செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

வைணவப் பெரியார் இராமானுசர்- மனசை ப.கீரன்


-என்.டி.என்.பிரபு

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

.

வைணவப் பெரியார் இராமானுசர்

கலைமாமணி டாக்டர் மனசை ப. கீரன்

வெளியீடு: சங்கம் புத்தக வெளியீட்டாளர்,
‘தணிகை’ 135, சாந்தி நகர்,  குரோம்பேட்டை,
சென்னை – 600 044.
பக்கங்கள்: 210;  விலை: ரூ. 16


கலைமாமணி டாக்டர் மனசை ப. கீரன் அவர்கள் சிறார்களுக்காக, ஏன் எல்லோருக்குமான எளிய நடையில் எழுதியிருந்த வைணவப் பெரியார் இராமானுசர் என்ற புத்தகம் நூலகத்தில் தென்பட்டது. இப் புத்தகம் 1988-இல் வெளிவந்துள்ளது.

வேங்கடவரதாச்சாரியார் என்ற தாத்தா, பேத்தி தேவகிக்கு கதை சொல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

பேத்தியும் ஆர்வத்தோடு ராமானுஜரின் வாழ்க்கை சரிதத்தைக் கேட்டு குறிப்பெடுத்துக் கொள்கிறார். அவ்வப்போது தனது சந்தேகத்தையும் கேட்டு தெளிகிறார்.

புத்தகத்தின் தொடக்க அத்தியாயத்தில், நாராயணப் பெருமாள்புரம் என்ற ஓர் அழகிய ஊருக்கு அழைத்துச் செல்லும் மனசை ப.கீரன் அவர்கள், நிறைவு அத்யாயத்தில் பேத்தியின் பள்ளிக்கூட சொற்பொழிவுக் காட்சியை வர்ணிப்பதன் மூலம் நம் மனசை மகிழ்வுற செய்திருக்கிறார்.

நிறைவு அத்தியாயத்திலிருந்து சிறு பகுதி…

அன்று வெள்ளிக்கிழமை. காலை நேரம். தேவகி வெகு உற்சாகமாகக் காணப்பட்டாள். அவள் கையில் இராமானுஜர் பற்றிய குறிப்பு நோட்டு இருந்தது. அதை அடிக்கடி புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேங்கட வரதாச்சாரியார் வெளியே சென்றிருந்தார். அவருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள், தேவகி.

சிறு நேரத்தில் தேவகியின் தாத்தா வந்து சேர்ந்தார். “தாத்தா, இன்றுதான் எங்கள் பள்ளியில் ஆண்டு விழா. மாலை ஆறு மணிக்கு மேல் பேச்சுப் போட்டி…”  என்று சொல்லிக் கொண்டு போனாள், தேவகி.

தாத்தா உற்சாகம் அடைந்தவராய், “மாமேதை இராமானுஜர் என்ற தலைப்பில் தானே பேசப் போகிறாய்? அதுதானே உனக்குக் கொடுத்துள்ள தலைப்பு?” என்றார்.

“பள்ளியில் கொடுத்துள்ள தலைப்பு ‘நான் அறிந்த மாமேதை’ என்பதே. நேற்று எங்கள் தமிழாசிரியை பேச்சுப் போட்டி பற்றி என்னிடம் விசாரித்தார். நான் இராமானுஜர் பற்றிப் பேசப் போகிறேன்  என்று சொன்னேன். உடனே அவர், ‘ஓ! இராமானுஜம் பற்றித்தானே பேசப் போகிறாய்? அவர் சிறந்த விஞ்ஞானியாயிற்றே!...” என்று சொல்லிக் கொண்டே போனார், ‘இல்லை ஆசிரியரே! நான் பேசப்போவது விஞ்ஞானி இராமானுஜம் பற்றி அல்ல, ஸ்ரீவைஷ்ணவம் பற்றிய, விசிஷ்டாத்வைதக் கொள்கையை நிலை நாட்டிய ஸ்ரீஇராமானுஜர் பற்றித்தான் பேசப் போகிறேன்’ என்றேன். தமிழ் ஆசிரியர் வியந்தே போனார். அவர் மகிழ்ச்சியுடன், ‘நம்முடைய மதத்தைப் பற்றியோ பாரதப் பண்பாடு, கலாச்சாரம் பற்றியோ யாருமே சிந்திப்பதில்லை. நீ இராமானுஜர் பற்றிப் பேசப்போகிறேன்’ என்பது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்…..

***

“… நூற்றி இருபது ஆண்டுகளாக – நமது புண்ணிய பூமியாம் பாரதத்தில் ஞான ஒளியாய், ‘மக்கள் தொண்டே திருமாலின் தொண்டு’ எனக் கருதி, கண் இமைகள் மூடும்வரை அயராது உழைத்த ஸ்ரீ இராமானுஜர் பற்றி மணிக்கணக்காக ஏன், நாள் கணக்காகப் பேசிக்கொண்டே போகலாம். திருமாலின் பாற்கடலில் திரண்டெழுந்த அமுதத் துளிகளில் சிலவற்றை இங்கு கூற முடிந்தது. நேரம் – காலம் கருதி ஸ்ரீ இராமானுஜ தரிசனம் சொற்பொழிவை இத்துடன் முடிக்கிறேன். ஓம் நமோ நாராயணாய” என்று கூறித் தேவகி பேச்சை முடித்தாள்.

கூட்டத்தில் குழுமியிருந்த மாணவ மாணவியர், பொதுமக்கள் எல்லாரும் பக்திப் பரவசமாய் ஆரவாரம் செய்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக