சனி, 18 ஜூன், 2016

உடையவரின் ஆராதனைப் பெருமாள்

-ம.கொ.சி.இராஜேந்திரன்


ஸ்ரீரங்கம் கோயிலில் உடையவர் சன்னிதி

 காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும்  வரதராஜப் பெருமாள்தான்  ஸ்ரீ ராமானுஜரின்  திருவாராதனைப் பெருமாள்  என்பதை  நாம் அறிவோம். ஆனால்,  அந்தப் பெருமாள்  எழுந்தருளப்  பண்ணப்பட்டுள்ள  திருவாராதனைப்  பெட்டி   ஸ்ரீரங்கம்   உடையவர்  சன்னிதியில்  உள்ள அவரது  தாமேயான  திருமேனிக்கு  அருகே வைக்கப்பட்டுள்ளது  என்பது  நமக்கு  தெரியுமா?

உடையவர்  சன்னதிக்கு  அருகே உள்ள  வரதராஜப் பெருமாள்  சன்னிதியை நாம் அறிவோம். ஆனால் , அங்கே உள்ள  யோக நரசிம்மரை  எத்தனை  பேர்  தரிசிக்கிறோம்?

இந்த  யோக நரசிம்மர்  உடையவருக்கு  அவரது  பக்தர்  ஒருவரால்  வழங்கப்பட்டது. மேலும்  இந்தத்  திருமேனி  சாளக்கிராமத்தால்  ஆனது.  இதில்  தசாவதாரங்களும்  செதுக்கப்பட்டுள்ளன.
                                             
இராமானுஜரின்  குரு பெரியநம்பியின்  பெருமை 

  ஆச்சார்யர்  இராமானுஜரின்  ஐம்பெரும் ஆசிரியர்களில்  ஒருவரான  பெரியநம்பிகள்  வாழ்க்கையில்  நடந்த  சம்பவம்  இது. பெரியநம்பிகள்   தன்னுடன்  கல்விபயின்ற திருக்குலத்தார்  இனத்தைச்  சேர்ந்த  மாறநேரி நம்பிகள் காலமானபோது  அவருக்கு ஈமச்சடங்குகள் செய்தார். இதனையடுத்து,  உயர்ந்த  ஜாதிகளைச்  சேர்ந்தவர்கள்   பெரிய நம்பிகளை  எதிர்த்ததோடும் , அவரை  ஜாதியிலிருந்தும்  ஒதுக்கியும்  வைத்தனர்.

இதையறிந்து  பெரியநம்பியின்  மகளான  அத்துழாய்  மிகவும்  மனம் வருந்தினாள் . இந்தப்  பிரச்னையைப்  பற்றி  ஊர்   மக்களிடையே  விவாதம் நடைபெற்றபோது,   அத்துழாய் , சித்திரைத்  தேரை  நிறுத்தி  ஸ்ரீரங்கப் பெருமாளிடமே   நீதிகேட்டு  முறையிட்டாள்.

நம்பெருமாளும்  அத்துழாய்  நிறுத்திய  இடத்திலேயே  நிலையாக நின்று   ‘பெரிய நம்பிகளின்  செயல்  நியாயமே’ என்று  தீர்ப்புக்  கூறினார்.

இந்தச்  சம்பவத்துக்கு  முன்வரை  சித்திரைத் தேரின்  நிலை  வடக்குவாசலில்  இருந்தது. அத்துழாயின்  முறையீட்டிக்கு  நம்பெருமாளின் தீர்ப்பினால்  இத்தேரின்  நிலை  இன்றுவரை  பெரிய நம்பிகளின்  திருமாளிகை  வாசலிலேயே அமைந்துள்ளது.  

சீடனின்  அடையாளம்

விஷம் கலந்த  சாதம் மூலம்  உடையவரை  கொலைசெய்ய  நடைபெற்ற முயற்சி பற்றி  அவரது  குருவான  திருக்கோஷ்டியூர் நம்பி  கேள்விப்பட்டார். உடனே  அவர்  ஸ்ரீரங்கம்  புறப்பட்டார். தன்  குருவை  எதிர்கொண்டு  அழைத்தார். இருவரும்  காவிரி மணற்பரப்பில்  சந்தித்தனர் . அவரது  பாதத்தில்  வீழ்ந்து  வணங்கினார்  இராமானுஜர்.

பெரியவர்களைச்  சேவிக்கும்போது  அவர்களாக  எழுந்திருக்கச்   சொல்லும்வரை  தண்டனிட்ட நிலையிலேயே  இருக்க வேண்டும் என்பது  சம்பிரதாயம். காவிரிமணலின்   வெம்மை  உடையவரின்  உடலை பதம்பார்த்தது. ஆனால்  ஸ்ரீ நம்பிகளோ  அவரை  எழுந்திருக்கச்  சொல்லாமல்  காலம் தாழ்த்தினார்.

உடையவரின்  உடல்  வெப்பத்தில்  துவண்டு கிடப்பதைப்  பார்த்துப்  பொறுக்காத  கிடாம்பியாச்சான்  மனம்  வேதனையடைந்தது.  ‘இது  என்ன  ஆசார்ய- சிஷ்ய  உறவோ?’  என்று  அவர்  வாய் திறந்து  அரற்றினார் .  உடையவரின்  திருமேனிமீது  பரிவு  கொண்டுள்ள  சிஷ்யன்  கிடாம்பியாச்சான்  என்பதைப்  புரிந்து  கொண்டார்  திருக்கோஷ்டியூர்  நம்பி. 

 உடனே  உடையவரை  எழுமாறு  பணித்த  அவர், இனிமேல்  கிடாம்பியாச்சான்  தயாரித்த  உணவைத்தான்  உடையவர்  சாப்பிட  வேண்டும்  என்று  ஆணையிட்டார்.

சிரத்தையான  சீடனை  இனம் கண்டுகொள்வதற்காகத்   திருக்கோஷ்டியூர் நம்பி  செய்த  இந்த  உபாயம்  ஸ்ரீவைஷ்ணவ  மரபில்  மிகவும்  போற்றப்படும்  சம்பவங்களில்  ஒன்றாகும்.

தென்னரங்கம்  செல்வம்  முற்றும்  திருத்தி  வைத்தவர் 
              
இராமனுஜருக்கு முற்பட்ட  காலத்தில்  திருக்கோயிலில்  ஐந்து  வகையான  பணியாளர்கள்  இருந்தார்கள்.  இவர்  அவர்களைப்   பத்துப்  பிரிவினராக்கினார்.

ஸ்ரீரங்கத்திலிருந்த  சேரன் மடத்தில்  தங்கி  ஆலயத்தின்  நிர்வாகத்தை  முறைப்படுத்தினார்.  அதுவே  தற்போதைய  ஸ்ரீரங்க  நாராயண ஜீயர்  மடமாக  விளங்குகிறது.

சந்தன  மண்டபத்தின்  கிழக்குப்  படிக்கு  அருகே  அமர்ந்துதான்  ஆலயத்தின்  தினசரி  நிர்வாகத்தை  மேற்பார்வை  செய்வார். தற்போது இங்கே  ஒரு வெள்ளைக்கல்  பதிக்கப்பட்டுள்ளது. 

ஆலயத்தின்  நிர்வாகத்தை  முறைப்படுத்தினார்; வழிபாட்டு  முறைகளில் மாற்றங்களைக்  கொண்டுவந்து  எளியமக்களையும்  பக்திநெறிகளில்  இணைத்தார்;  ஆலயங்களை  ஜாதிவித்தியாசங்கள்  பாராது  இறைவன்  குடியிருக்கும்  இடங்களாக   மாற்றினார்;  கோயில்  செல்வங்களையும், கோயில்  விழாக்களையும்  முறைப்படுத்தி  மக்களை  ஒன்றுகூட்டி  கோயில் விழாக்களை  சமுதாயத்  திருவிழாக்களாகக்   கொண்டாட  வைத்தார்.

இதனாலேயே  ஸ்ரீராமானுஜர்   ‘தென்னரங்கன்  செல்வம்  முற்றும்  திருத்தி  வைத்தவர்’ என்று  போற்றப்படுகிறார்.  

குறிப்பு:

திரு. ம.கொ.சி.இராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்ப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக