சனி, 28 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9

 -இரா.சத்தியப்பிரியன்வேற்று சாதியினரும் ராமானுஜரும்


ராமானுஜர் செய்த சில செயற்கரிய செயல்களே அவரை உன்னத மகானாக மாற்றியது எனலாம். வைதீகர்கள் இடையில் சாதிப்பித்து தலைக்கேறியிருந்த காலத்தில் அவர் பேரருளாளன் முன்பு அனைவரும் சமம் என்ற செய்தியை உரக்கக்கூவினார்.

தனது இளம் பருவத்திலேயே திருக்கச்சி நம்பி. பெரியநம்பி போன்றோர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எம்பெருமானின் புகழ் பாடும் காரணத்தால் அவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களை வணங்குதல், சேர்ந்து உண்ணுதல், இல்லத்தில் அனுமதித்தல் போன்ற செயலகளை ஊர் எதிர்த்தாலும் செய்து வந்தார்.

திருக்கோட்டிநம்பி ரகசியமாக சொன்ன மந்திரத்தை மற்ற அனைத்து தரப்பு மக்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்று மதில்மேல் நின்றுகொண்டு கூவினார்.

ராமானுஜர் மட்டுமல்ல, அவருடைய ஆச்சாரியரான ஆளவந்தான் சுவாமிகளும், அவருடைய பிரதான சிஷ்யரான பெரியநம்பியும் சாதிபேதம் பார்க்காதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தானோ என்னவோ ராமானுஜரால் ஸ்ரீமன் நாராயணனை சகலருக்கும் கொண்டு செல்ல முடிந்தது.

இந்தப் பரமபத கூட்டத்தில் மாறனேர்நம்பி வந்து சேர்ந்தவிதம் ஒரு சுவையான நிகழ்ச்சியாகும். ஒருமுறை தாழ்குலத்தில் பிறந்த மாறனேர்நம்பி நீர்வயலில் அமர்ந்து சேற்றை எடுத்து உண்டுகொண்டிருப்பதை ஆளவந்தார் கண்ணுற்றார். மாறனேர்நம்பியிடம் சென்று அவர் சேற்றை உண்ணும் காரணத்தைக் கேட்டார். அதற்கு மாறனேர்நம்பி தன்னைப் பொருத்த வரையில் சேறும் சோறும் ஒன்றுதான் என்று கூறியதும் நம்மாழ்வாரைப போன்று இவரும் பிறவி ஞானி என்பதை உணர்ந்த ஆளவந்தார் பஞ்ச சம்ஸ்காரம் செய்து அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டார்.

இந்த மாறனேர்நம்பி இறந்ததும் பெரியநம்பி தானே முன்னின்று ஈமக் கிரியைகள் செய்து வைத்தார். இதை மற்றவர்கள் எதிர்க்கும்போது ராமானுஜர் பெரியநம்பியின் மீது ஐயம் கொண்டு அவர் செய்கைக்கு விளக்கம் கேட்டார்.

“ஜடாயு வெறும் பறவை. அதற்கு ஸ்ரீராமன் இறுதிச் சடங்குகளை செய்தான். விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். தருமன் அவருக்கு இறுதிக் கிரியை செய்தான். எம்பெருமானின் பக்திக்கு ஆளானவர்களுக்கு குலம், கோத்திரம் கிடையாது. மாறனேர்நம்பி என்னிடம் உபதேசம் பெற்றவன். பரமனின் பரமபக்தன். எனவே அவனுக்கு நான் இறுதிச் சடங்கு செய்வதில் தவறில்லை” என்றார்.

இதை கேட்ட மறுகணமே ராமானுஜர் பெரியநம்பியின் பாதங்களில் விழுந்து வணகினார். இத்தனைக்கும் அந்தச்சமயம் ஸ்ரீரங்கம் மடத்தின் ஆச்சாரியராக ராமானுஜர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார். இந்தத் தூய்மைதான் அவரை மகானாக மாற்றியது.

இதேபோல சோழநாடுவிட்டு நெடுந்தூரம் வடக்கே பயணமான ராமனுஜரும் அவருடைய சீடர்களும் ஒரு புலையர்களின் குடியிருப்புப் பகுதியில்தான் அடைக்கலம் புகுந்தனர். அந்தப் புலையர்கள் கொடுத்த பழங்களையும் நீரையும் பருகிவிட்டு அந்த நாட்டு அரசனான விட்டலதேவன் அரசவைக்கு செல்கின்றனர்.

இங்கே மீண்டும் ஒரு அரசகுமாரி அவளுக்கும் மனோவியாதி பீடித்திருக்கிறது. அந்த அரசகுமாரியின் நோயை போக்கியதோடு சமண சமயம்பால் பற்று வைத்திருந்த அந்த விட்டலதேவனின் மனதை வைணவம் பக்கம் மாற்றுகிறார். அரசவையிலிருந்த சமணப் பண்டிதர்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடம் சமயவாதம் செய்து அவர்களில் பெரும்பாலோரை வைணவ மதத்திற்கு மாற்றுகிறார். மன்னனும் சமண சமயத்தை விடுத்து வைணவ மதத்திற்கு மாறினான். அந்த மன்னனின் விட்டலதேவன் என்ற பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றி வைக்கிறார்.

அங்கிருந்துபுறப்பட்டு யதுகிரி என்ற இடத்தை அடைகிறார். அங்கே பூமிக்கடியில் மிகப்பெரிய நாராயண மூர்த்தியின் கற்சிலை கிடைக்கிறது.

இஸ்லாமியரின் படையெடுப்பின்போது கொடிய இஸ்லாமிய மன்னர்களுக்கு அஞ்சி நமது கடவுளின் திருவுருவச் சிலைகளை காப்பாற்றுவதற்காக மண்ணில் புதைத்து வைப்பது நமது முன்னோர்களின் வழக்கம் . அப்படி ஒரு சிலைதான் ராமானுஜருக்குக் கிடைக்கிறது. அந்தச் சிலையை பிரதிஷ்டை பண்ணி அந்த ஊர் மன்னன் மூலமாக ஒரு கோவிலும் எழுப்புகிறார். அந்தக் கோவில் காரணமாக அருகல் ஒரு கிராமமே உருவாகிறது. இந்த நகரம் இன்று மேலக்கோட்டை என்று வழங்கப்படுகிறது.

நமது தென்னிந்தியக் கோவில்களில் இறைவனுக்கு இரண்டு மூர்த்திகள் உண்டு. ஒன்று மூலமூர்த்தியான கற்சிலை. இரண்டாவது உற்சவமூர்த்தி. இந்த உற்சவமூத்தி ஐம்பொன்னால் செய்யபட்டிருக்கும். மூலவரைவிட அளவில் மிகச் சிறியதாக தூக்கிச் செல்வதற்கு எளிதாக இருக்கும். யதுடிரியில் ராமனுஜருக்கு மூலவிக்கிரகம் மட்டுமே கிடைத்தது. உற்சவமூர்த்தி கிடைக்கவில்லை. இந்தக் கவலையுடனே அவர் இருந்தார். ஒருநாள் கனவில் ஸ்ரீமன் நாராயணனே எழுந்தருளி “ராமானுஜா!என்னுடைய செல்லப்பிள்ளையை –அதாவது உற்சவ மூர்த்தியை- தில்லி பாதுஷா கொண்டு சென்றிருக்கிறான். அவன் அரண்மனையில் தேடு கிடைக்கும்” என்கிறார்.

உடனே ராமனுஜரும் அங்கிருந்து நெடுந்தொலைவில் உள்ள தில்லி நோக்கி பயணிக்கிறார். தில்லி பாதுஷா ராமானுஜரின் தோரணையைக் கண்டு அவருக்கு தக்க மரியாதை செலுத்தி (இவ்வாறு நடந்திருக்க சாத்தியமே இல்லையென்றாலும்,  நமக்குக் கிடைக்கும் செய்திகளைக் கொண்டுதான் சிலநேரங்களில் வரலாற்றை எழுத வேண்டியுள்ளது) தான் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்த விக்கிரகங்களை ஒரு மண்டபத்தில் போட்டுவைத்திருப்பதாகவும் அந்த அறைக்குள் சென்று அவர் தேடிவந்த விக்கிரகத்தை எடுத்தக் கொள்ளும்படியும் கூறுகிறான்.

பலவிக்கிரகங்களுக்கு மத்தியில் ராமானுஜரால் செல்லப்பிள்ளை என அழைக்கப்பட்ட அந்த உற்சவமூர்த்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது தில்லி பாதுஷா தனது மகள் பீபீ லகிமார் என்ற அரசகுமாரி ஒரு நாராயண விக்ரகத்தின் மேல் மாறாக் காதல் கொண்டுள்ளாள் என்று ஒரு விக்கிரகத்தைக் காட்டினார். அந்த விக்கிரகம்தான் மேல்கோட்டை நாராயணின் உற்சவமூர்த்தி என்பதைக் கண்டு கொண்ட ராமானுஜர் மன்னனின் அனுமதியோடு அதனை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார்.

ராமானுஜர் தனது அடியார்களுடன் தெற்குநோக்கி விரைந்து சென்றார். ஏனெனில் மன்னரின் மகள் அந்த விக்கிரகம் காணாமல் கண்டிப்பாகத் தேடுவாள் அரசனும் மீண்டும் விக்கிரகத்தை எடுத்துக் கொள்ள, தங்களை பின்தொடர்வார்கள் என்பதால் விரைந்து சென்றனர்.

அவர்கள் பயணத்தின்போதுசில புலைய சாதியை சேர்ந்த மக்கள் ராமனுஜருக்கு உதவினார்கள். அவர்கள் உதவியுடன் மேல்கோட்டையில் ஒரு ரகசியமான இடத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். புலையர்கள் இந்தத் தொண்டிற்கு உதவியதால் அன்றுமுதல் வருடத்தில் மூன்று நாட்கள் அவர்கள் ஆலயத்தினுள் சென்று வழிபடும் உரிமையை ராமானுஜர் பெற்றுத் தந்தார்.

ஆலயப்பிரவேசம் என்று சென்ற இரு நூற்றாண்டுகளாகத் தான் நாம் கூறுகிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வைதீகர்களின் பார்வையில் கீழ்ஜாதி எனக்கருதப்பட்டவர்களும் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று புரட்சி செய்தவர் ராமானுஜர்.

அதன்பிறகு அந்த பீபீ லகிமாரும் அவள் காதலனும் அந்தச் செல்லப்பிள்ளையைத் தேடி மேல்கோட்டை வருகின்றனர். அரசகுமாரியும் இளவரசனும் நாராயணின்மேல் பக்தியாகி ராமனுஜரின் ஆசிக்கு ஆட்படுகிறார்கள். அந்த இறைவனுக்குத் தொண்டு செய்து ஸ்ரீரங்கத்திலேயே தங்கி விடுகின்றனர். ராமானுஜரைப் பொருத்தவரை இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்பதாகும்.

(தொடர்கிறது)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக