திங்கள், 20 ஜூன், 2016

யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -1

-கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்ராமானுஜர்   என்பது  வெறும் சொல் அல்ல; திருமேனி  கொண்டு உலவிய  ஒருவரைக்  குறிக்கின்ற  வார்த்தை  அல்ல;  அந்தச்  சொல்லே  ஓர்  இயக்கம்; தொண்டு!  120 ஆண்டுகள்  எந்த திசையெங்கும்  உலவிப்  பதிந்தன அந்தத்  திருப்பாதங்கள்.


 “நாராயணா என்கிற  நாமத்தைச்  சொல்பவர்களெல்லாம்  அவன் அடியார்கள்; அந்த அடியார்களுக்குள்  பேதமில்லை” என்று காட்டிய அருளாளர் அவர்; காருண்ய முகிலாய்க்  கவிந்து  அருள்மழையாய்ப்  பொழிந்து, பிறவி வெம்மையால்  வாடித்  தவித்த  ஜீவப்  பயிர்களுக்காகப்  பெருகியது  அந்தப்  புனித நதி.

அவதாரங்களை  மேற்கொண்டு  மாந்தரையெல்லாம்  ஆட்கொண்டு  மதிநலம் தந்து  காத்தருள  முனைந்தானாம்  பகவான். அவனாலும் அதில் வெற்றி  கொள்ள முடியவில்லை. அப்படியிருக்க , ராமானுஜர்  மிக  எளிதாக  பக்தர்களை  அடியார்களாகப்   பரிமளிக்கச்  செய்கிறார். இது  எப்படி  என்று  பகவானுக்கே  ஆச்சரியம். அதை  அவரிடமே  கேட்டான்.

 “எம்மால் இயலாத ஒன்றை, உம்மால்  எளிதாகச்  செய்ய முடிகிறதே? இது  எப்படி?”- கேட்டவன்  திருக்குறுங்குடி நம்பி.

 “உனக்குப்  புரியாததா?  பொன்றச் சகடம் உதைத்தவன் ; சங்கம்  முழங்கிப்  போர் முடித்தவன்; கீதை  விளக்கி  ஞானம் சொன்னவன்; ஓயா லீலைகளால்  அருள் பரப்பும்  மோகனன் . விளக்கத்துக்கு  வினா  உண்டா? இது  என்ன  விளையாட்டு?” என்று கேட்டார்  ஆச்சார்யர்.

நம்பி  சொன்னான்:  “ஏன்  விளையாடலாகாதா?  யசோதையால் கட்டப்பட்டதும், ஆய்ச்சியருடன் ஆடியதும்கூட  அடியவனுக்கு  ஆனந்தம்தான். உயர்வில்  ஏது  சிறப்பு? தாழ்வில்தான்  இருக்கிறது தர்மம் . கீழ்நோக்கிப்  பெய்யும் மழைதான்  நலம்;  கீழ் நோக்கிப்  பாயும்  அருவிதான்  பயன்; எண்ணங்களில்தான்  கீழ்நோக்கம்  பிழை; அருளில் கீழ்நோக்கம் தானே  உயர்வு”.

 “பகவானே ...  சொற்களின்  சூட்சுமம் நீ. வார்த்தைகளுக்குள்  வளர்ந்து ஆடும்  சூத்திரம்  நீ. உன்னிடம்  வாதிக்க  முடியுமா? விளக்கத்தான்   முடியுமா?” -நெகிழ்ந்து பேசினார்  ஆச்சார்யர்.

 “முடியும் ...முடியும்...உம்மால்  முடியும்..  ஏனென்றால்  நம்மால்  இயலாததை ஒன்றைச்  செய்ததால் , நீரே  இப்போது  குரு; நாம் சீடன்”.

நம்பியின்  எளிமை  ராமாநுஜரைச்  சீண்டியது;  அவரது  உரையாடலோ  என்னவோ ... அவருக்குள்ளும்  குறும்பு  குடிகொண்டது. அவர் சொன்னார்:

 “அப்படியானால்  ஆச்சார்யனும்  சிஷ்யனும்  இருக்க வேண்டிய முறையில் அல்லவா இருக்க  வேண்டும்!”

மறுகணம், எம்பெருமான்  தரையில்  எழுந்தருளினான் . ஸ்ரீமத்  ராமானுஜர்  ஆச்சார்ய  ஸ்தானத்தில் மந்திரத்தால் அறியப்படுபவனுக்கு, மந்திர வடிவாகவே  திகழ்பவனுக்கு  அந்த  மந்திரத்தை  உபதேசித்தார்.

பகவானுக்கு  எல்லாரும்  தன்னைத்  துதிப்பதிலேயே  மகிழ்வது  மட்டும்  பிடிக்கவில்லை. அந்தப்  பக்தர்களுக்கும்  தொண்டனாக, தாசனாக இருப்பதுதான்  தனக்கு  உகந்தது  என்பதை  உணர்த்தவே  சீடனாக  இருந்து மந்திரோபதேசம்  பெறுகிறான்.
    
இன்னொரு  சுவாரஸ்யமும்  இங்கு  உண்டு. ஒரு நாள்  நீராடி வந்த  ராமானுஜர், திருமண்  இட்டுக்கொள்வதற்காகத்   திருமண்  பெட்டியைத்  தேடினார். அதைக்  காணவில்லை. உடனே ,  “வடுகா” என்று  சீடனை  அழைத்தார் . அடுத்த  நொடி, குறுங்குடி  நம்பியே   வடுகனின்  வடிவில். திருமண்  பெட்டியோடு  வந்து நின்றான். தாம் இட்டுக்கொண்டதோடு,  சீடனாகி  வந்தவனுக்கும்  திருமண்  விட்டுவிட்டார். ஆலயத்துக்குள்  சென்று  பார்த்தால்,  அப்போது இட்ட  திருமண்  ஈரம்  காயாமல்  நின்றார்  பெருமாள். பற்றுக்கோடாய்த்  திகழ்பவனுக்கு  நெற்றிக்கோடு  இடுவது  என்பது  சாதாரண  விஷயமா  என்ன? 

இந்தத் திருக்குறுங்குடி  விசேஷமான  திருத்தலம். திருமங்கை  ஆழ்வார்  பரமபதம்  ஏகியது  இங்குதான் . அவருடைய  திருவரசு  இங்குதான்  அமைந்திருக்கிறது.குறிப்பு:


திரு. கே.ஆர்.ஸ்ரீநினிவாச ராகவன்,  எழுத்தாளர்.

நன்றி: கல்கி  தீபாவளி மலர்-  2014.         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக