திங்கள், 16 மே, 2016

ஆயிரம் ஆண்டுகளாக வாழும் ராமானுஜர்!

-ராஜேஷ்ராமானுஜரின் வரலாறு என்பது ஒரு பெரிய மனிதரின் வரலாறு மட்டுமன்று; தமிழகத்தின் ஒரு காலப் பகுதியின் வரலாறும் ஆகும். பல்லவர்களின் செல்வாக்கு குறைந்து சோழர்களின் ஆட்சி மலர்ந்து இருந்தது. அந்த நேரத்தில் சமண பௌத்த நெறிகள் மங்கிப் போய் சைவமும், வைணவமும் வளர்ந்த காலத்தில் தோன்றியவர்தான் ராமானுஜர்.அந்த வரலாற்றோடு இணைந்தே ராமானுஜர் வரலாறும் அமைந்திருக்கின்றது.ஆசை என்னும் ஒரு வேட்கையே மனித வாழ்க்கையின் உயிர் நாடி என்கிறது அதர்வண வேதம். ஆசை என்னும் பற்றே துக்கத்துக்கெல்லாம் வேர் என்பது பௌத்தத்தின் தத்துவம். தோற்றங்களைத் தாண்டி பற்றற்ற நிலையில் பரம் பொருளை உணர்ந்து, நானே அவன் என்னும் இரண்டற்ற ஒருமையைப் பேசுவது அத்வைத சித்தாந்தம். கடவுள் உண்டு, வேதம் உண்மை என்பதுதான் அது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டு மக்களிடையே இருந்து வரும் சமயங்களுக்கு இந்து மதம் என்று பிறநாட்டுக்காரர்கள் பெயரிட்டார்கள். சிந்து நதிக்கு அந்தப் பக்கத்திலுள்ள மக்களை சிந்துக்கள் என்று அழைத்தார்கள். பாரசீக மொழியில்  ‘சி’ என்ற எழுத்து இல்லாததால்,  நம்மை அவர்கள் ஹிந்துக்கள் என்று அழைத்தார்கள்.

மாறும் என்பதே மாறாத விதி. மாறுதல் இல்லாமல் மாறுதல் இல்லை. எனவே எந்த ஒரு சித்தாந்தமும் நிலையானது அல்ல. அது ஒரு காலத்தில் தேயும், மறையும். இல்லை என்றால் மாறும். அந்த மாதிரி நேரங்களில் சில மகான்கள், சில பெரியவர்கள் தோன்றி ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கி பாடுபடுவார்கள். அந்த மாதிரி காலகட்டத்தில் தோன்றியவர் தான் ராமானுஜர்.

 “ஒருவன் தெருவில் விழுந்து, காயமுற்று இரத்தம் சிந்தும்போது, நீயும் இரத்தம் பெருகக் காயமடைந்திருப்பதாய் உணர்ந்தால்தான், நீ வைஷ்ணவன். காயமுற்றவன் வேறொருவன் என்ற உணர்ச்சி உனக்கு ஏற்பட்டால், நீ வைஷ்ணவன் இல்லை. எந்த இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், என் திருமாலுக்கே அது சேரும்” என்று இவர் கூறினார்.

ஸ்ரீசங்கராச்சார்யார், ஸ்ரீமத்துவாச்சார்யார் இருவருக்கும் தன்னைப் பாலமாகக் கொண்டு, ஸ்ரீராமானுஜர் வைணவ நெறியை வகுத்துத் தந்தார். ராமானுஜர் சமயச் சீர்திருத்தம் செய்தவர். பன்மொழிப் புலமை மிக்கவர். சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி, தமிழ் மறையைத் தழைக்கச் செய்தவர். சாதி சமயங்களை அறுத்தவர். சமதர்ம நெறியில் நின்றவர். சங்கடங்களை மற்றவர்களுக்குக் கொடுக்காதவர், ஆதிதிராவிடர்களை ‘திருக்குலத்தார்’ என்று புகழ்ந்தவர் ராமானுஜர்.

அந்த ராமானுஜர் பிங்கள ஆண்டு, சித்திரைத் திங்கள், 13-ம் நாள் வியாழக்கிழமை சுக்கில பட்சம், பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் கடக லக்னத்தில் (கி.பி. 4.4.1017) ஆசூரி கேசவ சோமயா ஜூலுவுக்கும், காந்திமதியம்மை எனப் பெயர் கொண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் திருமகனாக அவதாரம் செய்தார். பைபிளில் மோசஸ் கொடுத்த 10 கட்டளைகளைப் போல ராமானுஜர் 72 உபதேசங்களைக் கூறியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், உரிமை, சமத்துவம், சாதிமத பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையை  மக்களிடையே உபதேசம் செய்தவர் ராமானுஜர். அவர் உபதேசித்ததோடு இல்லாமல், அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியவர். இவரை வெறும் ஆன்மிகவாதி என்று ஒதுக்கிவிட முடியாது.

இன்றைக்குக் கூட அழுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர்கள் காவல் துறையின் உதவியுடன் கோவிலுக்குள் சென்று வழிபடுகின்ற நிலை இருக்கின்றது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றவர் ராமானுஜர்.

திருவரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு எத்தனையோ முறை நடந்து சென்று, அந்த ரகசிய மந்திரமான ‘ஓம் நமோ நாராயணா’ என்பதைக் கற்றுக் கொண்டார். குறிப்பாக அதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று குரு இவருக்கு உபதேசித்தும், திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கேட்டுக் கொண்டு, இதை யாருக்கும் நான் சொல்ல மாட்டேன் என்று அவரிடம் சத்தியம் செய்துவிட்டு, திருக்கோஷ்டியூர் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு, நான் ஒருவனே இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு, சொர்க்கத்திற்குப்போக விரும்பவில்லை. இதைக் கேட்கின்றவர்களெல்லாம் சொர்க்கத்திற்குப் போகிறவர்கள் என்றால், அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறொன்றுமில்லை என்றார்.

இப்படிப்பட்ட ராமானுஜர், ஸ்ரீ ரங்கத்திலேயே ஒதுக்கப்பட்டுவிட்டார். ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டார். ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. தன் மனதில் எது சரி என்று பட்டதோ, அதைச் செய்ய அவர் தயங்கவில்லை.

கோவில் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு முறையை ஏற்படுத்தினார். சோழப் பேரரசருக்குப் பயந்து நீலகிரி காட்டின் வழியாக திருநாராயணபுரம் என்று அழைக்கப்படுகிற மேல் கோட்டைக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் தங்கினார். ராமானுஜர் 120 ஆண்டுகள் இருந்ததாகக் கூறுகிறார்கள். மக்களின் மனங்களில் மானசீகமாக வாழ்ந்து கொண்டிருப்பதோ 1000 ஆண்டுகள். வாழப்போவது இன்னும் எத்தனை ஆண்டுகளோ தெரியவில்லை.


குறிப்பு: 

நடிகர் திரு. ராஜேஷ் தினமணிக் கதிரில் எழுதிய  ‘முரண்சுவை’ தொடரின் ஒரு பகுதி இது.

நன்றி: தினமணிக்கதிர் (12.12.2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக