ஞாயிறு, 24 ஜூலை, 2016

அன்பின் திருஉரு ராமானுஜர்

- மதுமிதாதமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரையாக ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். அவர் விசிஷ்டாத்வைத தத்துவமாக உலகுக்களித்த சிந்தனைகள்  நாடு முழுவதும் வைஷ்ணவ சம்பிரதாயங்களில் பரவியுள்ளன.


ராமானுஜர் சிறுவயதிலேயே மகான்களுடன் அன்புடன் கலந்து பழகி வாழ விரும்பினார். காஞ்சிபுரத்தில் திருக்கச்சிநம்பி என்னும் சிறந்த பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் ராமானுஜரின் வீட்டு வழியாகவே பெருமாளை வழிபடச் செல்வார். ஒரு நாள் ராமானுஜர் இவரது முகத்தில் பொலிந்த தெய்வீக ஒளியைக் கண்டு மகிழ்ந்து, தமது வீட்டில் ஒரு இரவு உணவு கொள்ளும்படி அழைத்தார். சிறுவனின் தெய்வீக எழிலையும் சுபச்சின்னங்களையும் கண்டு, திருக்கச்சிநம்பி ராமானுஜரின் அழைப்பினை மறுக்க இயலாமல் வீட்டுக்கு வருகை தந்தார்.

உண்டு முடிந்தபின் ராமானுஜர் அவரின் அருகில் சென்று பணிவிடை செய்வதற்கு கால்களைப் பிடித்துவிட வந்தார். ஆனால் திருக்கச்சிநம்பி தான் வேளாளன் என்பதால் கால்களைப் பிடித்துவிட வேண்டாம் என்று மறுத்தார். இதனால் வருத்தமுற்ற ராமானுஜர்  ‘பூணூல் அணிவதால் ஒருவன் பிராமணன் ஆகிவிட முடியுமா? பரமனிடம் பக்திகொண்டவன் தானே உண்மையான பிராமணன்’ என்று அன்பில் கரைந்து உருகிப் பேச, திருக்கச்சிநம்பி ராமானுஜரின் அன்பிலும் பக்திப் பரவசத்தையும் கண்டு மகிழ்ந்து இரவு அங்கேயே தங்கிச் சென்றார்.

தான் அளிக்கும் விளக்கம் பிடிக்கவில்லையென்றால் படிக்க வர வேண்டாம் என்று கடுமையாக ஒருநாள் சொல்லி விட்டதால், குரு யாதவப்பிரகாசரை வணங்கி விடைபெற்றுச் சென்ற ராமானுஜர், தமது வீட்டிலிருந்தே சாஸ்திரங்களைப் பயின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த திருக்கச்சிநம்பியைப் பார்த்ததும் தன்னைச் சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். திருக்கச்சிநம்பியார் தான் வேளாளன் என்றும் வயதில் பெரியரானாலும் கற்றவன் அல்ல என்றும், கற்றறிந்த பண்டித பிராமணனான ராமானுஜரை குருவாக ஏற்றுக்கொண்டு ராமானுஜருக்குத் தான் சீடராக இருப்பதாகக் கூறினார்.

ஆனால் ராமானுஜரோ, ‘சுவாமி நீங்களே அறிவு வாய்ந்தவர். சாஸ்திரம் கற்பதால் ஒருவனுக்கு பரமனிடம் பக்தி உதிப்பதற்கு பதிலாக கர்வம் தோன்றினால் அது பொய்யான அறிவு. நீங்கள் சாஸ்திரத்தின் சாரம் அறிந்தவர்’ என்று அவர் கால்களில் விழுந்து கண்ணீர் வடிக்கலானார். திருக்கச்சிநம்பி அவரைத் தூக்கி அணைத்துத் தேற்றி,  ‘தினமும் சாலக்கிணற்றிலிருந்து ஒரு குடம் தீர்த்தம் பேரருளாளனுடைய திருவாராதனைக்காக கொண்டுவா. விரைவில் வரதராஜர் உன் விருப்பத்தை நிறைவேற்றுவார்’ என்றார். கண்ணீர்மல்க அன்பில் கனிந்து ராமானுஜர் பெருமகிழ்வுடன் அத்திருப்பணியினை ஏற்றார்.

குரு ஆளவந்தார், ராமானுஜர் பரமனுக்குச் செய்யும் பணிவிடைகளை அறிந்து மகிழ்ந்து, ராமானுஜரைத் தன்னிடம் அழைத்துவரும்படி கூற, சீடர் பெரியநம்பி, ராமானுஜரைத் தேடிவந்தார். எதிரில் குடத்தில் நீருடன் வந்த ராமானுஜர், ஆளவந்தார் நலமாக இருக்கிறாரா என்று விசாரித்தார். உங்களை அழைத்துவர குரு ஆளவந்தார் என்னை அனுப்பினார் என்று பெரியநம்பி கூறியதும், திருநீர்க்குடத்து நீரைக் கோயிலில் சேர்ப்பித்துவிட்டு உடன்வந்தார். வீட்டில் சொல்லிவிட்டு வருமாறு பெரியநம்பி சொல்ல, பரமனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு புரிவதே முதல் கடமை என்று உடனே ஆளவந்தாரை தரிசிக்க ஸ்ரீரங்கம் புறப்பட்டுச்சென்றார். ஆனால் ஆளவந்தார் உலகைப் பிரிந்த செய்தியே கிடைத்தது.

பெருந்துயிலில் இருப்பது போன்ற ஆளவந்தாரின் திருமேனி கண்டு கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருக நின்றார் ராமானுஜர். அன்பு மேலிட இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போலத் தெரிந்ததை கூட்டத்தினர் கண்டனர்.

ஆளவந்தாரின் கையில் மூன்று விரல்கள் மடங்கி இருப்பதைக் கண்ட ராமானுஜர் உரக்க, ‘திருமாலின் நெறிநின்று மக்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து திவ்யப் பிரபந்தங்களில் வல்லவர்களாக்குவேன்’ என்றதும் மடங்கியிருந்த ஒருவிரல் நேரானது.  ‘மக்களைக் காக்க தத்துவஞானங்களைத் தொகுத்து ஸ்ரீபாஷ்யம் இயற்றுவேன்’ என்றதும் இரண்டாவது விரல் விடுபட்டது. ‘விஷ்ணுபுராணம் இயற்றிய பராசர முனிவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு கற்றறிந்த வைணவருக்கு அவர் திருப்பெயரை இடுவேன்’ என்றதும் மூன்றாம் விரல் நிமிர்ந்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு ராமானுஜரிடம் விளையாட்டுத்தனம் மறைந்து, சிந்தனை நிரம்பிய பொறுப்புடன்கூடிய கம்பீரம் அதிகரித்தது.

ராமானுஜர் பெரியநம்பியின் லட்சிய சீடரானார். பெரியநம்பியின் பசிக்கு உணவளிக்க ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள் அன்னம் இல்லை என்று கூறியதாலும், பெரியநம்பியின் மனைவியிடம் அவர் கடுமையாக பேசியதாலும் மனம் வருந்திய ராமானுஜர், துறவு மேற்கொண்டு பரமன் சேவைப்பணியில் இணைந்தார்.

பெரியநம்பி அவரை திருக்கோட்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற்றுவருமாறு கூறினார். ராமானுஜர் பதினெட்டுமுறை திருக்கோட்டியூர் நம்பியிடம் வந்து திருவடிகளைப் பணிந்தார். ஆனால் நம்பி அவருக்கு உபதேசிக்க மறுத்துவிட்டார். அதனால் தன்னிடம் தூய்மையில்லையென்று ஏக்கத்துடன் வருந்திக் கண்ணீர் வடித்தது கண்டு,  திருக்கோட்டியூர் நம்பி நெஞ்சம் கனிந்து ராமானுஜரை வரவழைத்து, ரகசியப் பொருளை விளக்கி விவரித்து திருஎட்டெழுத்து மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார்.

 ‘இந்த மந்திரத்தைக் கேட்பவன் இறந்தபின்பு முக்தியடைந்து வைகுந்தம் செல்வான். வேறு யாருக்கும் இதைக் கூறாதே’ என்றார். தனது சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வாருக்கும் மந்திரத்தின் திருக்கோட்டியூர் ரகசியத்தை உபதேசித்து அணைத்துக் கொண்டார். கோயிலின் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று கூட்டத்தை நோக்கி ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை உரக்கக் கூவினார்.

தான் நரகம் போனாலும் அனைவருக்கும் முக்தி கிடைக்க வேண்டும் என்னும் விருப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரின்பம் பெற அன்பின் மிகுதியில் இயங்கிய ராமானுஜர் மீதிருந்த கோபம் மாறி,   தன்னுடைய மகனை அவருக்குச் சீடராக அனுப்பினார் திருக்கோட்டியூர் நம்பி.

ராமானுஜருடைய எளியோருக்கும் காட்டும் அன்பும் குருக்களிடம் காட்டும் அன்பும் மரியாதையும் பசித்தோருக்கு உணவளித்து சேவை செய்யும் விருப்பமும் தவவாழ்க்கையும் அனைவரும் அறிந்து கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகளாகும்.

குறிப்பு:

 இக்கட்டுரை, விஜயபாரதம் - ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பிதழில் வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. 


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக