வெள்ளி, 3 ஜூன், 2016

வடுகநம்பியின் குருபக்தி

-திருநின்றவூர் ரவிக்குமார்


வடுகநம்பி

ராமானுசர் அவதரித்து 30 ஆண்டுகள் கழித்து (1047-ல்  சித்திரை அஸ்வினி ) பிறந்தவர் 'வடுகநம்பி' என்ற மகான்.

ராமானுசரின் அந்தரங்க சீடர்களில் முக்கியமானவர். ராமானுசருக்கு பால் காய்ச்சிக் கொடுக்கும் பணியை விருப்புடன் செய்து வந்தார்.

' தேவு மற்றறியேன்' என்ற மதுரகவியின் வாக்கிற்கிணங்க ராமானுசரை தவிர வேறு யாரையும் மனதாலும் நினையாதவர்.

திருவரங்க மடத்தில் ஒரு நாள் இவர் ராமானுசருக்கு பக்குவமாய் பால் காய்ச்சிக் கொண்டிந்தார். அப்போது நம்பெருமாள் ஊர்வலம் மடத்தருகே வந்தது. ராமானுசர்,   ‘வடுகா! பெருமாளை சேவிக்க வாரும்!’  என அழைத்தார். இவரோ,  ‘உங்கள் பெருமாளை சேவிக்க வந்தால் எங்கள் பெருமாளுக்குப் பால் பொங்கிவிடும்’  என வர மறுத்தவிட்டார்.

ராமானுசர் யாத்திரை செல்லும் போது திவ்ய தேசங்கள் வந்தால் தனது பாதுகைகளை (காலணிகளை) அணிந்து கொள்வதில்லை.
ஒரு முறை திருவெள்ளறை என்ற திருப்பதியை நெருங்கியபோது வழக்கப்படி தமது பாதுகைகளைக் கழற்றிவிட்டு நடந்தார்.

அவற்றை அளவற்ற பக்தியுடன் எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்ட வடுகநம்பி, ராமானுசரின் திருவாராதனப் பெருமாள் வைக்கப்பட்டிருந்த பெட்டியுடன் அதனைச் சேர்த்து ஒரே மூட்டையாகக் கட்டிக்கொண்டு பின்தொடர்ந்தார்.

பின்னர் இச்செய்தியறிந்த ராமானுசர் பதறிப் போய்,  ‘வடுகா! என்ன காரியம் செய்தாய்?’ என சீடரைக் கடிந்து கொள்ள,   ‘தங்கள் தேவரில் எங்கள் தேவர் எந்த விதத்தில் குறைந்தவர்?’ என்று பதிலளித்தார். இவரது குருபக்தி கண்ட உடையவர் பிரமித்தார்.

குருபக்தியில் இணையற்ற வடுகநம்பி 114 சுலோகங்கள் கொண்ட  ‘யதிராஜ வைபவம்’,  28 சுலோகங்கள் கொண்ட ‘ஸ்ரீ ராமானுச அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்’,  21 சுலோகங்கள் கொண்ட ‘ஸ்ரீயதிராச மங்களம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இவரது பெருமையை,

உன்னையொழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுகநம்பி -தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து


- என்று புகழ்கிறார் ஆர்த்தி பிரபந்தத்தில் (11)
மணவாள மாமுனிகள்.

குறிப்பு:

திரு. திருநின்றவூர் ரவிக்குமார், எழுத்தாளர். அவரது வாட்ஸ் அப் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக