திங்கள், 13 ஜூன், 2016

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய வாழ்க்கை

-ம.கொ.சி.இராஜேந்திரன்


திருப்புல்லாணி கோயிலில் ராமானுஜர் உற்சவர்.

 ஸ்ரீரங்கத்தில்  ஸ்ரீ இராமானுஜர் உஞ்சவிருத்தி (பிக்ஷை ) எடுத்து தன் பசியை ஆற்றுவது வழக்கம். ஒருமுறை அவ்வாறு உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது அவரை எதிர்த்தவர்களின் திட்டப்படி விஷம் கலந்த சாதத்தை ஒரு பெண்மணி இட்டார். இறைவன் அருளால் அதை அவர் உண்ணவில்லை. இந்தச் சம்பவத்தை ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கையில் நாம் காணலாம். இச்சம்பவத்தால் சில பொருள்பொதிந்த உண்மைகளையும் நம்மால் உணர முடியும்.
  • வைணவ சம்பிரதாயத்தின் முடிசூடா மன்னனாக தான் வாழ்ந்த காலத்திலேயே வணங்கப்பெற்றவர் ஸ்ரீ இராமானுஜர். அவர் தான் மேற்கொண்ட சந்நியாச தர்மத்திற்கேற்ப பிச்சையெடுத்து , அதன்மூலம் கிடைக்கும் உணவையே உண்டு வாழ்ந்திருக்கிறார் .
  • தனக்கு இடப்பட்ட பிக்ஷையில் விஷம் கலந்துள்ளது தெரிந்தும் பிக்ஷையிட்டப் பெண்மணியையோ , தன்னைக் கொல்ல முயன்றவர்களையோ அவர்  தண்டிக்கவும் இல்லை; வெறுக்கவும் இல்லை. ‘பெயத்தக்க நஞ்சுண்டு அமையும் நயத்தக்க நாகரிகம்’ பேணுபவராக அமைந்த அருளாளர் ஸ்ரீ இராமானுஜர்.
  • தன்னலம் பாராது இறைவனின் பேரருளையும், உலக மக்களின் உயர்வையும் நோக்கமாகக் கொண்டு பக்தி மார்க்கத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர் இராமானுஜர் . இத்தகு பெரியோரை விஷம்கொண்டு கொல்லுமளவுக்கு அவர் செய்த காரியங்கள்தான் என்ன? அவரது சாதிமதம் பேதம் காணாத் தன்மையும், ஆலயங்களில் கொண்டுவந்த சீர்திருத்தங்களும் தான் அவர்மீது வெறுப்பும், அவரைக் கொல்லத் துணியுமளவிற்கு கோபமும் ராமானுஜரை எதிர்த்தவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனாலும் தான் மேற்கொண்ட உயரிய செயல்களை தனக்கு மரணமே நேரிடினினும் இறைவனின் பேரருள் துணைக்கொண்டு இடைவிடாது செய்த யகபுருஷர் ஸ்ரீ இராமானுஜர். 

‘குடிசெய்வேம் எனும் ஒருவற்கு தெய்வம் 
 மடிதற்று தான் முந்துறும்’  

-என்னும்  தெய்வப்புலவரின்   குறளுக்கு இலக்கணமாய் விளங்கிய பெரியார்,   நம் தமிழகத்தில் தோன்றி நமக்கும், நம் பாரதத் தேசத்திற்கும் பெருமை சேர்த்த பண்பாளர் ஸ்ரீ இராமானுஜர்.குறிப்பு:

திரு. ம.கொ.சி.இராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக