வியாழன், 2 ஜூன், 2016

குழந்தைகள் கட்டிய கோயில்…

-சக்தி.விண்மணிஉஞ்சவிருத்தி செய்துகொண்டு வைணவப் பெரியார் ஒருவர் தெரு வழியே சென்றுகொண்டிருக்கிறார்.

தெரு ஓரமாக உள்ள ஒரு மரத்தடியில் சில குழந்தைகள் மண்ணால் கோயில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன்மண்டபம், கொடிமரம், சுற்றுச்சுவர் அத்தனையும் மண், சின்னக் கற்கள், குச்சிகள், கோடுகள் ஆகியவற்றால் அமைந்திருப்பதை அந்தப் பெரியவர் பார்க்கிறார்.

கர்ப்பக் கிரகத்துக்குள் ஒரு கல்லை வைத்து மண்ணையே உதிய மர இலைகளின் பிரசாதமாக வைத்து கண்களை மூடி இருகை கூப்பி குழந்தைகள் கும்பிடுவதைப் பார்க்கிறார். மனம் நெகிழ்ச்சியடைகிறது.


பெரியவர் அருகே செல்கிறார். நின்று கண்கொட்டாது பார்க்கிறார். மெய் சிலிர்க்கிறது. உயர்ந்த மாடங்களும், ராஊகோபுரங்களும் அலங்கரிக்கப்பட்ட மூலவரும் கொண்ட கோவில்களில் காண முடியாத பக்தியை பச்சைக் குழந்தைகள் விளையாட்டகக் கட்டிய கோவிலில் காண்கிறார்.

அந்தப் பெரியவர் தன்னை மறந்து நின்றபோது குழந்தைகள், ‘சாமி இந்தாங்க பிரசாதம்’ என்று சொல்லி பயபக்தியுடன் மண்ணைத் தர பெரியவர் உஞ்சவிருத்திச் செம்பில் ஏற்றுக் கொண்டு அவர்களை உற்றுப் பார்க்கிறார்.

கள்ளங்கபடமற்ற உள்ளம், இறைவன் குடிகொள்ளும் ஆலயம். உருவ வழிபாட்டின் தத்துவமே இங்கே தெரிகிறது.

இறைவனை உள்ளத்தில் கண்டால்தான், பிற உருவங்களிலும் காண முடியும்! அவ்வாறு பகவானை உள்ளத்தில் உணர்ந்தவர்கள் எந்த உருவத்தை விரும்புகிறார்களோ, அதுவே இறைவன் உருவம்! அவர்கள் எந்த நாமத்தை விரும்புகிறார்களோ அதுவே அவன் திருநாமம், இந்தச் சின்ன குழந்தைகளின் உள்ளத்தில்தான் எத்தனை பக்தி!

மகிழ்ச்சியால் பூரிப்படைந்த பெரியவர் குழந்தைகள் கட்டிய கோயிலில் மட்டுமல்ல, குழந்தைகளையே பெருமாளாகப் பார்த்து தரிசிக்கிறார்.

‘தமர் உகந்த தெவ்வுருவம் அவ்வுருவம்தானே
தமர் உகந்த தெப்பேர் மற்றப்பேர்-தமருக்கது
அவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பவரே
அவ்வண்ணம் ஆழியான் ஆம்’


என்ற பொய்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கமாகத் திகழ்ந்த, குழந்தைகளின் ஆன்மிக விளையாட்டைக் கண்டு மெய்சிலிர்த்து மகிழ்ந்த பெரியவர் யார் தெரியுமா?

அவர் தான் இராமானுஜர்!

சிறியவர் யார்?

இராமானுஜர் தம் முதிர்ந்த வயதில் ஏழுமலையான் தரிசனம் பெற திருப்பதிக்குச் சென்றார். மலை அடிவாரத்தை அடைந்த அவர், தமது பாதங்களை வைத்து திருமலையில் ஏறுவதை அபச்சாரமாகக் கருதி முழங்கால் இட்டு குழந்தையைப் போல் தவழ்ந்தே மலை ஏறினார்.

மலையை அடைந்ததும் களைப்பால் சோர்ந்து ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அப்போது கோயில் அர்ச்சகர் ஒருவர் கோயில் பிரசாதத்தையும், தீர்த்தத்தையும் தம் தலையின்மீது சுமந்துகொண்டு வந்து, “சுவாமி, இவற்றைச் சாப்பிட்டு களைப்பைப் போக்கிக் கொள்ளும்” என்று இராமானுஜரிடம் சொன்னார்.

அவரும் அதை வாங்கிச் சாப்பிட்டார். பின்னர் “ஐயோ பாவம்; எனக்காக இந்த வெய்யிலில் இவற்றை சுமந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். வேறு சிறுவர் யாரும் இதைச் சுமக்கக் கிடைக்கவில்லையா” என்று கேட்டார்.

அதற்கு அந்த அர்ச்சகர் “என்னைவிட சிறியவர் யாருமில்லையே” என்றார். வந்திருப்பது அந்த ஏழுமலையானே என்பதை அறிந்துகொண்ட இராமானுஜரும் அப்படியே வீழ்ந்து வணங்க, ஏழுமலையான் மறைந்துவிட்டார்.

* திரு. சக்தி.விண்மணி அவர்களின் ‘பக்திக் கதைகள்’ புத்தகத்திலிருந்து...கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக