வெள்ளி, 17 ஜூன், 2016

ஜாதி வேலிகளை உடைத்த ராமானுஜர்

-வெங்கட் சாமிநாதன்
பதினொன்று,  பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் நீண்ட காலம் வாழ்ந்த இராமானுஜாச்சாரியாரின் முயற்சியில்தான் மிகப் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்து எல்லா சாதி மக்களும் வைஷ்ணவர்களாக மாற்றப்பட்டு அவர்களிடையே முன்னர் இருந்த சாதி வேறுபாடுகள் களையப்பட்டு சம அந்தஸ்து பெற்றவராயினர்.

குருபரம்பரைப் பிரபாவம் இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை வர்ணிக்கிறது. இராமானுஜர் தம் குரு திருக்கோட்டியூர் நம்பி தமக்கு உபதேசித்த திருமந்திரத்தை அவர் ஆணைப்படி ரகசியமாக தனக்குள் வைத்துக்கொள்ளாது, கோயில் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று கூடியிருக்கும் எல்லா மக்களும் கேட்க அந்த ரகஸ்யத் திருமந்திரத்தைச் சொல்ல, திருக்கோட்டியூர் நம்பி, கோபம் கொண்டு, குருவின் ஆணையை மீறிய அபசாரத்திற்கு இராமானுஜன் நரகத்திற்குத்தான் போவார் என்று சபிக்க, அதற்கு இராமானுஜர்,  ‘திருமந்திர உபதேசத்தைக் கேட்ட அத்தனை ஆயிரம் மக்களுக்கும் முக்தி கிடைக்குமாயின், குருவின் ஆணையை மீறியதற்கு தான் ஒருவன் நரகத்திற்குப் போனால்தான் என்ன? அதையே தான் விரும்புவதாக’ச் சொன்னாராம். இராமானுஜரின் வாழ்க்கை முழுதிலுமே இந்த உணர்வு பரவியிருக்கப் பார்க்கிறோம்.

குரு பரம்பரைப் பிரபாவம் இது போன்ற, இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பலவற்றைச் சொல்கிறது.

திருக்கச்சி நம்பிகள் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பெருமாள் சன்னிதியில் பெருமாளின் ஆணைப்படி ஆலவட்டம் வீசும் பணியை மேற்கொண்டவர். தினம் பெருமாளுடன் பேசிக்கொண்டிருந்தவர். இதன் காரணமாகவே நம்பிகளின் பாதத் தூளியை தொட்டுத் தன் உடல் முழுதும் பூசிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டவன் ஒருவனை நம்பிகள்,  “ஏனப்பா இதென்ன செய்கிறாய்?” என்று கேட்க, அதற்கு அந்த எளியவன், “பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள், தங்கள் பாதத் தூளியைத் தொட்டுப் பூசிக்கொள்ளும் எனக்கு மோக்ஷம் உண்டா என்று?” எனக் கேட்கிறான். நம்பிகளும் பெருமாளிடம் கேட்டு அவனது எண்ணம் நிறைவேறும் என்று உறுதிகூற, அந்தச் செய்தி சொல்லப்படுகிறது.

குரு பரம்பரை சொல்லும் இன்னொரு கதை விசேஷமானது.

திருக்கச்சி நம்பிகளை தன் வீட்டிற்கு அழைத்து அவருக்கு உணவளித்து, அவர் உண்ட உணவின் மிச்சத்தை உண்பது விசேஷம் என்று எண்ணிய இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் தம் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறார். இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதம் என்று நம்பிகள் மறுத்தும், இராமானுஜரின் பிடிவாதத்திற்கு இணங்க, இராமானுஜர் தன் மனைவியிடம் திருக்கச்சி நம்பிகளுக்கு போஜனம் செய்விக்கச் சொல்லி, கோயிலைப் பிரதக்ஷிணம் செய்து திரும்பலாம் என்று செல்கிறார். வீடு திரும்பிய இராமானுஜர் முன், நம்பிகளுக்கு உணவளித்து அவர் உண்ட இலையை எடுத்தெறிந்து, பின் அந்த தோஷ நிவர்த்திக்காக நீராடி, வேறு உடை தரித்து நிற்கிறார் அவர் மனைவி. இது இராமானுஜர் தன் மனைவியின் செயலால் வேதனையடைந்த காரணங்களில் ஒன்று.

பெரியநம்பிகள் தன் மனைவியுடன் இராமானுஜர் இல்லத்தில் தங்கியிருக்க, இராமானுஜர் மனைவிக்கு இது சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. பிராமணர் அல்லாத பெரிய நம்பியின் தேவி கிணற்றிலிருந்து இறைத்த நீர் இராமானுஜர் தேவியின் பாத்திரத்தில் தெளிக்க அது தோஷமடைந்த கோபம் சண்டையில் முடிகிறது. வீடு திரும்பிய இராமானுஜர் என்ன விஷயம் என்று கேட்க இராமானுஜரின் மனைவி தன் பாத்திரம் தோஷமானதைச் சொல்கிறார். அதுவே இராமானுஜர் தன் மனைவியைத் துறந்து சன்னியாசமாகக் காரணமாகிறது. “முன்னர் ஒரு முறை பொறுத்தோம்; இனி பொறுப்பதற்கில்லை!” என்று மனைவியைத் தன் பிறந்தவீடு போகச் சொல்லி, தானும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இப்படியான செய்திகள் பல நமக்கு குரு பரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்படுகின்றன.

வைஷ்ணவக் கோயில்களில் தினசரி ஆராதனையாக, திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் பாடப்படுவதும், அரையர் சேவையில் தாழ்த்தப்பட்டோர் வாத்தியங்களான பறை முதலானவை பயன்படுத்தப்படுவதும்,  முத்துக்குறி போன்ற கிராமிய வடிவங்கள் அரையர் சேவையில் இடம் பெறுவதும் சமூகத்தில் எழுப்பப்பட்டிருந்த ஜாதி ரீதியான வேலிகளை அகற்றுவதில் இராமானுஜரின் வைஷ்ணவம் அவர் வாழ்ந்த காலத்திலிருந்தே தன் அணுகலாகக் கொண்டிருந்தது. திவ்யப் பிரபந்தத்தை திராவிட வேதமாக்கியதும் அன்றாட ஆராதனையில் இடம்பெறச் செய்துள்ளதும் இன்றும் நாம் காண்பது.


குறிப்பு:


மறைந்த திரு. வெங்கட் சாமிநாதன்,  பிரபல இலக்கிய விமர்சகர்.

இக்கட்டுரை,  அவரது ‘தலித்துகளும் தமிழ் இலக்கியமும்’ என்ற கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டு, இங்கு மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி: தமிழ் ஹிந்து 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக