புதன், 1 ஜூன், 2016

சமூகப் புரட்சியாளர்

-எஸ்.தோதாத்ரி ஆளவந்தாரின் சீடராகிய இராமானுஜர் மிகப் பெரிய சமூகப் புரட்சியை அக்காலத்தில் செய்துள்ளார்.

வேளாண்மைப் பெருக்கத்தினால் ஏராளமான சாதிகள் தோன்றி, அவற்றிற்குரிய ஒழுக்கமுறைகள் வரையறை செய்யப்பட்டு, இறுக்கம் அதிகமான காலத்தில் இந்த வரையறைகள் மேலிருந்து வந்தவை. ஆனால் கீழ்மட்டத்தில் அதிகமான இல்லை. அது மாறும் கட்டத்திலேயே இருந்தது. அதனால்தான் உற்பத்தி சிறப்படையும் என்ற நிலை சமூகத்தின் அடித்தளத்தில் இடம் பெற்றிருந்தது. இது வெளியில் தெரியாத ஒன்று.


இது வெளிப்பட்ட பொழுது மதத்தின் பெயரால் சாதியத்திற்கு எதிரான குரலாக ஒலித்தது. மதத்தின் மூலமாக வெளிப்பட்ட கருத்துக்கள் அடிப்படையான அம்சங்களைத் தொட்டுச் சென்றன. எனவே தான் பக்தி மார்க்கம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சக்தியாக அக்காலத்தில் விளங்கியது.

ராமானுசரின் பல முயற்சிகள் மதம் என்ற வடிவத்தில் இருந்தாலும், அவற்றில் சாதியத்திற்கு எதிரான குரல் இருப்பதைக் காண முடியும். அவரது சீடர்களில் பெரும்பாலோர் அவ்வாறே இருந்தனர். இராமானுசருக்கு மிக நெருக்கமாக இருந்த சீடரான கூரத்தாழ்வாரைப் பற்றி இராமானுச நூற்றந்தாதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சமும் குறும்பாம்  
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்…" (இ.நூ: 7)

இங்கு முக்குறும்பு என்பது மூன்று விதமான கர்வத்தினைக் குறிக்கும் “தனகர்வம், வித்யாகர்வம், சாதியகர்வம்” (பணத்தால் வரும் கர்வம், கல்விச் செருக்கு, சாதீய கர்வம்) இவற்றினை முற்றிலுமாகத் தவிர்த்தவனே வைணவன். அத்தகையவர் கூரத்தாழ்வார் என்று இப்பாடல் கூறுகிறது. இது வைணவர்களுக்கு இலக்கணமாகக் கூறப்பட்டது.

* திரு. எஸ்.தோதாத்ரி எழுதிய ‘வைணவம் – மார்க்சியப் பார்வை’ நூலிலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக