ஞாயிறு, 26 ஜூன், 2016

பகவான் ராமானுஜரின் காலடிச் சுவட்டில் சுவாமி விவேகானந்தர்

-முனைவர் இரா.இளங்கோ

 

தாழ்த்தப்பட்டவர்கள் உயர வேண்டும்; ஆனால் ஆன்மிகத்தை அழித்தல்ல.

ஆன்மிகம் என்பது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் - இவற்றை மனதினின்று துப்புரவாகத் துடைத்து விடுவது.

ஆன்மிகம் என்பது தன்னை நல்வழிப்படுத்துவது.

ஆன்மிகம் என்பது சுயநலமின்மை.

ஆன்மிகம் என்பது மனிதனில் தெய்வத்தை காண்பது.

ஆன்மிகம் என்பது மனிதனுக்கு சேவை செய்வது;  அதுவே உண்மையான தெய்வ சேவை.

-இதுவே ராமானுஜ- விவேகானந்த தத்துவ அஸ்திவாரம்.

 “ஏழையின் துயரைக்கண்டு எவனுடைய கண்களில் கண்ணீர் கசிகின்றதோ, அவனே உண்மையான வைணவன்” 
-  இது ராமானுஜர்.


  “இரக்கப்படுங்கள் மனிதர்களே, இரக்கப்படுங்கள் ! ஏழைகளுக்காக இரக்கப்படுங்கள்! அறியாமையில் அழிந்திகிடப்பவர்களுக்காக இரக்கப்படுங்கள்! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இரக்கப்படுங்கள்! எதுவரை ?  உங்கள் நெஞ்சம் உடையும் வரை! உங்கள் தலை சுற்றும் வரை!  நீங்கள் பித்து பிடித்தவர் ஆகும் வரை இரக்கப்படுங்கள்! 
 -இது விவேகானந்தர்.

வைஷ்ணவ தத்துவத்தை உணர்ந்த மகான்கள் இந்த இருவரும்.

*** 

தாழ்த்தப்பட்டவன் உயர வேண்டும் - கல்வியில், கலாச்சாரத்தில், பொருளாதரத்தில்;  இந்த உயர்வுக்கு பக்கபலமாக ஆன்மிகம் இருக்க வேண்டும்.

ஆன்மிகம் என்ற அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட வளர்ச்சியே உறுதியாக இருக்கும்.  ஆன்மிகம் இல்லாத வளர்ச்சி, அஸ்திவாரம் இல்லாத மாளிகை நொடிப்பொழுதில் சிதைந்துவிடும்.

இந்த தாரக மந்திரத்தை மனதில் கொண்டு சமுதாயத்தைப் பார்த்தார் ராமானுஜர்.

சாதி, சம்ப்பிரதாயங்கள்;  தாழ்த்தப்பட்டவன- உயர்ந்தவன்; தீண்டத்தகாதவன்- பார்க்கத்தகாதவன் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டு புரையோடிப்போன சமுதாயம்.

காலங்காலமாக நடைமுறை வாழ்விலே ஊறிப் போயிருந்த இந்த உணர்வுகள் முறையானவையே என்று முரண்டு பிடித்த சமுதாயம்.

இதினின்று சற்று முரண்பட்டு சிந்தித்தாலும் அது தெய்வ குற்றம் என்ற மூடநம்பிக்கை வேர்விட்டிருந்தது.

ஆதி சங்கரர் புலையனிடம் சிவனைப் பார்த்தாலும் அதுகூட அவருக்கு மட்டுமே பாடமாக இருந்தது.

ஆன்மிகப் பெரியவர்கள் உயர நின்று உரக்கச்சொல்லி நலிந்தவனிடம் அச்சேதியை சொல்லவில்லை.

அது தனிப்பட்ட நபரின் ஆன்மிக முன்னேற்றத்திற்கே வழிகோலியது .

ஆனால் ராமானுஜர் இதினின்று வேறுபட்டார். வித்தியாசமாகச் சிந்தித்து செயல்பட்டார். ஏழைகளே அவர்தம் கண்ணில் பட்டனர். நலிந்தவன் தலை நிமிர அவர்தம் குருவின் முன் தலைகுனிந்தார். பதினெட்டுமுறை பக்திப்பூர்வமாக நடந்தார்,  ஸ்ரீபெரும்புதுரிலிருந்து திருக்கோஷ்டியூர் வரை

 “ஓம் நமோ நாராயணா” என்ற தெய்வீக மந்திரத்தின் ரகஸ்யார்த்தங்களை ராமானுஜருக்குச் சொல்லி அதை மற்றவர்களுக்கு சொல்லக்கூடாதென்று கட்டளையுமிட்டார் திருக்கோஷ்டியூர் நம்பி. சொன்னால் பாழும் நரகத்திற்குச் செல்வாய் என எச்சரித்தார். ஆனால் ராமானுஜரோ கோபுர உச்சிக்குச் சென்று மந்திரத்தை உரக்கச் சொல்லி சாமானியனுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

அவர் சொன்னது தன்னம்பிக்கை ஊட்டும் செய்தி.

தன்னில் இறைவனைக் காணும் செய்தி.

மற்றவரிடம் தன்னைக் காணும் செய்தி.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்னும் உன்னதச் செய்தி.

கலியுகத்தைக் காக்கும் செய்தி.


*** 
மந்திர ரகஸ்யார்த்தங்கள் மனதினில் பாய சாமானியன் விழித்தான் அன்று.

பசித்தவன் வயிறு உணவால் நிரம்பலாம். ஆனால் சற்று நேரத்தில் அந்த ஏழை மீண்டும் உணவிற்கு கையேந்துவான். வீழ்ந்தவனை தூக்கி விடலாம். ஆனால் மீண்டும் உதவும் கரங்களை அவன் எதிர்பார்ப்பான்.

ஆனால் தன்னம்பிக்கை எனும் அருமருந்தும், தாரக மந்திரமும் அவனுக்கு நிரந்தரத் தீர்வு தரும். அப்போது  அவன் தன்னை அறிவான்;  தன்னலம் மறப்பான் .

சடங்கும், தபசும் கலியுகத்துக்கு உகந்த கர்மா அல்ல; தன்னம்பிக்கை ஊட்டும் ஆன்மிக சேவைதான் கலியுகத்திற்கு தீர்வு என்பது வேதவியாசரின் கணிப்பு.

உலகம் பொய், அது ஒரு சொப்பனமே என்னும் கருத்தை நிராகரித்து உலகம் உண்மையே, அதில் மனிதன் முழுமையாக கைங்கரியம் செய்து இறைவனை அடைந்து முக்தி பெற வேண்டும் என்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவம்.

அதையே அவர் கோபுர உச்சியினின்று மக்களை கூவி அழைத்துச் சொன்னார்.

ஆனால் இதே கருத்தை வலியுறுத்த பாரத தேசம் ஒன்பது நூற்றாண்டுகள் காத்திருக்க நேர்ந்தது-

-விவேகானந்தருக்காக!

*** 

இக்காலகட்டத்தில் எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள்!

எவரும் ராமானுஜரின் சமூக சீர்திருத்தத் தத்துவத்தை கையில் எடுக்கவில்லை!

அவர்களது சமூக சீர்திருத்தம் ஆன்மிகம் என்னும் அடித்தளமற்று இருந்தது. எனவே நொடிப்பொழுதில் சிதைந்தது.

புத்தர் முதல் ராம்மோகன் ராய் வரை சாதீயத்தை மதத்தின் அங்கமே என்று தப்புக்கணக்கு போட்டு சாதியத்தை அழிக்க முற்பட்டு மதத்தையும் காயப்படுத்தினர்.

சாதிப்பிரிவு ஒரு சமுதாய அமைப்பே. அதன் நோக்கமும் நிறைவேறவில்லை. அது அழிக்கப்படவும் இல்லை. அதன் துர்நாற்றம் இன்னும் பாரத தேசத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. இழந்த தன்னம்பிக்கையையும், அழிந்த சமுதாய தனித்துவத்தையும் ஆன்மிகமே மீண்டும் கொடுக்க இயலும். எந்த அமைப்பும், அது மதமானாலும், அரசியலானாலும், பொருளாதாரமானாலும், கல்வியானாலும், ஆன்மிகத்தைச சார்ந்து இராவிடில் நீண்ட காலம் நிலைத்திருக்காது.  அதன் நோக்கமும் நிறைவேறாது.

இதைப் புரிந்து கொள்ளாத அரசியல்வாதிகளும், சீர்திருத்தவாதிகளும் நலிந்தவன் மனதில் நஞ்சை விதைத்து, போராட்ட உணர்வையும், வன்முறையையும் தூண்டி, தங்கள் பணப்பையை நிரப்பவும், அரசியல் ஆதாயம் பெறவும் செயல் புரிகின்றனர். தாழ்த்தப்பட்டவன் மீது ராமானுஜ- விவேகானந்தரின் உண்மையான அக்கறை இவர்களிடம் துளியும் இல்லை.

நமது கலாச்சார பொக்கிஷமான வேதாந்தக் கருத்துக்கள் சமுதாயத்தின் மூலை முடுக்குகளுக்குச் சென்றடைய வேண்டும் என்பதில் இருவரும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அடர்ந்த காடுகளிலும், இருண்ட குகைகளிலும் பூட்டி வைக்கப்பட்ட புத்தகங்களிலும் முடங்கிக் கிடந்த இந்த அரிய கருத்துக்களை வெளிக்கொணர்ந்து சாதாரண ஜனங்களுக்கு கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். இந்த உன்னதமான கருத்துக்கள் அவர்களின் மனதில் பட்டுத் தெறித்து வெளிவரும்போது புத்துயிர் கொண்டு ஜொலிக்கின்றன.

விவேகானந்தர் அவற்றை ஜீரணித்து, தன்மயமாக்கி, மெருகேற்றி நமது நடைமுறை மொழியில் இயம்புகிறார்.

 “தைரியம் உன் நாடி, நரம்புகளில் பாயட்டும்; ரத்தத்தில் ஓடட்டும்; துணிவைத் துணை கொண்டு வாழ்க்கைப் போராட்டங்களை சந்திக்கக் கடவாய்; உன்னில் நிறைந்திருக்கும் தெய்வத்தை உணர்ந்து கொள்;  அது உனக்கு யானை பலம் கொடுக்கும்; தன்னம்பிக்கை உன்னில் மலரும்"

-என்றார்.

அத்தோடு அவர் நிறுத்தவில்லை. இந்த உணர்வு உலகத்திற்கு போதிக்கப்பட்டால், மூன்றே மூன்று நாட்களில் இப்பூமியிலுள்ள துக்கம், துயரம், நோய்நொடி அனைத்தும் பறந்து விடும். இதுவே இந்த ஆன்மிக வைத்தியரின் மருந்துச் சீட்டு சொல்லும் சிகிச்சை. இந்த நடைமுறை வேதாந்தமே அவர்களின் உயிர்மூச்சு.  
***
 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் திருநாரயணபுர கோயிலினுள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றார்.  உணர்வுகளும், சடங்கு, சம்ப்பிரதாயங்களும் உச்சத்தில் இருந்த காலம் அது. பல இயக்கங்களும் இப்போதும் இதைச் செய்ய போராடிக் கொண்டிருந்தாலும், முதலில் இதைச் செய்து சாதித்தவர் நமது ராமானுஜரே!

பிள்ளை உறங்கா வில்லிதாசன் என்ற பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் தன் காமக்கிழத்தி,  தாசி மனைவி பொன்னாச்சியின் காந்தக்கண்களால் கவரப்பட்டு சீரழிந்த காலத்தில் அவரை காமத்தீயினின்று மீட்டு,  ‘பகவானின் அழகிய கண்களைப் பார்! அதில் உன் மனதை லயித்துவிடு! பரம்பொருளின் ஆன்மிக அழகில் நாட்டம் கொள்! உயர்ந்த எண்ணங்கள் உன் மனதை நிரப்பட்டும்! மனது உயர்ந்த பொருளை நாடட்டும்! உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று அவர்தம் காம உணர்வுகளை மடை மாற்றம் செய்து ஆன்மிகத் தஞ்சம் கொடுத்தவர் ராமானுஜரே!

அப்போதே ஒரு கிரீஷ் சந்திரரும், ஒரு குருமகராஜும் இருந்தார்களோ? வில்லிதாசனும், பொன்னச்சியும் மடிந்தபோது  உயர்குலத்தவர் முகம் சுழிக்கும் வண்ணம், அவ்விருவருக்கும் பிராமணருக்குச் செய்யும் சடங்குகளையும், மரியாதையையும் செய்தார் ராமானுஜர். சாமனியனிடமும் பகவானைக் காணும் விழிப்புணர்வு முயற்சி அப்போதே தொடங்கி விட்டதே!

விவேகானந்தரின் கண்களில் இருந்த அஞ்ஞானத்திரையை அகற்றியவள்கூட அரசனின் சபையில் ஆடியவொரு நடன மாது தான்! யார் வேண்டுமானாலும் நம்மை அஞ்ஞான உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பலாமா!

பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பி ராமானுஜரின் குரு! குருவின் மனதில் தான் பிற்குலத்தைச் சேர்ந்தவன் என்னும் தயக்கத்தைப் போக்கி அவரிடம் வைஷ்ணவ ரகஸ்யார்தங்களைக் கற்றார் ராமானுஜர். ஆச்சரியம் ! திருக்கச்சி நம்பி ஒவ்வோர் இரவும் வரதராஜப் பெருமாள் கோயிலில் பகவானுடன் வைஷ்ணவ தத்துவங்களை விவாதித்துக் கொண்டிருப்பவர்! பகவானுடன் நேரடித்தொடர்பு ? இதற்குமேல் ஒரு குருவுக்கு என்ன தகுதி வேண்டும்? பிற்குலம் பகவானுடன் பேசத் தடை விதிக்கவில்லையே?

இதே திருக்கச்சி நம்பியை ஜாதியின் பெயரால் அவமதித்த தன் மனைவி தஞ்சமாம்பாளை சாதுரியமாக அவர்தம் தந்தையின் வீட்டில் தஞ்சமடையச் செய்தார் ராமானுஜர். இது இறைவனின் திட்டமோ? கிருகஸ்த ராமானுஜர், சன்னியாசி ராமானுஜராக பாரத தேசத்தை வலம் வந்து பக்தர்களை உய்விக்கச் செய்ய வேண்டும் என்பது தானே இறைவனது திட்டம்!
  ***
பீபி நாச்சியாரையும், துலுக்க நாச்சியாரையும் பகவான் ரெங்கநாதருக்கு அருகே வைத்து அழகு பார்த்தவர் ராமானுஜர். விசாலமான மனதுதான்!

 ‘நாங்கள் அனைத்து மதங்களையும் சத்தியமானவை என்றே நம்புகிறோம்’ என்று சிகாகோவின் சர்வமத மகா சபையில் முழங்கிய ஒரே மகான் விவேகானந்தரே!  ‘வேதாந்த அறிவும், இஸ்லாமிய உடலும் பாரதத்தை பலப்படுத்தும்’ என்றவரும் அவரே !

ஸ்ரீரங்கம் சுவாமி ரங்கநாதர் கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்திய ராமானுஜரின் ஆற்றலை,  விவேகானந்தரிடம் அவர் ராமகிருஷ்ண இயக்கங்களை ஸ்தாபித்தபோது காண முடிகிறது. பலரையும் ஒன்று சேர்த்து, ஒன்றாக இணைத்து ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து செயல்படும் முறையையும் இருவரிடமும் காண முடிகிறது.
சேர்ந்து சந்திப்போம்.
சேர்ந்து சிந்திப்போம்.
சேர்ந்து செயல்படுவோம்.
-என்ற உன்னத உணர்வு அவர்தம் செயலில் தெரிகிறது.

வியக்கத்தகு அரவணைப்பு உணர்வு!

 ***

சபிக்கும் வார்த்தைகளை அவர்தம் உதடுகள் என்றும் உச்சரிக்கவில்லை. வாழ்த்தும் வார்த்தைகள், உற்சாக வார்த்தைகளே அவர்களின் உதடுகள் உதிர்த்தன. அதுவே அவர்களது வெற்றியின் ரகசியம்.

இவ்விருவரின் அவதார மகிமையை உணர்ந்தவர்கள் சுவாமி நாராயண குருவும், சுவாமி சித்பவானந்தருமே.

தாழ்த்தப்பட்ட ஈழவ சமுதயத்திற்கு ஆன்மிக அடிப்படையில் தன்னம்பிக்கை ஊட்டி  நம்பூதிரிகளுக்கு இணையாக உயர்த்தினார் நாராயண குரு. அவர்களின் உள்ளத்தில் மேல் ஜாதியினரின் மேல் வெறுப்பு என்னும் விஷச்செடியை வளர்க்கவில்லை. தன்னம்பிக்கை என்னும் உணர்வை ஊட்டி,  உற்சாகப்படுத்தி உயர்த்தினார் நாராயண குரு.

இந்தப் பெரியவரின் வருகையை முன்னமே யூகித்தவர் விவேகானந்தர்தான். நடமாடும் துறவியாக விவேகானந்தர் பெங்களூர் வந்தபோது ஆங்கே டாக்டர் பால்ப்பு என்னும் கேரள ஈழவர் தங்கள் சமுதாயம் படும் அடக்குமுறைக்கும், துன்பத்திற்கும் விடிவு எப்போது? என்று விவேகானந்தரிடம் கேட்டபோது அவர் பரிவோடு  “பொறுத்திரு! விரைவில் உங்கள் சமுதாயத்தில் ஒரு மகான் பிறந்து உங்களை உய்விப்பார்” என்று உறுதியளித்தார்.

அது மட்டுமல்ல!  “நீங்கள் கொடியாக இருக்கும்வரை எதையாவது பற்றிப் படர வேண்டும் என்ற எண்ணமே இருக்கும். நீங்கள் செடியாக, மரமாக தன்னம்பிக்கையோடு வளர வேண்டும்” என்றார். அந்த தீர்க்கதரிசியின் வாக்கிற்கிணங்க நாராயணகுரு அவதரித்து அதை நிறைவேற்றினார்.

ராமானுஜ- விவேகானந்தரின் தத்துவத்தின் அடிப்படையில் சுவாமி சித்பவானந்தர் நிறுவிய கல்வி ஸ்தாபனங்களில் ஆன்மிகத்தை ஆதாரமாகக் கொண்ட வாழ்க்கைப்பயிற்சி உன்னத இளைஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

தடைகளை மீறி  ‘காயத்திரி’ ஜபம் இக்கல்வி நிலையங்களின் பிரார்த்தனைக் கூடங்களில் அனைத்து மாணவ, மாணவியராலும் உணர்ந்து, ஓங்கி உச்சரிக்கப்படுகின்றன.

சுடர்க்கடவுளின் மேலான ஒளி அங்கு தியானிக்கப்படுகிறது. அறிவு கூர்மையாகத் தீட்டப்படுகிறது. இதை உணர்ந்த அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாணவ, மாணவியர் உன்னதமானவர்களாக, பண்பட்டவர்களாக பாரத தேசத்தின் கலாச்சாரத்தை உணர்ந்தவர்களாக உலகில் வலம் வருகின்றனர்.சமுதாயத்தைச் செம்மைப்படுத்துகின்றனர்.

இதுவே ராமானுஜ, விவேகானந்தரின் தாக்கம்.குறிப்பு: 

முனைவர் திரு. இரா.இளங்கோ,  திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின்  முன்னாள் துணை முதல்வர்.

 காண்க: Swami Vivekananda in the foot-steps of Bhagwan Ramanuja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக