சனி, 14 மே, 2016

ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா ஸ்ரீபெரும்புதூரில் தொடக்கம்

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி தொடக்க விழாவை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கும் ஸ்ரீபெரும்புதூர் ஷேத்ரோபாஸனா அறக்கட்டளை  நிர்வாக அறங்காவலர் பிரேமா பாண்டுரங்.விழாவில், ஆமருவி தேவநாதன் எழுதிய ‘நான் ராமானுஜன்’ என்ற புத்தகத்தை முன்னாள் துணைவேந்தர் கலாநிதி வெளியிட, நந்தனார் பேரவைத் தலைவர் தடா பெரியசாமி பெற்றுக் கொண்டார்.ஸ்ரீபெரும்புதூர், மே 10: ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள், தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு சார்பாக, ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

 வைணவப் பெரியார் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு 2016 மே 10 முதல் 2017 மே 1 வரை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாதம்- திருவாதிரை செவ்வாய்க்கிழமை வந்ததையொட்டி, இவ்விழாவின் தொடக்கம், அவர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.  தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு, அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கிராமங்கள், நகரங்கள் தோறும் சிறப்பாகக்  கொண்டாடுகிறது. இந்த ஓராண்டு முழுவதும், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் ஆன்மிகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளையும் மக்கள் அறியச் செய்யவும், சமய மறுமலர்ச்சி, சமுதாய நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதன் தொடக்க விழா, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மடுவங்கரை- கோகுல்தாம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 ஆடிட்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். ராம.ஏழுமலை வரவேற்றார். ஷேத்ரோபாஸனா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பிரேமா பாண்டுரங் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தார்.

 இதில் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். ஸ்ரீரங்கம் அ.கிருஷ்ணமாச்சாரியார், சென்னை சதுர்வேதி சுவாமிகள், பேராசிரியர் ரங்கராஜன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி, ஆர்.எஸ்.எஸ். தென்பாரத அமைப்பாளர் ஸ்தாணுமாலயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

 இவ்விழாவில், ஆமருவி தேவநாதன் எழுதிய ‘நான் ராமானுஜன்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதனை நந்தனார் பேரவைத் தலைவர் தடா பெரியசாமி பெற்றுக் கொண்டார்.  ‘ராமானுஜம் 1000 டாட்காம்’ என்ற இணையதளமும் தொடங்கப்பட்டது.

 ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்க வரதராஜன் நன்றி கூறினார். இவ்விழாவில், தமிழகம் முழுவதிலுமிருந்த வந்த பக்தர்கள், இந்து இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


நன்றி: தினமணி (11.05.2016), காஞ்சிபுரம் பதிப்பு
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக