செவ்வாய், 7 ஜூன், 2016

புரட்சித் துறவி இராமானுஜர்

- எஸ்.ஆர்.சேகர்

 
ஸ்ரீபெரும்புதூர் தானுந்த திருமேனி


 கட்டுரையின் தலைப்பே வித்யாசமாக இருக்கிறதல்லவா? கட்டுரையின் நாயகனும் வித்தியாசமானவர்தான்.

4.4.1017, இன்றைக்கு 1,000 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் என்னும் தலத்தில் அவதரித்த மகான் இராமானுஜர். ஆசாரமான, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய பிராமண குடும்பத்தில் பிறந்தார். புத்திர காமேஷ்ஷ யாகம் நடத்திப் பெற்ற அருந்தவப் புதல்வர் இராமானுஜர். பிற்காலத்தில் பிரபலமான ஆங்கில ‘எண் கணித சாஸ்திரப்படி கூட’ இராமானுஜரின் பிறந்த எண்கள் உலகின் குருவாகப் பிறந்தவரின் எண்களாக இருந்தன.


 இன்றைக்கும் நாம் போராடிக் கொண்டிருக்கின்ற தீண்டாமை ஒழிப்பு - தமிழ் மொழி வளர்ப்பு - தாழ்த்தப்பட்ட சகோதரர்களின் முன்னேற்றம் இவற்றுக்கெல்லாம் முன்னோடி இராமானுஜர்தான்.

 70 ஆண்டுகளுக்கு முன் அரிசனங்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தார் மகாத்மா காந்தி. பின்னாளில் இதே பணியில் மதுரை வைத்தியநாத அய்யர் - முத்துராமலிங்கத் தேவர் - ராஜாஜி மற்றும் ஈ.வெ.ரா.வின் பங்களிப்பும் இருந்தது.

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை தறிகெட்டு நின்ற காலத்தில் -  ‘தொழுமின் - தொடுமின் - கொள்மின்’ என்றபடி இராமானுஜர், மாலை கட்டுபவர், பந்தல் போடுபவர், சலவைத் தொழிலாளி, மண்பாண்டம் செய்வோர் - பல்லக்குத் தூக்கிகள், மரமேறி, இளநீர் கொடுப்போர், மேளக்காரர், வேதம் ஓதுவோர், அமுது செய்வோர், அர்ச்சகர் என்று பேதமின்றி அத்தனை பேரையும் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று சமமாக நடத்திய உண்மையான புரட்சியாளர்.

 ஆலயங்களின் கதவை அன்னைத் தமிழுக்கு அன்றே திறந்து விட்டவர் இராமானுஜர்தான். வடமொழி வேதங்களைப் படித்து அதில் மிகப் பெரும் நாவன்மையும், ஞானமும் பெற்ற இராமானுஜர், தமிழ் மீது கொண்ட காதலால், திருவாய்மொழி, திவ்யப் பிரபந்தம் போன்ற தமிழ் மறைகளைக் கற்றுத் தேர்ந்து அவற்றை ஆலயங்களில் பாடவேண்டுமென கட்டாயமாக்கினார்.

 தமிழகத்தில் சாதி வேறுபாடுகளைக் களைய நடந்த போராட்டம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதை விட வேறு (பிராமணர்) சமூகத்தினர் மீதிருந்த காழ்ப்புணர்வே காரணமாக இருந்தது. போராட்டம் நடத்தியோரும், தங்கள் தனிப்பட்ட வாழ்வின் சமூகத்திற்கு உண்மையாக இருந்தனரா என்பதும் சர்ச்சைக்குரியது. ஆனால் உயர்ந்த வேதம் ஓதும் பிராமணர் குடும்பத்தில் பிறந்த இராமானுஜர்,  அக்காலத்தில் தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட குலத்தை சேர்ந்த  திருக்கச்சி நம்பியை  குருவாக ஏற்றார்.

 ‘பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை - கல்வியில் சிறந்தவரே உயர்ந்தவர் - தவம், கல்வி, ஆள்வினை இவற்றால் ஆவதே குலம’ என்றார் இராமானுஜர்.

 திருவங்கரத்து ஆளவந்தார் இராமானுஜரின் மானசீக குரு. ஆளவந்தாரின் மாணவர் பெரிய நம்பியின் நண்பர் மாறனேரி நம்பி. இவர் பிறப்பால் ஆதி திராவிடர். மாறனேரி நம்பி இறந்தவுடன் அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தவர் பெரிய நம்பி. ஒரு ஆதி திராவிடனுக்கு பிராமணன் இறுதிச் சடங்கு செய்யலாமா? என திருவரங்கத்து பிராமணர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அதை முறியடித்தவர் இராமானுஜர்.

 தனது செயல்பாடுகளால் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டவர் இராமானுஜர். ஆற்றுக்கு குளிக்கப் போகும்போது நம்பியாண்டான், கூரத்தாழ்வான் என்ற மேல்குலத்து சீடர்களோடு தோள்மீது கைபோட்டுச் செல்லுவார். குளித்துத் திரும்பும்போது வில்லிதாசன் என்னும் ஆதிதிராவிட சகோதரனின் தோளில் கை போட்டு திரும்புவார். இராமானுஜரின் இச்செயலை உயர்சாதிக்காரர்கள் விமர்சித்தபோது,  ‘வில்லிதாசனைத் தொடுவதால்தான் நான் மேலும் சுத்தமாகிறேன்’  என்பார்.

 மகாபாரதத்தின் ‘விஸ்வரூப தரிசனம்’ அர்ச்சுனன் மூலமாக ஆண்டவன் உலகுக்கு பல செய்திகள் சொன்னதுபோல, நவீன காலத்தில் விவேகானந்தரின் சிகாகோ நகர உரைபோல, இராமானுஜரின் திருகோஷ்டியூர் கோவில் கோபுரம் மீது நின்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் ‘நாராயண மந்திர’ விளக்கமும் உரையும் உலகப் பிரசித்தி  பெற்றது.

 திருகோஷ்டியூர் நம்பி என்னும் குருவிடம் ஸ்ரீபெரும்புதூருக்கும் - திருகோஷ்டியூருக்கும் இடைப்பட்ட 100-க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்தை, 18 முறைக்கு மேல் கால் கடுக்க நடந்து ஒரு மாத காலம் முழு உண்ணாநோன்பிருந்து கற்ற எட்டெழுத்து மந்திரத்தை உலகத்திற்குச் சொல்லி, தான் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை, தாழ்த்தப்பட்ட மக்கள் சொர்க்கம் செல்லவேண்டும் என்று நினைத்து அதன்படி செய்த இராமானுஜர்தான் உண்மையான புரட்சித் துறவி.

 இவரது வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவர்களுக்காக பள்ளிக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். பல்கலைக் கழகங்களும், தனியார் அறக்கட்டளைகளும் இவரது புத்தகங்களை இளைய தலைமுறைகளிடம் பிரபலப்படுத்தவேண்டும்.

 இராமானுஜர் வாழ்க்கை வரலாறு,  தீண்டாமை ஒழிப்பு - தமிழ்மொழி வளர்ப்பு என்பன ஒன்றோடு ஒன்றிணைந்தது. அவரைப் போற்றுவோம். அவர் வழி நடப்போம்.


குறிப்பு:

திரு. எஸ்.ஆர்.சேகர், கோவையைச் சேர்ந்தவர்; பாஜகவின் தமிழகப் பொருளாளர்.

நன்றி: சென்னை லைவ்நியூஸ்.காம்


 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக