ஞாயிறு, 5 ஜூன், 2016

ராமானுஜரைக் கவர்ந்த தனுர்தாசர்

-ஆசிரியர் குழு
ராமானுஜரின் சீடர்களின் முக்கியமானவராக இருந்தவர் தனுர்தாசர். அவரது மனைவி ஹேரம்பா. இவர்களின் குருபக்தி, நேர்மை, கபடமற்ற நடத்தை போன்றவை ராமானுஜரை வியக்க வைக்கும் வகையில் இருந்தது. ராமானுஜர் காலையில் காவிரி நதியில் நீராடச் செல்வது வழக்கம். நீராடச் செல்லும்போது பிராமணச் சீடராகிய தாசரதியின் தோளில் கை வைத்த படியே நடந்து செல்வார். நீராடிவிட்டு திரும்பும்போது தனுர்தாசரின் தோள் மீது கை வைத்தபடியே ஆசிரமம் திரும்புவார்.


கூடாப் பேச்சு

தனுர்தாசர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பதால், ராமானுஜரின் செய்கை மற்ற உயர்குலத்து சீடர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் குருவின் மீதான தங்கள் மன வருத்தத்தை அவர்களுக்குள்ளாகவே வெளிப்படுத்திக் கொள்ள தொடங்கினர். சீடர்களின் மனப்போக்கை அறிந்து கொண்டார் ராமானுஜர். தனுர்தாசர், ஹேரம்பா ஆகியோரின் தெய்வீக குணங்களை அனைவருக்கும் உணர்த்த விரும்பினார் ராமானுஜர். அதற்கான வேலைகளையும் செய்யத் தொடங்கினார்.

ஒரு நாள் அதிகாலை எழுந்த சீடர்கள், தங்களின் துணிகள் கிழிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி யாரிடமும் கேட்கவில்லை. அதே நேரத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. கோபத்தின் உச்சகட்டமாக, இழிவான சொற்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் கூசாமல் பேசித்தள்ளினர். மணிக்கணக்கில் அவர்கள் போட்ட பாவக் கூச்சலை, ராமானுஜர் வந்து சமாதானம் செய்யும்படி ஆனது.

நகைகளை களவாட...


ராமானுஜர் தன் மனதில் ‘துணியின் சிறிதளவு கிழிந்ததற்கே இந்த இழிவான சொற்களை கூசாமல் வீசுகிறார்களே’ என்று எண்ணிக்கொண்டார். தனுர்தாசரின் உயர்வான குணத்தை இவர்களுக்கு எடுத்துக் காட்டும் விதமாக தான் வைத்த முதல் புள்ளியை நினைத்து ராமானுஜர் தனக்குள் சிரித்துக் கொண்டார். ஏனெனில் அவர்தானே தனது சீடர்களின் துணிகளில் இருந்து சிறிதளவை கிழித்தது!.

அன்று இரவு ராமானுஜர் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். பின்னர் பின்வருமாறு கூறினார். ‘சீடர்களே! நான் தனுர்தாசனை இங்கு வரும்படி கூறியுள்ளேன். அவன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவான். அவனுடன் நான் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பேன். அந்த நேரத்தில் நீங்கள் அவனது வீட்டிற்குச் செல்லுங்கள். அங்கு கணவனின் வருகைக்காக காத்திருந்து உறக்கத்தில் ஆழ்ந்துபோன தனுர்தாசனின் மனைவி ஹேரம்பாவின் உடலில் இருந்து நகைகளை திருடிக் கொண்டு வந்து விடுங்கள். அந்த நஷ்டத்திற்கு தனுர்தாசனும், அவனது மனைவியும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்’ என்று கூறினார்.

தப்பி ஓடிய சீடர்கள்

ராமானுஜர் கூறியபடி, தனுர்தாசர் ஆசிரமம் வந்ததும், மற்ற சீடர்கள் அனைவரும் தனுர்தாசரின் வீட்டை அடைந்தனர். பின்னர் அங்கே கணவனின் வருகைக்காக காத்திருந்து, வாயில் கதவை திறந்து வைத்தபடி நன்றாக உறங்கிக்கொண்டிருந்த ஹேரம்பாவின் அருகில் சென்றனர். அசந்து தூங்கிக் கொண்டிருந்த ஹேரம்பாவின் உடலில் இருந்த நகைகளை கழற்றினர். அப்போது தூக்கம் களைந்த ஹேரம்பா நடப்பதை உணர்ந்துகொண்டாள். ஒரு பக்கம் அணிந்த ஆபரணங்கள் கழற்றப்பட்ட நிலையில், மறுபக்க ஆபரணங்களையும் எடுத்துக்கொள்ள வசதியாக திரும்பி படுத்தாள் ஹேரம்பா. ஆனால் சீடர்களோ அவள் விழித்துக் கொண்டதாக கருதி பயந்து, கிடைத்த ஆபரணங்களுடன் ஓடிவிட்டனர்.

தப்பி ஓடிய சீடர்கள், ராமானுஜரை சந்தித்து விஷயத்தை ரகசியமாகத் தெரிவித்தனர். அதன்பிறகு ராமானுஜர், தனுர்தாசரை அழைத்து, ‘இருட்டி வெகு நேரமாகி விட்டது, நீ வீட்டிற்குச் செல்’ என்று கூறினார். அவரும் ராமானுஜரை பணிந்து விட்டு அங்கிருந்து அகன்று வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

நகைகள் எங்கே?

அப்போது ராமானுஜர், மற்ற சீடர்களிடம், ‘நீங்கள் இப்போது தனுர்தாசன் அறியாதபடிக்கு அவனை தொடர்ந்து சென்று, அவனும், அவன் மனைவியும் என்ன செய்கிறார்கள் என்று கவனித்து எனக்கு தெரியப்படுத்துங்கள்’ என்று உத்தரவிட்டார். சீடர்களும் அவ்விதமே புறப்பட்டுச் சென்றனர்.

வீட்டிற்கு சென்ற தனுர்தாசர், மனைவி ஒரு புறம் மட்டும் நகைகள் அணிந்திருப்பதைக் கண்டு நகைகள் குறித்து கேட்டார். அதற்கு ஹேரம்பா, ‘சுவாமி! நான் உங்கள் வருகையை எதிர்பார்த்தபடி சற்று கண் உறங்கி விட்டேன். அப்போது என் நகைகள் திருடப்படுவதை அறிந்தேன். நகைகளை திருடியவர்களுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் என் மறுபக்க நகைகளையும் கழற்றிக்கொள்ளும் வகையில் திரும்பிப் படுத்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் அவர்கள் பயந்துபோய் ஓடிவிட்டார்கள்’ என்றாள்.

கடிந்துகொண்ட தனுர்தாசர்

மனைவியின் சொல்லைக் கேட்ட தனுர்தாசர் மிகவும் வருந்தினார். ‘நீ எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டாய். திரும்பிப் படுக்காமல் இருந்திருந்தால், அயர்ந்து தூங்குவதாக நினைத்து அனைத்து நகைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றிருப்பார்கள். ‘நான்’ என்ற உணர்வு இன்னும் உன்னிடம் இருக்கிறது. அதனால்தான் ‘நான் நகையை கொடுக்கிறேன்’ என்ற உணர்வுடன் திரும்பிப் படுத்து அவர்கள் அச்சப்படும்படி நடந்து கொண்டாய். இவ்வாறு செய்ததால், பந்தத்திற்கு காரணமான இந்த தங்கத்தைத் துறக்கும் அரிய வாய்ப்பை நீ இழந்து விட்டாய்’ என்று கூறி கடிந்து கொண்டார்.

அதைக் கேட்ட ஹேரம்பா தனது தவறை உணர்ந்து வருந்தினாள். அவளது கண்கள் கண்ணீரை சுரந்தன. ‘ஐயனே! தெரியாமல் இதுபோன்ற ஒரு பிழையை செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள். நான், எனது என்னும் அகங்காரம் என்னை விட்டு அகல ஆசீர்வதியுங்கள்’ என்று வேண்டினாள்.

நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமானுஜரின் உயர்குல சீடர்கள், கர்வமும், காமமும், நான், தன்னுடையது என்ன என்ற எண்ணமும் இல்லாமல் தெய்வத்தை மட்டுமே மத்தியமாக கொண்டு அந்த தம்பதியர் வாழ்ந்து வருவதை கண்டனர். பிறகு ஆசிரமம் சென்ற அவர்கள் நடந்தவற்றை ஒன்று விடாமல் தனது குருவிடம் கூறினர்.

யார் உயர்ந்தவர்?

மறுநாள் ராமானுஜரை சுற்றி, வழக்கம் போல் பாடங்களை கற்கும் விதமாக அமர்ந்திருந்தனர் உயர்குல சீடர்கள். அவர்களுக்கு மத்தியில் ராமானுஜர் தன் கருத்துக்களை ஆணித்தரமாக பதித்தார்.

 “குழந்தைகளே! எனது மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் சாஸ்திரங்களை மிகவும் நல்ல முறையில் பயின்று வைத்துள்ளீர்கள். ஆயினும், உங்களுக்கு ‘நாம் உயர்குலத்தவர்’ என்ற கர்வமானது தத்துவத்திற்கு பொருந்தாதபடி இருந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் உயர்ந்தவர் யார் என்பதை நேற்று முழுவதும் நடந்த உங்கள் வாழ்வு நடத்தையில் இருந்தே, நீங்கள் கூறுங்கள். நேற்று காலை உங்கள் துணிகளில் சிறிதளவு கிழிக்கப்பட்டிருப்பதை கண்டதும் எப்படி நடந்து கொண்டீர்கள்? என்ற நினைவு உங்களுக்கு இருந்தால் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதே வேளையில் விலை உயர்ந்த நகைகள் களவு போன நிலையிலும் கூட தனுர்தாசனும், அவன் மனைவி ஹேரம்பாவும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் சற்று நினைவு கூறுங்கள். உங்களின் நடத்தை சிறப்பானதா? அவர்களின் நடத்தை சிறப்பானதா? யாரை சிறந்த பக்தர், உயர்ந்தவர் என்று சொல்வது பொருந்தும்?”  என்று கேள்வி எழுப்பினார்.

உயர்வு என்பது எது என்று அறிந்துகொண்ட சீடர்கள் அனைவரும் வெட்கித் தலை குனிந்து போயிருந்தனர். அது தங்கள் தவறை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பதை சொல்லாமல் சொல்லிற்று.

சீடர்களுக்கு   உபதேசம்


பிறப்பால் மட்டுமே ஒருவன் உயர்ந்தவனாக இருந்துவிட முடியாது. அவனது சிந்தனையும், அந்த சிந்தனையில் இருந்து வெளிப்படும் செயல்களுமே ஒருவனது உயர்வையும், தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

நானே உயர்ந்தவன், நானே சிறந்தவன் என்ற எண்ணத்தை அகற்றி விட்டு, நல்ல குணங்களைக் கொண்டு தகுதியுடையவர்களாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

கர்வத்தின் காரணமாக ஒருவருக்கு ஜாதி, மத பேதம் இருக்குமானால் அதைவிட பெரிய விரோதி ஒரு பக்தனுக்கு இருக்கும் வாய்ப்பு இல்லை. ஒருவனை துன்பத்திற்கான வழியில் இருந்து எவனொருவன் காப்பாற்றுகிறானோ, அவனை நீங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதே தன் சீடர்களுக்கு, ராமானுஜரின் உபதேசமாக இருந்தது.


நன்றி: தினத்தந்தி (10.08.2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக