வியாழன், 16 ஜூன், 2016

என்ன செய்தார் ராமானுஜர்?


-எல்.ஸ்ரீதரன் 





என்ன செய்தார் ராமானுஜர்? இதோ பதில்கள்...

1. ஆலய நிர்வாகத்தில் பெண்கள்...

1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம், பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்கள் கொடுத்தவர் ராமானுஜர்.

  • அத்துழாய்,
  • ஆண்டாள்,
  • பொன்னாச்சி,
  • தேவகி,
  • அம்மங்கி,
  • பருத்திக் கொல்லை அம்மாள்,
  • திருநறையூர் அம்மாள்,
  • எதிராச வல்லி…
-என்று எத்தனை எத்தனை பெண்கள், அவர் அரங்கத்து குழாமில்!

பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!


2. இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்துக் கோயிலில் பூஜை!

அரங்கன் காலடியில், ‘துலுக்கப் பொண்ணு’ பிரதிஷ்டை…கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா, அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?

அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேங்கிறது! ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?

அரங்கனுக்கு லுங்கி கட்டி,
ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே!
எந்த சாஸ்திரத்தில் உள்ளது?
எந்த ஆகமத்தில் உள்ளது?

துலுக்க நாச்சியாரைக் கொண்டாடிய
எங்கள் சமரச சன்மார்க்க வள்ளல்
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

3. மேலக்கோட்டையில் தலித் ஆலயப் பிரவேசம்…

இன்றைக்குப் பெரிய விஷயமில்லை!
ஆனால் 1000 ஆண்டுக்கு முன்னால்?

இன்றைக்கும்… கண்டதேவி ஊரில், தலித்துக்கள் தேர் இழுக்க முடியாமல், ஆயிரம் நாடகம் நடத்தப்படுகிறது! அரசே ஒன்று செய்யும் முடியாத நிலைமை!

ஆனால் ஆயிரம் ஆண்டுக்கும் முன்னால்...

காந்தியடிகள் ‘ஹரிஜனம்’ என்ற வார்த்தையை உருவாக்கும் முன்னால்…

மேலக்கோட்டையில் அனைவரையும், ‘திருக்குலத்தார்’ என்று அழைத்து.ஆலயத்தின் உள்ளே நுழைத்துக் காட்டிய வள்ளல்…

சாதி இல்லா இறைமையை சாதித்துக் காட்டிய..
இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

4.  சாதி பாராத தவசீலர்

திருக்கச்சி நம்பிகளின்  சாதி பார்க்காது, அவரை வீட்டுக்குள் உணவருந்தி வைத்து,  தன்னை அவர் சீடனாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினாலும்,
அவர் உண்டதைத் தானும் உண்டு, சீடத் தன்மையாச்சும் ஏற்றிக் கொள்வோம் என்று எண்ணி…

அதனால் தன் ஆச்சாரம் மிக்க மனைவியால், குடும்பத்தில் குழப்பம்  ஏற்பட்டு…

எம்பெருமானின்  அடியவருக்காக, குடும்ப வாழ்க்கையை விட்டு,  ஸ்ரீவைஷ்ணவத்தையும், சம்பிரதாயத்தையும் காக்க நின்ற…
இராமானுசன் உள்ளத்தை என்னவென்று சொல்லுவது?

இராமானுசன் உள்ளமே தஞ்சம்!
5. பணிவுடைமையின் உச்சம்!

எங்கோ வயல் வேலை செய்யும் ஒரு விவசாயியின் தாள் பணிந்த சீலர் ராமானுஜர்.

யாத்திரை போகும் போது, சாலையில், திருப்பதிக்கு எந்த வழியப்பா? என்று கேட்டதற்கு.. அவனும் வழி சொன்னதற்கு…

மோட்சத்துக்கு வழி காட்டி நிற்கிறான் வேங்கடவன்! அந்த வழிகாட்டிக்கே, வழிகாட்டிய விவசாயி இவன்…என்று,  ஒரு வேளாளனைக் கீழே வீழ்ந்து வணங்கிய வள்ளல்தான் நம்  ராமானுஜர்…

இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!
6. ஆண்டாளின் அண்ணன்

எப்போதோ..  ஆண்டாள் பாடிய பாட்டு:
“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”

அந்த வேண்டுதல் பாட்டோடு முடிந்து போயிருக்கும்!

கோதை  ‘பொய்’ சொல்லி விட்டாள்! சும்மாவேனும் வேண்டிக் கொண்டாள்,   வேண்டுதலை நிறைவேற்றவில்லை என்ற பேர் வராது, அந்த வேண்டுதலைக் காத்துக் கொடுத்தார் ராமானுஜர்!

ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காவது தோன்றிற்றா?

வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது,  அதை பக்தியோடு  சுவாசிக்கும் உள்ளம்…

இராமானுசன் கருணையுள்ளமே தஞ்சம்!
7. குழந்தை உள்ளம்

குழந்தைகள் ஆடும்  ‘சொப்பு’ விளையாட்டுப் பெருமாளை ஊரறிய கீழே விழுந்து கும்பிட்ட அந்த மெல்லிய உள்ளம் வேறு யாருக்கு வரும்?

அரங்கன் ஆலயத்தில் ஆகமவிதிகளை  ஏற்படுத்திய ராமானுஜர்,  அரங்கத்தில் காவிரிக்கரையில் ஆகமம் தெரியாத, சிறிய குழந்தைகளின், சொப்பு விளையாட்டுப் பெருமாளுக்கு மரியாதை கொடுத்து விழுந்து வணங்கினார்!

வேதத்துக்கு பாஷ்யமும் எழுத வல்ல வேதாந்த உள்ளம்!

அதே சமயம், தமிழ் அன்பினால் கரைந்து வாழும் ஆழ்வார் உள்ளம்!

இரு உள்ளங்களும் ஒருங்கே பெற்ற உடையவர்...

இராமானுசன் நெஞ்சமே  தஞ்சம்!
8. மரபைக் காத்த மாண்பு

திருமலை திருப்பதியில் எம்பெருமான் திருவேங்கடமுடையான்.
அதுதொடர்பான சர்ச்சை எழுந்தபோது, அவன் தமிழ் முல்லைத் தெய்வமான மாயோன் திருமாலே என்று, புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், என்று சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தரவு காட்டி வீண்  சச்சரவுகளை அன்றே ஒழித்துக் கட்டிய பான்மை…

அப்பனுக்குச் சங்காழி அளித்த அண்ணல்
இராமானுசன் திருஞானமே தஞ்சம்!
9. திக்விஜயத் திருவடிகள்...

இன்றைக்கு அனைத்து மடாதிபதிகளும், சொகுசு வாகனங்களில், பல்லக்கில், செல்கிறார்கள்!  கேட்டால் பட்டினப் பிரவேசமாம்!

ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் 120  வருடங்களும், கால்நடையாகவே அலைந்து அலைந்து,  ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்த கால்கள்!

சோழன் துரத்தத் துரத்த ஓடிய கால்கள்!
மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெற, வடநாடு ஓடிய கால்கள்!

திருப்பதியில் பெருமாளா? சிவனா? என் முருகனா? என்று வம்பு வந்த போது, வயதான காலத்திலும், அங்கு ஓடிய கால்கள்!

திருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்த கால்கள். அங்கு கிடைத்த மந்திரத்தை கோபுரத்தின் மேலேறி ஊருக்கே வெட்ட வெளிச்சம் ஆக்கிய கால்கள்!

சொகுசான மடாதிபதியாய் இருக்காது…
அலைந்தே திரிந்த அந்தத்  ‘திருவடிகள்’.

இராமானுசன் திருவடிகளே தஞ்சம்!

உய்ய ஒரு வழி உடையவர் திருவடியே!
 ராமானுஜா ராமானுஜா!



குறிப்பு:

திரு. எல்.ஸ்ரீதரன் அவர்களின் வாட்ஸ் அப் தளத்திலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட கட்டுரை இது...
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக