வெள்ளி, 13 மே, 2016

இராமானுஜர் என்ற புரட்சித் துறவி.-.பூமாகுமாரிவியத்தகு மாற்றத்தைக் கொண்டு வருபவரே புரட்சியாளர். ஸ்ரீ இராமானுஜர் (பொ.யு.பி. 1017-1137 ) என்ற ஹிந்து இறையியலாளரும் தத்துவவாதியும் ஆனவர், ஸ்ரீ வைணவ தத்துவத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் துறவி ஆவார்.

துறவியில் என்ன புரட்சித் துறவி

சிறு வயதில் குரு யாதவ பிரகாசர் அவர்களிடம் இராமானுஜர் பாடம் கற்றுக்கொண்டார். எம்பெருமான் நாராயணனின் கமல விழிகளைப் பற்றிக் கூறுகையில் 'கப்பியாசம் புண்டரி எவம் அக்ஷ்ணா' என்று வருகிறது. ஆசிரியர் அர்த்தம் கூறுகையில் குரங்கின் ஆசனவாயைப் போன்ற சிவந்த கண்கள் என்று சொல்ல- அதை ஏற்க மறுத்த இராமானுஜர், பதினாறு வயதில் விளக்கம் சொன்னார். சூரியனால் அன்றலர்ந்த தாமரை போன்ற கண்கள் என்று மங்கலான அர்த்தத்தில் தான் சொல்லப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர், குருவை மிஞ்சிய சிஷ்யர் இருக்கப் பெறுவது ஒரு புரட்சி அல்லவா?

திருக்கச்சி நம்பிகள் என்ற பெரிய வைணவ குருவிடம் இராமானுஜர் பாடம் சொல்லிக் கொள்ளும்போது,  அவர் மணம் முடித்து மனைவியுடன் வாழ்ந்து வந்தார். பெருமாள் மீது அளவு கடந்த பிரியமும், நல்ல ஞானமும் வாய்க்கப்பெற்ற திருக்கச்சி நம்பி வைசியர். அவர் தன் வீட்டில் விருந்து உண்டு மகிழ வேண்டும் என ஆசைப்பட்டார் இராமானுஜர்.  நம்பிக்கு அவர் மனைவி பற்றித் தெரியும். இராமானுஜர் இல்லாத நேரமாகப் பார்த்து வந்தார். நடு வீட்டிற்கு வெளியே நம்பியை அமர்த்தி உணவு பரிமாறின இராமனுஜரின் மனைவி அப்படியே அவரை திருப்பி அனுப்பிவிட்டுக் குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாளாம். இம்மாதிரியான ஆசாரங்களை பொதுவாக பிராமணர்கள் எல்லோரும் நம்பிய கால கட்டத்தில்,  இராமானுஜர் மன வருத்தம் அடைந்தார் வைசியர் ஆனாலும் அவரிடம் ஞானம் இருந்ததை அங்கீகரித்தவர் இராமானுஜர், அப்படிப்பட்ட தனது குருவை தன் மனைவி அவமதித்து விட்டதாகவே கருதினார் இராமானுஜர்.

திருக்கச்சி நம்பிகளின் வழிகாட்டுதலின் பேரில ஸ்ரீரங்கம் வந்து பெரிய நம்பியின் முலம்  பஞ்ச சமஸ்காரம்’ பெற விளைந்தார். பெரிய நம்பியின் அவர் மனைவியும் காஞ்சிபுரம் வந்து இராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்துப்போக வந்தனர். இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்தனர்.  பெரிய ஏரியில் பெரிய நம்பி ஸ்ரீ ராமானுஜருக்கு சமஸ்ரயணம் செய்து வைத்தார். பெரிய நம்பியின் திவ்ய பிரபந்தமும், வியாச சூத்திரங்களையும் கற்றுக்கொண்டிருந்த போது, அவருக்கு தனது மனைவியின் பழங்கால கட்டுப்பாடான நடவடிக்கைகள் சரியாகப் படவில்லை. ஒரு முறை பசியுடன் வேலையாள் பணி செய்ய, அவனுக்கு உணவு பரிமாறச் சொன்னார். மனைவியோ, வீட்டில் உள்ளவர்கள் உணவு உண்ட பின்னரே பிராமணர் அல்லாதோருக்கு உணவு பரிமாற முடியும் என பிடிவாதம் செய்தார். பெரிய நம்பியும் அவர் மனைவியும் கிணற்று நீரினால் பிரச்னை வந்ததும் இராமானுஜரிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்றுவிட, இராமானுஜரும் சந்தர்ப்பத்தில் துறவரம் பூண்டு மனைவியை விலகினார். இதுவும் ஒரு பெரிய புரட்சிகரமான விஷயமே.  அந்தக் காலத்தில் ஜாதி பாராமல், ஞானம் இருக்கும் இடத்தை மரியாதை செய்து, அதற்கு மறுத்த மனைவியையே விலக்கி வைப்பதும் பெரும் புரட்சியே.

ஆளவந்தார் மற்றொரு குரு. ஆனால் இராமானுஜருக்கு ஆளவந்தாரிடம் நேரடியாக வைணவத்தைக்கற்கும் வாய்ப்பு கிட்டவில்லை. தூரத்தில் இருந்தே இவர்தான் என் பிரதான சீடன், இவரே வைணவத்தை வளர்த்தெடுப்பான் என அக்குரு மனதில் எண்ணம் வரக் காரணமாக இருந்தது  ஸ்ரீ இராமானுஜரே. சிஷ்யர் மனதில் வைத்து பூஜித்த குரு ஆளவந்தாரை நெருங்கிப் பார்க்கையில் குருவின் உயிர் பிரிந்திருந்தது. மூன்று விரல்கள் மூடி இருப்பதைக் கண்ட இராமானுஜர் விசாரிக்கிறார். அவர் மனதில் நிறைவேறாத ஆசை இருக்கிறதா என விசாரிக்கிறார்.

வியாசன், பராசரன் என இரு குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், நம்மாழ்வாரின் திருவாய் மொழியைப் பிரபலம் செய்தல்,  வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதுதல் என மூன்று நிறைவேறாத ஆசைகள் இருப்பதாக அவர்தம் சீடர்கள் கூறினர்.  மூன்றையும் பெருமாளின் சம்மதத்துடன் நிறைவேற்றுவேன் என சபதம் பூண்டார்; அவற்றை நிறைவேற்றவும் செய்தார் - புரட்சி ஞானி அல்லவா அவர்!

பார்த்து, பேசி, பழகி,  தொண்டு செய்து, ஆசானாக ஏற்று அவரிடத்தில் வித்தை கற்ற எத்தனையோ சீடர்கள் இருக்க, இராமானுஜரைத் தனது வாரிசாக பிரதம சீடராக, தனக்குப்பின் வைணவத்தை சீர் செய்ய வந்த மகனாக ஆளவந்தார் மனதில் ஸ்ரீ இராமானுஜர் தோன்றியதும், அவர் ஒரு புரட்சிகரமான ஞானி என்பதால் தான்.

அதேபோல குருவாக வரித்துக் கொண்டவரின் பூதவுடலில் 3 விரல்கள் மூடியிருப்பது கண்டு, விசாரித்து நான் செய்கிறேன் என சபதம் செய்ததும் ஆளவந்தார் கைவிரல்கள் தானாக நேரானதும் எதனாலே ?  புரட்சி ஞானி பொறுப்பேற்றதாலே!

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்கள் - ஆளவந்தாரின் பிரதான சீடர். அவரிடம் திருமந்திரார்த்தத்தை உபதேசம் பெற வேண்டி இராமானுஜர் நடையாய் நடக்கிறார். சுமார் 18 முறை மறுக்கப்படுகிறது. 18வது முறை  சரி நீ தனியாக வா, சொல்லித் தருகிறேன்” என்கிறார் திருக்கோஷ்டியூர் நம்பி. இவரோ முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகிய இரு பிரதான சீடர்களை அழைத்துச்சென்றார். கேட்ட போது, சந்நியாசி திரிதண்டம், பவித்ரம் இல்லாமல் எப்படி வர முடியும்? இவர்கள் இருவரும் எனது திரிதண்டமும் பவித்ரமும் போலத்தான். அவர்கள் இருக்கும் போதே உபதேசம் செய்யுங்கள் என்று சொன்னார். இதுவும் அன்றைய காலகட்டத்தில மட்டுமல்ல, இன்றும் கூட நம்மில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட பரந்த மனம் வரும்?

இரகசிய உபதேசம் வழங்கப்பட்டதுயாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டார் குரு. ஆனால், நேரே கோவிலுக்குச் சென்ற இராமானுஜர்,  பெரிய திருமந்திரத்தை, அதன் அர்த்தத்தை அங்கிருந்த சகலருடனும் பகிர்ந்து கொண்டார். ஞானம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் அடைபடலாகாது என அவர் ஆத்மார்த்தமாக நம்பினார். அதற்காக சத்தியத்தை மீறிவிட்டாரே? ’பரவாயில்லை, நான் அதனால் நரகம் செல்கிறேன், குரு வார்த்தையை மீறியவனானேன். ஆனால் உங்கள் உபதேசம் இவர்களுக்குக் கொண்டு சேர்ந்த திருப்தி எனக்கு உண்டு, அது கேட்ட இவர்களும் நிச்சயம் மோட்சம் போவார்களே’ என்று தனது குரு திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கேட்டராம். அவர் வாயடைத்து நின்று விட்டார். இது மிகப் பெரும் புரட்சியல்லவா?

பகவத்கீதையின் சிறந்த ஸ்லோகம் சரமஸ்லோகம். அதை கேட்கச் செய்கிறார் இராமானுஜர்.  திருக்கோஷ்டியூர் நம்பியிடமே கற்றுகொள்கிறார் முடிந்ததும், இதை கூரத்தாழ்வானுக்கும் சொல்கிறேனே எனக் கேட்க, ’ஒரு வருஷகாலம் குருவிற்கு சேவை செய்தால் நீ சொல்லிக் கொடு’ என்கிறார். நடக்குமா? ஒரு வருஷத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

எனவே நடைமுறை சாத்தியமாகாது. ஒரு மாதம் உபவாசம்  இருந்து சோதனையில் வெற்றி பெற்றால் உனக்குச் சொல்லித் தருகிறேன் என்று இறங்கி வருகிறார் இராமானுஜர் குருபக்தி, தன்னை வருத்திக்கொண்டு இதற்காக காத்திருத்தல் என எதையும் வேண்டாமெனவும் கூறாமல், மாசோ உபவாசம் செய்வதும் சம்பத்ர சேவைக்கு இணையானதே எனக் கொண்டு அதைச் செய்து முடித்த கூரத்தாழ்வானுக்கு இரகசியம் போதித்தார் இராமானுஜர். இலவசமாக, எதுவும் இன்றி வெறுமனேவும் செய்யவில்லை, அதற்காக குரு சொன்னதை அப்படியே பின்பற்றுவது நடைமுறை  சாத்தியமில்லை என்பதையும் புரிந்துகொண்டு வழிவகை செய்ததும் புரட்சிதானே!

ஆளவந்தான் இறைவனடி சேர்ந்த பின், அவரது சீடர்களுக்கு வழி காட்ட யாருமில்லை.  எப்படியாவது ஸ்ரீ இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு கூட்டி வந்து விட வேண்டும் என தீர்மானித்தனர். இராமானுஜரின் மானசீக குருவல்லவா ஆளவந்தார்?

ஸ்ரீ ஆளவந்தாரின் மகன் திருவரங்க பெருமாள் அரையர்  காஞ்சி சென்று அபிநயத்துடன், மிக அழகான குரலில் பிரபந்தத்தைப் பாடி கவன ஈர்ப்பு செய்வது என முடிவாயிற்று. எல்லோரும் அதற்கு மயங்கினர். புதிலாக ஸ்ரீ இராமானுஜர் அவருடன் ஸ்ரீரங்கம் செல்வது என ஒப்புக்கொண்டனர். தனக்கு மிக மிகப் பிடித்தமான காஞ்சி ஸ்ரீ வரதராஜ சுவாமி திருக்கோவிலை விட்டு, திருக்கச்சி நம்பி அவர்கள் விட்டு, காஞ்சி மக்களின் ஒப்புதலுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார் இராமானுஜர். முதலியாண்டான், கூரத்தாழ்வர், பெருமாள் அரையர் ஆகியோருடன் வந்தவரை, பெரிய நம்பி வரவேற்று காவிரியில் நீராடி கோவிலுக்குச் சென்றார்.

வந்தவர் முதல் பார்வையிலேயே ஸ்ரீ ரங்கநாதரின் கொள்ளை அழகினால் ஆட்கொள்ளப்பட்டார். முதல் அடியாக 'கோயில் ஒழுகு'என்ற ஒன்றை இயற்றினார்- தினசரி பூஜைகள்,  உத்சவங்கள் வருஷம் பூராவும் எவ்விதம் செய்யப்பட வேண்டும்.  இதற்கு ஆதரவு தருவது யார்?  எங்ஙனம்?  என எழுதினார். 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும்,  ஸ்ரீரங்கம் கோவிலில் வழுவாமல் அது இன்றும்  பின்பற்றப்பட்டு வருகிறது. இதனாலேயே அவர் 'உடையவர்' என அழைக்கப்படுகிறார்.

பூஜாகிரமம், உத்சவம் காலங்களில் ஆழ்வார்களின் பாடல்கள் ஒழுங்காகப் பாடப் படுகின்றன. இன்றளவும் பின்பற்றப்படும் எல்லா முறைகளுமே இராமானுஜர் அருளிச் செய்ததே. பாசுரங்கள் இன்னிசையாக எல்லா பெருமாள் கோவில்களிலும் பாடப்பட்டு தமிழகத்தின் எதிரொலித்தது இராமானுஜராலே தான். அவர் செய்த பெரிய புரட்சிகளில் இதையே தலைசிறந்ததாகக் கொள்ளலாம்.

தமிழ் மொழி, புரிந்து இறைவனை வணங்குதல், ஒழுங்காக பூஜைகளைச் செய்தல், எவ்வாறு செய்ய வேண்டும், அதற்கு ஆதாரம்   என சகலத்தையும் யோசித்து, செய்து காட்டி ஆயிரம் வருஷங்களாக நடைமுறையில் இருக்கும் படியான ஒன்றை  சாதாரணர்களால் செய்துவிட முடியாது என்றால், அவர் பெரும் புரட்சியாளரே!

'ஓம் நமோ நாராயணாய'  மந்திரத்தை பக்தர்கூட்டமும் அவருடன் சேர்ந்து சொன்னதால் பழைய கர்மாக்கள் தீர்ந்தன;  அதனால், புதிதாய் சொர்க்கத்தை நோக்கி வழி செய்யப்பட்டதாக,  ஒதுக்கி வைக்கப்பட்டதாய் நொந்தவர்களும் மனம் நிறைந்தனரே , அதுவல்லவா புரட்சி!

 சோழ நாட்டின் மன்னர்கள் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். இராமானுஜரை தர்பாருக்கு அழைத்து மிரட்ட எண்ணினர். கூரத்தாழ்வாரும், பெரிய நம்பியும் செய்த சூழ்ச்சியால் இராமானுஜர் தப்பிக்கிறார். சோழ எல்லையைக் கடந்து செல்கிறார். தொண்டனூரின் ராஜாவின் நட்பு கிடைக்கிறது. தொண்டனூரின் ஏரி மிகப்பெரியது. குறுக்கு அணை கட்ட எல்லா உதவியும் செய்கிறார் இராமானுஜர். ஆயிரம் ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் நலன் காக்கிறது அணை!

திருநாராயணபுரத்தில் (மைசூர் மாண்டியா அருகில்)  காட்டில் விஷ்ணுவின் சிலை கிடைக்கிறது. இஸ்லாமியப் படைவீரர்கள் உத்சவ விக்ரகத்தை டில்லி எடுத்துச் சென்றதை அறிந்த இராமானுஜர், அதை டில்லி சென்று மீட்கிறார். சம்பத்குமாரா என்று அதற்குப் பெயரிடுகிறார். அப்போது சிலர் அவரைத் தாக்கும் போது, அங்குள்ள ஹரிஜனங்கள் உதவியுடன் விக்ரகத்தைக் காப்பாற்றுகிறார். அவர்களைத் 'திருக்குலத்தோர்' என்று மன நெகிழ்வுடன் நன்றியுடன் அழைத்தவர், பெரிய புரட்சி மகானாகத் தானே தோன்றுகிறார்!

இப்படி பல விதமான செயல்பாடுகளில், எண்ணங்களில், நடத்தையில் அவர் புரட்சி ஞானியாக ஒளிர்கிறார். அவரது வாழ்க்கையில் இருந்து ஏதோ ஒரு அம்சத்தையேனும்  நம்மால் பின்பற்ற முடிகிறதா எனப் பார்பதே நமக்கு இவற்றை அறிந்ததன் பலனாகும்.


குறிப்பு:

திருமதி ம.பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும், எழுத்தாளர். திருச்சியில் வசிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக