திங்கள், 6 ஜூன், 2016

சமரசம் உலாவும் இடமே...

-பூ.சேஷாத்ரி ராமாநுஜதாஸர்  ‘ரம்பையின் காதல்’ என்ற  திரைப்படத்தில், கவிஞர் மருதகாசி இயற்றிய பாடல் வரிகள்தான்  “சமரசம் உலாவும் இடமே"”  என்ற பாடல். ராமாநுஜரின் 1000-ஆவது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நல்லவேளையில், ராமாநுஜரின் வழித்தோன்றல்களான பாகவத பக்த கோஷ்டிகளிடம் இந்த சமரசம் இயற்கையாகவே காணப்படுகிறது.

 சமீபத்தில் பாஜக  மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் உத்தரகண்ட் மாநிலத்தில் தலித் மக்களுடன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டபோது சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. இந்நிலையில் ராமானுஜரால் உத்வேகம் பெற்ற பாகவத கோஷ்டிகளிடம் எந்த ஜாதி வேற்றுமையும் இல்லாமல் இருப்பது குறித்து பெருமைப்பட வேண்டும்.


 வைணவ சம்பிரதாய பஜனை பிருந்தங்கள், தென்னிந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள். துக்காராம், பக்த மீரா,  பத்ராசல ராமதாஸர், தூமூ நரஸிம்ஹதாஸர், அல்லூரு வேங்கடாத்ரி சுவாமிகள் மற்றும் பல தாஸ சிரேஷ்டர்கள் பகவானை நினைத்து இயற்றிய கீர்த்தனைகளை பாடல் பெற்ற வைணவ ஸ்தலங்கள் தோறும் நாராயணனை நினைத்துப் பாடியாடி அவர்கள் அகமகிழ்கிறார்கள்.

 இந்த சம்பிரதாய பஜனைக் குழுக்கள் எதுவும் ஜாதிவாரி இல்லை என்பதுதான் மிகப் பெரிய விஷயம். பகுதி, ஊர் வாரியான இந்த பஜனைக் குழுக்களில் எல்லா ஜாதியினரும் பங்குகொள்கிறார்கள் என்றால் அது சமரசம் உலாவும் இடம் என்று சந்தோஷப்படக்கூடிய விஷயம்தானே?

 சரி, இந்த சம்பிரதாயக் குழுக்கள் என்பது எப்படி தோன்றின?

 பகவானைத் தொழும் முறைகளில் ஒன்று, அவனைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றி,  பாடி இன்புறும் நிலை. அவ்வாறு பாடும்போது இசையும் கலந்திருந்தால் கேட்க நன்றாகத்தானே இருக்கும்! பாடும்போது கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தும், இசைக்கருவிகளை இசைத்தும் கேட்கும்போது அது அலாதியானது. இசையுடன் நாராயணனை நினைத்து, பாடலுக்கேற்ப நடனமாடினால் என்னே பரவசம்!

 இப்படித்தான் பூக்கள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து மாலையாக, பாமாலையாக உருவெடுத்தது. வெறும் நடனமாடினால் போதுமா? காலில் சலங்கையுடன், கையில் தம்புராவுடன், மற்றொரு கையில் கர தாளத்துடன் இசைக்கு ஏற்ப ஆனந்த நர்த்தனம் செய்வது என்னே ஆனந்தம்!

 அல்லூரி வேங்கடாத்ரி சுவாமிகளின் சொத்தே அவரது குருவான தூமூ நரஸிம்ஹ தாஸ சுவாமிகள் அவருக்கு அளித்த தம்புராவும், கர தாளமும், சலங்கையும் தானாம். அவர் சதா சர்வகாலமும் நாராயணனை நினைத்து பல க்ஷேத்திரங்களில் உள்ள பகவானை நினைத்தும், பகவானுக்கு பல கைங்கர்யங்களை செய்தும், பல கீர்த்தனைகளை இயற்றிப் பாடியுள்ளார்.

 இவ்வாறு வைணவ சம்பிரதாய பஜனைக் குழுக்களில் இருக்கும் அனுபவம் பெற்ற பெரியவரை தனது குருவாக பாவித்து அவரிடம் நர்தனோபதேசம் பெற வாயில் விண்ணப்பித்து, அதை அவர் ஏற்கும்பட்சத்தில்,  நர்தனோபதேசம் பெற விரும்புபவர் பெற்றோருக்கும், குருவுக்கும் பாதபூஜை செய்து, பின் குருவே நர்தனோபதேசம் செய்து வைப்பார்.

 நர்தனோபதேசம் பெறுபவருக்கு குருவே பாதபூஜை செய்து, சிஷ்யருடைய கால்களை தன் தொடையில் வைத்து பூஜிக்கப்பட்ட சலங்கையை தன் கையால் அணிவித்து, சிரசில் ஆடை போர்த்தி மந்திர உபதேசம் செய்து, எப்படி கீர்த்தனைகள் இசைக்கும்போது எப்படி ஆட வேண்டும் என்பதையும் உபதேசிப்பார்.

 இவ்வாறு ஒரு குரு உபதேசித்தால், உபதேசம் பெற்றவருக்கு அவருடைய பெயருடன் ‘ராமாநுஜதாஸர்’ என்ற பட்டத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 இதில் உபதேசம் பெறுபவர் என்ன ஜாதி, என்ன குலம், என்ன கோத்திரம் என்று பார்க்கும், கேட்கும், அறியும் பேச்சுக்கே இடமில்லை என்பது தான் முக்கியமான தகவல்.  வீடு, வைணவத் திருத்தலங்கள் என எங்கும், குரு விரும்பும் இடத்தில் இந்த நர்த்தன, மந்திர உபதேசம் பெறலாம்.


 குருவானவர் தன் சிஷ்யருடைய கால்களை தன்னுடைய தொடையில் இறுத்தி அவரது கால்களில் சலங்கையை அணிவிக்கும்போது, அங்கே சமரசம் நிலவுகிறது. இன்றளவும் இந்த சம்பிரதாய முறையானது வைணவ சம்பிரதாய பஜனைக் குழுக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ராமாநுஜர் விதைத்த பணியை சிரமேற்கொண்டு பின்பற்றிவரும் பஜனைக் குழுக்களின் சேவை அலாதியானது.

 அங்கொன்றாய் இங்கொன்றாய் நடக்கும் சில தகாத சம்பவங்களையே பெரிதாக்கும் இன்றைய சூழ்நிலையில், இதுபோன்று கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் எத்தனையோ உதாரணங்கள் சமுதாயத்த்குப் புலப்படாமல் போவது துரதிருஷ்டம் தான்.

 சமரசத்துக்கு உதாரணமாகத் திகழும் வைணவ சம்பிரதாய பஜனைக் குழுக்களின் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்தும் பெரிய அகண்ட ராமநாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் சமுதாய ஒருமைப்பாட்டுக்கு, சமத்துவத்துக்கு ஓர் உதாரணம்.

 ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’  என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. அது ஒரு தவமும்கூட. இதை சப்தமில்லாமல், செயல்களால் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘ராமாநுஜதாஸர்’ என்ற பட்டத்துடன் இயங்கும் வைணவ சம்பிரதாய பஜனைக் குழுக்கள்.


குறிப்பு:

 திரு.  பூ.சேஷாத்ரி ராமாநுஜதாஸர், அரக்கோணத்தில் வசிக்கிறார். பத்திரிகையாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக