கினாலும் பேதமில்லை.

ஆனால் விசிஷ்டாத்வைதத்தில் விஷ்ணுவை மட்டுமே வணங்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. அனைத்துமாகிய அந்த ஒற்றைக் கடவுளை பேதப்படுத்திப் பார்ப்பது எந்த வகையில் நியாயம்? நமக்கு இந்த வடிவம் என்றால் அவர்களுக்கு அந்த வடிவம் என்ற சமரச மனப்பான்மை இங்கே அடிபட்டுப் போகிறதே? இந்த வடிவில் மட்டுமே கடவுள் இருக்கிறார் என்று பேதப்படுத்தினால், மற்ற வடிவங்களில் கடவுளை வணங்குவோரையும் நாம் பேதப்படுத்தி, தள்ளிவைப்போமே? இதுதானே மனத்தின் இயல்பு!

கேரளத்தில் இருக்கும் வைணவர்கள் அத்வைத வைணவர்கள். அவர்களிடம் எந்த பேதமுமில்லை. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வணங்கிவிட்டு அருகில் உள்ள மம்மியூர் சிவன் கோவிலில் தரிசனம் செய்தால்தான் வழிபாடு பூர்த்தியாகும் என்பது அங்குள்ள ஐதீகம். ஆனால் இங்கோ, விசிஷ்டாத்வைதிகளுக்கு பெருமாளை மட்டுமே வணங்கினால் போதும். சிவனை வணங்காமல் இருக்கட்டும், அது அவர்கள் விருப்பம். ஆனால் சிவனை கண்டபடி தூஷிப்பது ஏன்?

பஞ்சமக் கோலத்தில் பஞ்சாட்சரன் இருக்கிறான் என்பதனால்தானே? முற்காலத்தில் சிவபெருமானை தட்ச பிரஜாபதி யாகத்தில் அவிர்பாகம் ஏற்க அழைக்காதது ஏன்? அவர் ஒடுக்கப்பட்ட மனிதர்கள், ஒதுக்கப்பட்ட மனிதர்கள், பாவப்பட்ட மனிதர்களாலும் வணங்கப்படுகிறார் என்பதனால்தான். அவரது கோலமே அடித்தட்டு மனிதனின் ரூபத்தில்தானே இருக்கிறது! அவர் ஆதிசங்கரருக்குப் பாடம் புகட்ட சண்டாளனாகவும், அர்ஜுனனுக்கு பாசுபதம் வழங்க வேடனாகவும் மிகவும் எளிய கோலத்தில்தானே காட்சி தந்தார்.

அத்தகைய காரணங்களால் இடைக்காலத்தில் குறிப்பாக குப்தர்கள் ஆட்சியில் பல புராணங்கள் எழுந்த காலத்துக்குப் பிறகு, எளியவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவனைவிட ராஜ கோலத்தில் இருக்கும் விஷ்ணு மீதான வழிபாடும், பக்தியும் அதிகரிக்கத் தொடங்கியது. சிவனை வணங்குவதை தாழ்வான வழிபாடாக சிலர் கருதத் தொடங்கினர். சிவனை வணங்குவது தாமஸ குணம் (அறியாமை, மயக்கம் நிறைந்த குணம்) என்ற விமர்சனம் எழுந்தது. விஷ்ணு மட்டுமே சத்வ குணம் கொண்டவர் என்ற கருத்து எழுந்தது. அப்படிக் கருதியவர்கள்தான் பிற்காலத்தில் விசிஷ்டாத்வைத வைஷ்ணவர்கள் ஆனார்கள். ராமானுஜர் விஷ்ணுவை மட்டுமே வணங்க வேண்டும் என்று விதி செய்ததில், விஷ்ணுவின் மீதான பக்தியோடு சிவன் மீதான வெறுப்பும் காரணமாகத் தெரிகிறது.

தான் வைஷ்ணவராக மாறியதோடு, தனது ஒன்றுவிட்ட சகோதரரும் காளஹஸ்தி சிவன் கோவிலில் பணிவிடை செய்துகொண்டிருந்தவருமான கோவிந்தனையும் கடும் பிரயத்தனப்பட்டு வைஷ்ணவராக மாற்றினார் ராமானுஜர். அவரது விசிஷ்டாத்வைதத்தில் மாற்றுக் கடவுள் வழிபாட்டுக்கு இடமில்லை.

மேலும், ராமனையும், கிருஷ்ணரையும், வாமனரான திரிவிக்ரமனையும் மிகவும் பக்தியோடு வணங்கும் வைஷ்ணவர்கள், விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை வணங்காமல் இருப்பது ஏன்? அவர் சிவனின் சீடர் என்பதும், சிவனைப்போலவே மழு தரித்தவர், விபூதியும் ருத்திராட்சமும் அணிந்தவர் என்பதுதானே? ஒரு வைஷ்ணவருக்காவது பரசுராமன் என்ற பெயர் இருக்கிறதா? அப்படியென்ன காழ்ப்புணர்வு?

ஆக, ராமானுஜர் ஒருவகையில் சாதி சமத்துவத்துக்குப் பாடுபட்டதைப் போலவே, வழிபாட்டு ரீதியிலான மதப் பிரிவினையையும் வளர்த்தார் என்பதே உண்மை.

சங்கரநாராயணர்
ஹிந்து மதத்தின் இன்றைய பெருமையாக எதைக் கூறுகிறோம்? வேற்றுமையில் ஒற்றுமை, வழிபாட்டுச் சுதந்திரம், சமயங்களுக்குள் சமரசம் என்பதைத்தானே?  நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், ராமானுஜரின் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவம் இதற்கெல்லாம் இடமிருக்கிறதா? இவையெல்லாம் கடவுளை அனைத்து வடிவங்களிலும் வணங்கும் அத்வைதியிடமும், சிவனை முக்கியமாக வழிபட்டாலும் பெருமாளையும் தனது தாய்மாமனாகக் கருதி வழிபடுகின்ற சைவனிடமும்தானே இருக்கிறது?

ஆகையால், சாதி பேதங்களைப் போக்குவதில் ராமானுஜரின் வழியை நாம் பின்பற்றுவோம். அதேநேரத்தில் ஹிந்து தர்மத்துக்குள் மதப் பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் உள்ள அவரது வழிமுறையைத் தவிர்ப்போம்.


குறிப்பு:  
இக்க்ட்டுரை குறித்த கருத்துகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறோம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kuzhalendhi@gmail.com


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக