செவ்வாய், 28 ஜூன், 2016

யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -3

-கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்  குருவே  சீடனைப்  போற்றிய  அற்புதம்

 திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் உபதேசம் பெற பதினெட்டு முறை நடந்தும், பட்டினியால் இளைத்தும் நலிந்த ராமானுஜருக்கு பத்தொன்பதாவது முறை தான் திருமந்திரம் உபதேசம் செய்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. 
 “தகுதியற்றோர்க்கு இந்த மந்திரத்தை உபதேசிக்கக் கூடாது” என்றும் நிபந்தனையும் இட்டார். “மீறினால் நரகம் சம்பவிக்கும்’ என்றும் சொன்னார்.


என்றாலும் திருக்கோஷ்டியூர் ஆலய மதிலில் ஏறி,  அனைவரும் அறிய திருமந்திரத்தை உபதேசித்தார் இராமானுஜர்.
திருக்கோஷ்டியூர் நம்பி இதனை அறிந்தார்; சினந்தார்; இராமானுஜரை அழைத்து கோபமாய்க் கேட்டார்:

 “குருவின் ஆணையை மீறியதால், உமக்கு நரகம் சம்பவிக்குமே...இதைஅறிந்தும் ஏன் செய்தீர்?”

இதைக் கேட்டதும் பொன்னொளிரும் திருமேனிப் புண்ணியரான இராமானுஜர் அடக்கத்தின் முடிவில் நின்று சொன்னார்:

 “அடியவன் ஒருவன் நரகம் புகுந்தாலும், ஆயிரக்கணக்கானோர் சொர்க்கம் புகுவார்களே ...அதனால்தான்!”

துறவு என்பது உறவுகளைத் தொலைப்பதல்ல; ஆசைகளைத் தொலைப்பதல்ல; தன்னைத் தொலைப்பது. ‘தான்’ என்கிற எண்ணமற்று, பூரணமான பரம்பொருளில் தம்மை இணைத்து ஒன்றியிருப்பது. அந்த மகோன்னத நிலையில் தம் சீடன் இருப்பதை உணர்ந்து கொண்டாடிய திருக்கோஷ்டியூர் நம்பி சொன்னார்:

 “இனி நம் மரபு ‘எம்பெருமானார் தரிசனம்’ என்றே போற்றப்படட்டும்”.

எம்பெருமான் என்பது பகவானைக் குறிக்கும். எம்பெருமான் என்ற சொல்லுடன் இன்னும் மரியாதையாக ‘ஆர்’ விகுதி  சேர்த்து  ‘எம்பெருமானார்’ என்று குறிப்பிட்டால்,  அது ஸ்ரீமத் இராமாநுஜரைக் குறிக்கும். இப்படியொரு சிறப்பு இவருக்கே வாய்த்தது.


குறிப்பு:
திரு. கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன், எழுத்தாளர்.

நன்றி: கல்கி தீபாவளி மலர்-2014. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக