புதன், 6 ஜூலை, 2016

தானுகந்த திருமேனியின் சிறப்பு

-வா.ரவிக்குமார்
 ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த தலத்திலேயே அவரைப் பற்றிய ஒரு சிறிய குறும்படத்தைத் தம்முடைய அலைபேசியிலேயே படமெடுத்து, அதை யூ-டியூபில் பதிவேற்றியிருக்கிறார், சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணசாமி.

சுரேஷ் கிருஷ்ணசாமி
இவர் அடிப்படையில் தொழில்முறை ஒளிப்பதிவுக் கலைஞர். நாகஸ்வரம் தயாரிப்பில் புகழ்பெற்ற தஞ்சாவூர், திருவிடைமருதூர் அருகிலிருக்கும் நரசிங்கன்பேட்டை கிராமத்தில் இன்றைக்கு அருகிவிட்ட, நாகஸ்வரம் தயாரிக்கும் குடும்பங்களைப் பற்றிய ஒரு குறும்படத்தை எடுத்திருக்கிறார். ராமானுஜரின் சிறப்பை விளக்கும் ஒரு சிறு துளி முயற்சிதான் இந்தப் படம் என்று சுரேஷ் அடக்கத்தோடு கூறுகிறார்.

“எனக்கு வயது 62. ஏறக்குறைய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறும்படங்களை எடுத்திருக்கிறேன். சமூகத்தில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களையும் ஆன்மிகச் சிந்தனையையும் என் குறும்படங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். இந்த அடிப்படையில் ராமானுஜரைப் பற்றி நான் எடுத்த குறும்படம் சுமார் எட்டு நிமிடம் ஓடும். இந்தப் படத்திற்கு எழுத்தும் குரலும் நான் தந்ததோடு மட்டுமின்றி, அதனை ஒளிப்பதிவு செய்ய என்னுடைய அலைபேசியையே உபயோகித்தேன்” என்கிறார்

இரண்டு மணி நேர ஒளிப்பதிவு

“முழுப்படத்தையும் இரண்டு மணி நேரத்தில் பதிவு செய்தேன். அதன் பிறகு அதிலிருந்து எட்டு நிமிடம் ஓடும் அளவுக்கு இந்தப் படத்தை சுருக்கியிருக்கிறேன். கர்நாடகாவில் உள்ள பேலூர், ஹலபேடு ஆலயங்களுக்கு சமீபத்தில் சென்றிருந்தபோது, பேலூரை நிர்மாணித்த பிட்டதேவா என்ற ஹொய்சல ராஜா, ராமானுஜரின் பேச்சையும் அறிவுரையையும் கேட்டு, தனது எதிரியை (சோழ ராஜாவை) வீழ்த்தினார். அதனால் அவர் ஜைன மதத்திலிருந்து வைணவ மதத்துக்கு மாறி, விஷ்ணுவர்த்தன் ஆனார். விஷ்ணு, சிவனுக்கு முறையே பேலூர், ஹலபேடு ஆலயங்களைக் கட்டினார். பேலூர், ஹலபேடு பற்றி குறும்படம் எடுத்த பின், ராமானுஜர் பற்றி படம் செய்ய நினைத்தேன்.

தானுகந்த திருமேனியின் சிறப்பு 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகான் இன்றும் அனைவரின் மனதிலும் வாழ்ந்து வருகிறார் என்பதே படத்தின் கருத்து.

தன்னுடைய அவதாரக் காலம் முடியும் தருணத்தை தம்முடைய சீடர்களுடன் பகிர்ந்துகொள்கிறார் ராமானுஜர். அப்போது அவரைப் பிரிய மனமின்றி சீடர்கள் வருந்துவதைப் பார்த்த ராமானுஜர், மூன்று சிலைகளைச் செய்யச் சொல்லி, பிறகு அதனைத் தழுவி, அவற்றுக்கு உயிர்ப்பு தந்து, தானுகந்த திருமேனி ஆகிறார். இன்றும் அவை உயிர்ப்புடன் தோற்றம் அளிப்பதைப் பார்த்து நான் வியந்தேன். அவரைப் பற்றி வேறு சில விஷயங்களையும் பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் குறும்படத்தைத் தயாரித்தேன்”  என்றார் சுரேஷ் கிருஷ்ணசாமி.

குறிப்பு:

இது தி இந்து ஆனந்தஜோதியில் (30.06.2016) வெளியான செய்தி, நன்றியுடன் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக