திங்கள், 11 ஜூலை, 2016

ராமானுஜருக்கு 216 அடி சிலை!

 -ஆசிரியர் குழு



ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன் திருவுருவச் சிலை அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று,  சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தெரிவித்தார்.


இதுகுறித்து, ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த திரிதண்டி சின்ன ஸ்ரீமந்நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (04.07.2016) கூறியது:

கடவுளை அன்புடன் வணங்க வேண்டும்; பயத்துடன் வழிபடுவது சரியானதல்ல என்பதை உலகறியச் செய்தவர் ராமானுஜர்.

அவரது 1,000-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், ராமானுஜரின் சிறப்புகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வகையிலும், அவரது பெயரைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட வளாகம் அமைக்க முடிவு செய்தோம்.

இதையடுத்து தெலங்கானாவில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உள்ள ஸ்ரீராம்நகரில் ராமானுஜருக்கு 216 அடி உயரமுள்ள சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டன.

108 திவ்ய ஸ்தலங்கள்- சுழலும் ஸ்தூபி: ராமானுஜரின் சிலையைச் சுற்றி வட்ட வடிவத்தில் 108 திவ்ய ஸ்தலங்களும், ராமானுஜரின் வரலாற்றை விவரிக்கும் வகையில் இயந்திர மனித இயக்கி கண்காட்சியும் அமைக்கப்படும். அந்தச் சிலைக்கு அருகே ராமானுஜரின் உருவச்சிலை சுழலும் வகையில் ஸ்தூபி நிறுவப்படவுள்ளது. மேலும் அதே பகுதியில் ராமானுஜரின் சிந்தாந்தங்களைப் பரப்பும் வகையில் ஓர் ஆராய்ச்சி மையம், புத்தக வெளியீட்டு மையம் ஆகியவை அமையவுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கு சிலை அமைந்துள்ள வளாகத்தில் உள்ள நுழைவாயிலில் ராமானுஜர் சிலை அமைந்துள்ள வளாகத்துக்கு வழிகாட்டும் கணினி மூலம் வழிகாட்டும் காதொலிக் கருவி வழங்கப்படும்.

ரூ. 1,000 கோடி: ஏறத்தாழ 75 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகத்தை மூன்று கட்டங்களாக திறக்கத் திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக அடுத்த ஆண்டு (2017) ராமானுஜரின் 216 அடி உயர ஐம்பொன் சிலையும், சுழலும் ஸ்தூபியும் திறக்கப்படும். இரண்டாம் கட்டமாக 108 திவ்ய ஸ்தலங்கள் திறக்கப்படும். மூன்றாம் கட்டமாக மின்னணு நூலகம், இயந்திரமனித இயக்கி கண்காட்சி ஆகியவை திறக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தையும் ரூ.1,000 கோடியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இத்தகைய பணிகளை மேற்கொள்ள பலதரப்பட்ட மக்கள் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர். அனைத்துப் பணிகளும் 5 ஆண்டுகளுக்குள் நிறைவடைய வாய்ப்புள்ளது என்றார் சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள்.

குறிப்பு:

இந்தச் செய்தி தினமணி நாளிதழில் வெளியானது.


***

 தினமணி (05.07.2016) செய்தி...

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (05.07.2016) செய்தி...


சிலை அமைப்பு குறித்த அறிவிப்பு...




 .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக