வெள்ளி, 8 ஜூலை, 2016

சமத்துவத்தை செயல்படுத்திய செயல்வீரர் இராமானுஜர்

-ம.கொ.சி.இராஜேந்திரன்
காஞ்சிபுரத்து வரதராஜனையும், குரு திருக்கச்சி நம்பிகளையும் வணங்கிய ஆச்சார்யர் இராமானுஜர், இருவரிடமும் அனுமதி பெற்ற பின் திருமலையானைத் தரிசிக்கத் தனது சீடர்களுடன் புறப்பட்டார். குருவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நடையுடன் சீடர்கள், தங்கள் குருவைப் பின்தொடர்ந்தார்கள்.


இருபக்கமும் பச்சைப்பசேலென்ற வயல்களிலிருந்த நெற்கதிர்கள், தென்றலுடன் கூடிய தங்கள் தலையசைப்பால் ஞானகுருவாய்ப் பொலிந்த இராமானுஜரையும், அவரது சீடர்களையும் வரவேற்றன.

தொடர்ந்த பாதயாத்திரையில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. பாதைகள் பலவாகப் பிரிந்திருந்தன. திருமலையான் தரிசனத்துக்காக செல்லும் பாதை எது? விழிகளால் சுற்றும்முற்றும் திரும்பி விடைதேடும் முயற்சி. ஒருதிசையில் விவசாயி ஒருவன் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான்.


இராமானுஜரும், அவரது சீடர்களும் விவசாயியை நோக்கி நடந்தார்கள். அவரை அணுகிய குரு கேட்டார்:  “அய்யா! நாங்கள் திருவேங்கடம் செல்ல வேண்டும். எவ்வழியில் செல்வது என்று தெரியவில்லை. தாங்கள் வழிகாட்ட முடியுமா?”


ஏற்றம் இறைத்துக்கொண்டிருந்த விவசாயி குரல்கேட்டுத் திரும்பினான். எதிரில் கருணையும், ஞானக்கதிரவனாய்ப் பிரகாசிக்கும் முகமும் கொண்ட இராமானுஜரைக் கண்ட அவன் ஏற்றக்காலிருந்து இறங்கி வந்தான். வந்தவன் அவரை வணங்கிச் சொன்னான்:

 “அதோ தெரிகிறதே மலையை ஒட்டிய பாதை. அதிலேயே தொடர்ந்து சென்றால் திருப்பதிக்குச் சென்றுவிடலாம்”. பாதை காட்டிய விவசாயி அத்தோடு நில்லாமல் அவர்களுடன் சற்றுத் தொலைவுவரை சென்று, சரியான பாதையை மீண்டும் சுட்டிக் காட்டினான்.


சீடர்கள் அவன் காட்டிய பாதையில் தங்கள் யாத்திரையைத் தொடர யத்தனித்தார்கள். எம்பெருமானார் விவசாயின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்காரம் செய்தார். விவசாயி மட்டுமல்ல; சீடர்களும் பிரமித்து நின்றார்கள்.


இராமானுஜர் கூறினார்:  “சீடர்களே! இவன் குலத்தாலும், செய்யும் தொழிலாலும் நமக்கு வேறுபடலாம். ஆனால் இன்று இந்தப் பாகவதன் நமக்கெல்லாம் பேருதவி செய்திருக்கிறான். திருமலைக்குச் செல்ல வழிகாட்டியிருக்கிறான். திருமலையானோ நமக்கு மோட்சத்துக்கு வழிகாட்டுபவன். அப்படிப்பட்ட பகவானை அடைய வழிகாட்டுபவன் நமக்கு ஆச்சார்யர் அல்லவா? ஆகையால் இந்தப் பாகவதன் நம்மைக் காட்டிலும் ‘ஏற்றம்’  உள்ளவன் மட்டுமல்ல; இறைவனை அடையும் பாதைக் காட்டியதால் நமக்கு ஆச்சார்யரும் ஆவான். எனவே நாம் அனைவரும் வணங்கத்தக்கவன் இந்தப் பாகவதன்”.

குருவின் உயர்ந்த சிந்தனையால் நெகிழ்வும், பெருமிதமும் அடைந்த சீடர்கள் விவசாயியான பாகவதனை நெடுஞ்சாண்கிடையாக மண்ணில் விழுந்து வணங்கினார்கள்.  வணங்கிய சீடர்கள் தங்கள் குருவின் நிழல்களாக,  திருமலையான் தரிசன யாத்திரையைத் தொடர்ந்தார்கள்.

வைணவ சூரியனின் சமத்துவத்தைக் கண்டும், அனுபவித்துவனுமான விவசாய பாகவதனைப் போல, இதைச் செவியுறும் நாமும் மெய்சிலிர்க்கிறோம்.


குறிப்பு:

திரு. ம.கொ.சி.இராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக