செவ்வாய், 21 ஜூன், 2016

யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -2

-கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்சிஷ்ய  பாவம்  காட்டி  ஆனந்தப்பட்டான்  திருக்குறுங்குடி  நம்பி  என்றால்,   “அண்ணா” என்றழைத்துக்  குதூகலம்  கொண்டாள்  ஆண்டாள்  நாச்சியார்.

என்ன  காரணம்?


தம்முடைய  திருக்கல்யாண  வைபவத்தின்போது  நூறு தடா  அக்கார  அடிசில்  செய்து  அரங்கனுக்குச்  சமர்ப்பிக்க  வேண்டும்  என்று  நினைத்திருந்தாள்  ஆண்டாள். நினைத்தால்  போதுமா? அரங்கன்தான்  அவளைப் பல்லக்கில்  அழைத்துவரச்  சொல்லி, மன்னனுக்கு  ஆணையிட்டு  விட்டானே. கைத்தலம்  பற்றியதும், தீ வலம் வந்ததும், பொறிமுகந்து  அட்டியதும்  கனவில்தானே...!

அவற்றை   நேரில்  நின்று  அனைவரும்  காணும்படியாகவா  செய்தான்  அரங்கன்?  பூமாலையும்  பாமாலையும்  சமர்ப்பித்த  பொற்கொடியை  வாரிச்  சுருட்டி  ஐக்கியப்படுத்திக்  கொண்டு விட்டானே!  எங்கிருந்து  இதைச் செய்வது?

நாச்சியாரின் இந்த ஆவல்,  ராமானுஜரின்  உள்ளத்தில்  விகசித்தது. வர நூறு  தடா  அக்கார  அடிசில்  செய்து,  எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தார்.  யாருக்கு  அந்த  அக்கறை இருக்க முடியும்? தங்கையின்  நலனைக்  கருத்தில்  கொண்டு செயலாற்ற  தமையனைத்  தவிர வேறு  யாரால் முடியும்? அந்தச் சகோதர  வாஞ்சையால்  பூரித்துச்  சொன்னாள் சிலா ரூபத்தில்  இருந்த நாச்சியார்:  “எம்  அண்ணாவே!”

இதையொட்டியே  ராமானுஜருக்கு ‘கோயிலண்ணன்’ என்ற  திருப்பெயர்  உண்டாயிற்று. ஆண்டாள் ‘பெரும்பூதூர்  மாமுனிக்குப் பின்னானாள்’ என்று  போற்றப்படுவதும்  இதனாலேயேதான்.

(பெரும்பூதூர் மாமுனி= ராமானுஜர்;  பின்னை= தங்கை)

யாருக்கு  இந்தப்  பாக்கியம்  கிடைக்கும்? பகவான்  சிஷ்யனாகிறான்; பகவானையே  ஆண்டாள் “அண்ணா” என்கிறாள்.

இவர்களுக்கு  முன்னதாகவே இந்த விளையாட்டைத்  தொடங்கிவைக்கிறான்  கச்சிப்  பேரருளாளன். துறவு மேற்கொள்ளும்  பொருட்டு  அனந்தசரஸ்  திருக்குளத்தில்  நீராடிக்  கொண்டிருக்கிறார்  ஸ்ரீராமானுஜர். சன்னிதியில்  கைங்கர்யத்தில்  ஈடுபட்டுக்  கொண்டிருக்கும்  அர்ச்சகருக்கு  ஆணை  பிறப்பிக்கிறான்  வரதன்:  “காஷாயமும் தண்டமும்  அளித்து,  நம்  யதிராஜரை  சன்னிதிக்கு  அழைத்து வாரும்”. என்ன  சூட்சுமம் இது!

 ‘யதி’ என்றால்  துறவி, யதிராஜர்  என்றால் துறவிகளுக்கெல்லாம்  அரசர். துறவு  மேற்கொள்ளும்முன்பே, பட்டாபிஷேகம்  நடக்கிறது - வரதன்  வாயால்! அந்த வரதன், அடியார்  கேட்கும்  வரங்களைத்  தருபவன்  மட்டுமல்ல; வரப்போகும்  நிகழ்வுகளையும்  வாய்விட்டுக்  கூறும்  வரதன். ஆலவட்டக்  கைங்கர்யம்  செய்த  திருக்கச்சி நம்பியிடம்  நாளெல்லாம்  பேசியவனல்லவா?

விந்தியமலைக்  காட்டில் வழிதெரியாமல்  நின்றபோது, வேட்டுவ  வடிவில் வழிகாட்டி  அழைத்து வந்த வரதன். இங்கே  “யதிராஜர்” என்று நாமகரணம்  செய்தருளினான்.

வாக்கின்  தேவியான  வாணியோ, பிரம்ம  சூத்திரத்துக்கு  அவர் அருளிய  விரிவுரையைக் (பாஷ்யம்) கண்டு  ஆனந்தித்து,  “பாஷ்யகாரர்”  என்றே  ஆசி  கூறினாள். சொல்லாகவும், அதன்  பொருளாகவும்  விளங்குகின்ற  வாணியின்  வார்த்தைகளுக்கு மேல்  வேறென்ன  வார்த்தை  மகுடமாக  விளங்க  முடியும்!குறிப்பு:

திரு. கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன், எழுத்தாளர்.

நன்றி: கல்கி தீபாவளி மலர்-2014.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக