சனி, 2 ஜூலை, 2016

யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4

 -கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன் 

 
தாமேயான திருமேனி, ஸ்ரீரங்கம்


அரங்கனை உடைய   ஆச்சார்யர்  இராமானுஜர் 

  
துறவு மேற்கொண்டு இராமானுஜர் தம் சன்னிதிக்கு வந்ததும் ஸ்ரீ ரங்கன் சொன்னான்: “இவர் நம்மை உடையவர், நம் ஆஸ்தானங்களை உடையவர்; நம் பக்தர்களை உடையவர்.”


உடைமை என்றால், பொருளை, சொத்தை, அதிகாரத்தை என்கிற லௌகீகத் பார்வையில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் அரங்கனோ, தம்மையே அவருக்கு உடைமையாக்கிக் கொண்டு விட்டான்.

அரங்கனின் அனுக்ரகத்தைப் பெறுவது என்று சொன்னால், அரங்கனைச் சேவிக்க வேண்டும் என்பதில்லை. ஆச்சார்ய மகாபுருஷரின் அனுக்ரகத்தைப் பெற்றாலே போதும். அரங்கனின் அனுக்ரகம் கிடைத்துவிடும் என்று சூட்சுமமாக உணர்த்திவிட்டான் அவன்.

திருவரங்கனின் பெரிய கோயிலின் வசந்த மண்டபத்தில், அரங்கனின் அருளாணைப்படியே, பள்ளிப்படுத்தப்பட்ட ( ஸ்ரீமத் இராமானுஜரின்) சன்னிதியில், தாமேயான திருமேனியாக தரிசனம் தந்து கொண்டிருக்கிறார் உடையவர்.

அவர் அரங்கனின் ஆஸ்தானத்தை உடையவர்;  ‘அரங்கனை உடையவர்’ மட்டுமல்ல, நம் அனைவரையும் உடையவர். அவருக்கு அரங்கனைச் சேவிக்க வரும் அனைவருமே உடைமைகள்தான். அந்த உடைமைகள் எதுவும் பின்னப்படாமல், சேதப்படாமல், துன்புறாமல், சிதையாமல் காக்க வேண்டும் என்கிற பேருள்ளத்தின் வெளிப்பாடாகவே இங்கே அமைந்திருக்கிறது உடையவர் சன்னிதி.

வலப்புறம் சக்கரத்தாழ்வாரில் தொடங்கி, இடப்புறம் உடையவர் தரிசனத்தோடு முடிகிறது ஆலயப்பிரதட்சிணம். சக்கரம்- வினைகளை வேரோடு களைகிறது என்றால், ஆச்சார்ய கடாக்ஷம்- அரங்கனின் பேரருளுக்குப் பாத்திரமாக்குகிறது.

திருவரங்கம் ஆலய வலம் வரலில் இப்படியொரு சூட்சுமத்தை ஒளித்திருக்கிறான் அரங்கன். அவன் அரிதுயிலுக்குள் எத்தனை எத்தனையோ மாயங்கள். அவனால் உணர்த்தப்படாத எதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்?

 “ஆசார்யனைச் சரணடையும்போது, சொல்லப்படாத மறைபொருள்களும் புத்திக்குப் புலனாகின்றன” என்கிறது ச்வேதாஸ்வதர உபநிஷத். அதே புரிதலுடன்,  நிலம் குளிர பெருகிய அந்த அருள் வெள்ளத்தை, யுக புருஷரை மனமொன்றிப் பணிவோம்.


குறிப்பு:

திரு. கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன், எழுத்தாளர்.

நன்றி: கல்கி தீபாவளி மலர்-2014.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக