செவ்வாய், 26 ஜூலை, 2016

சீடனாக ராமானுஜர், குருவாக ராமானுஜர்...- இரா.ஸ்ரீதரன் 
ராமானுஜர் சிறு வயதிலேயே அறிவில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருந்தார். அவரது குரு யாதவப் பிரகாசர் அவர் சத்யம், ஞானம், ஆனந்தம் என்பதற்கு  'பசுமாடு கொம்பே இல்லாமலும், முழுக் கொம்புடனும், உடைந்த கொம்புடனும் இருந்தாலும் பசு ஒன்றே என்பது போலவே  மூன்றும் பிரம்மம் ஒன்றையே குறிக்கும்’ என்றார்.

ராமானுஜர் எழுந்து நின்றார்.  ‘என்ன ராமானுஜா, ஏதாவது சந்தேகம் உள்ளதா?’ என்று வினவினார் குரு..  ‘இல்லை, தாங்கள் கூறிய பொருள் சரியானதல்ல என்று எண்ணுகிறேன்’ என்று கூறினார்.


 ‘உன் வியாக்கியானத்தைக் கூறு’ என்றார் குரு.

ராமானுஜர்  ‘சத்யம் என்பது அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களை அகற்றுகிறது. ஞானம் அவன் குணத்திலே பொய்மை கலக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. ஆனந்தம் என்பது அவனது குணங்களுக்கு ஒரு வரையறை ஏற்படுத்துவதை நிராகரிக்கிறது. அதாவது பிரம்மம் என்பது நித்தியமாக மற்ற எல்லாவற்றிலுமிருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது’ என்றார்.

யாதவப் பிரகாசரால் பதில் கூற இயலவில்லை.

ராமானுஜரின் அறிவாற்றல் பற்றிக் கேள்விப்பட்ட ஆளவந்தார், அவரை எப்படியாவது தனது சீடனாகப் பெற்றிட வேண்டும் என்று நினைத்தார். காஞ்சி வரதராஜப் பெருமானிடம் வேண்டினார். ஸ்ரீரங்கத்து மன்னனின் மகளை பிரம்மா ராட்சஸ் பிடித்துக் கொண்டது. என்ன செய்யலாம் என்று மன்னன் கேட்க, காஞ்சியில் யாதவப் பிரகாசர் என்ற ஒருவர் உள்ளதாகவும், அவரால் ராஜகுமாரியைப் பிடித்துள்ள பேய் நீங்கும் என்றும் கூறினர். உடனே மன்னன் அவரிடம் ஆட்களை அனுப்பினான். யாதவப் பிரகாசர் அவர்களிடம்,  “நீங்கள் ராஜகுமாரியிடம் சென்று ‘ராஜகுமாரியை விட்டு அந்தப் பிரம்மா ராட்சஸ் ஓடி விட வேண்டும் என்று யாதவப் பிரகாசர் கட்டளை இட்டார்’ என்று சொல்லுங்கள்” என்று சொன்னார்.

ஆனால் பிரம்மா ராட்சஸ் அதற்குப் பணியவில்லை. பின்பு யாதவப் பிரகாசர் நேரில் சென்று முயற்சி செய்தும் பலனில்லை. பிரம்மா ராக்ஷஸ்  ‘இங்குள்ள ராமானுஜன் எனது தலையின் மீது காலை வைத்தால் நான் போ விடுகிறேன்’ என்று சொல்ல ராமனுஜரும் அவ்வாறே செய ராஜகுமாரியைப் பிடித்த பே ஓடிவிட்டது.

ராமனுஜரின் பெருமை உலகிற்குத் தெரிந்தது.

ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தாரின் உடல்நிலை கவலைக்கிடமான போது பெரிய நம்பிகள் ராமானுஜரை காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் அழைத்து வரச் சென்றார்.

ஸ்ரீரங்கத்தை நெருங்கியபோது ஆளவந்தார் திருநாடு அலங்கரித்து விட்டது கண்டு கலங்கினார் ராமானுஜர். அவரது திருமேனி அருகில் சென்று பார்த்தார். அப்போது அவரது மூன்று விரல்களும் மடங்கிய நிலையில் இருப்பது கண்டு ‘முன்பே இப்படித்தான் இருந்ததோ?’ என்று வினாவினார்.

இல்லை என்று அவர்கள் கூற, ‘இவருடைய மனதில் ஏதோ பூர்த்தியாகாத எண்ணம் இருந்திருக்கிறது’ என்று ராமானுஜர் கூறினார். பிறகு ‘மகனீயரே, எனது தேகத்தில் வலிவிருந்து, ஆயுளும் இருந்து, தங்களது அருளும் இருக்குமானால்,  நான் தங்களது எண்ணத்தை நிறைவேற்றுகிறேன்’ என்று கூற உடனே அந்த மூன்று விரல்களும் திறந்து கொண்டன. அங்குள்ளோர் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைத்தனர். அடுத்த ஆசார்யன் தங்களுக்குக் கிடைத்து விட்டதை உணர்ந்தனர்.

ஆனால் ராமானுஜர் உடனடியாக அதை ஒப்புக் கொள்ளவில்லை. பின்பு அந்தக் காஞ்சிப் பேரருளாளப் பெருமானே திருக்கச்சி நம்பி மூலமாக ராமானுஜரின் சந்தேகங்களுக்கு விடையளிக்க அதைக் கேட்ட ராமானுஜர் மகிழ்ந்தார்.

பிறகு ஸ்ரீரங்கத்திலிருந்து ராமானுஜரை அடுத்த ஆச்சாரியராக வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வந்த பெரிய நம்பியை எதிர்கொண்டு ராமானுஜர் மதுராந்தகம் கோயிலில் அவரைச் சந்தித்தார். அங்கேயே மகிழ மரத்தடியில் அவரிடம் உபதேசம் பெற்றார். ஸ்ரீ ஆளவந்தாருக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும் ராமானுஜர் ஒரு உத்தமமான சீடனுக்குரிய மனத்துடன் பெரிய நம்பியையே தமது ஆசார்யனாக நினைத்தார்.

பிறகு ராமானுஜர் அவரிடம்  ‘ஆசார்யரே,  பிரமாணம் எது,  பிரமேயம் எது, பிரமாதா எது?’ என்றார் .  ‘பிரமாணம் (சத்யம் ) இப்போது நான் உபதேசித்த த்வய மந்திரம், பிரமேயம் (அடைய வேண்டியது) காஞ்சி அருளாளப் பெருமான், பிரமாதா (அடைய ஆசைப்படுபவர்) நீர்தான்’ என்றார் பெரிய நம்பி.

இவ்வாறு ஒரு உத்தமான சீடராகவும், ஆதர்ஷ குருவாகவும் ராமானுஜர் விளங்கினார். 

குறிப்பு:

திரு. இரா.ஸ்ரீதரன் எழுதிய இக்கட்டுரை, விஜயபாரதம்- ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பிதழில்  வெளியானது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக