வியாழன், 26 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7

 -இரா.சத்தியப்பிரியன்வெற்றி எட்டு திக்கும் எட்ட…


தண்ணீர் ததும்பி வழியும்குளத்தை பறவைகளும் விலங்குகளும் தேடி தேடி வருவதை போல ராமானுஜரின் ஞானப்பெருவேள்ளத்தில் மூழ்கிக் களிக்க அவரிடம் சீடர்களாக வந்து சேர்ந்தவர்கள் ஏராளம். அத்தனை சீடர்களையும் ,தனது அடியார்களையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணன் புகழ் பாடி அவனது வெற்றிக்கொடியை நாட்ட ராமானுஜர் தீர்மானித்து திக்விஜயம் புறப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் தொடங்கிய திக்விஜயம் திருக்குடந்தை, மதுரை, அழகர்கோவில், திருக்குறுங்குடி வழியாக நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார்த்திருநகரி சென்டைகிறது. ராமானுஜரும் நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் திருவாய்மொழிப் பாசுரங்களை பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து கேரளதேசம் சென்று அங்கு திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபனை சேவித்துவிட்டு வடக்கே தனது யாத்திரையை மேற்கொள்கிறார்.

செல்லுமிடமெல்லாம் அனைத்து வைணவத் தலங்களிலும் நாலாயிர திவ்யபிரபந்தம் பாடுமாறு வரையறுக்கிறார். திருவனந்தபுரத்தில் இதனைக் கோவில் நம்பூதிரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

அங்கிருந்து வடக்கு நோக்கி யாத்திரையைத் தொடங்கினார். துவாரகை , வடமதுரை, பிருந்தாவனம், சாலகிராமம், அயோத்தி, பத்ரி, கேதார்நாத், புஷ்கரம் போன்ற புனித தலங்களில் ஸ்ரீமன் நாராயணனை தரிசித்துவிட்டு இறுதியில் காச்மீரத்தில் சாரதாபீடத்தை வந்தடைந்தார். அங்கே பீடத்தில் இருந்த சாரதா தேவி அவருடைய கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணி என்ற உபநிடத வாக்கியத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்து ராமானுஜருக்கு ‘பாஷ்யகாரர்’ என்ற பட்டத்தை வழங்கியதாக ஒரு சிறப்புக் கதை வழங்குகிறது.

சாரதாதேவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவர் காசி சென்றார். பின் புரி நகரில் எம்பார் என்ற பெயரில் வைணவ மடம் ஒன்றை நிறுவுகிறார். வழியில் ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் போன்ற இடங்களில் வைணவ நெறியை பரப்பி கருடமலை அடைந்து அங்கு சிலகாலம் தங்கி அகோபிலம் என்ற இடத்தில் ஒரு மடத்தை நிறுவுகிறார்.

அங்கிருந்து திருப்பதிக்கு வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தி சைவக் கடவுளா வைணவக் கடவுளா என்ற சர்ச்சையை தீர்த்து ஏழுமலையான் நாராயணின் திருமூர்த்திஅம்சமே என்பதை நிறுவிவிட்டு தம் சீடர்களுடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.

ஆதிசங்கரரைப் போல ராமானுஜரும் வைணவ நெறிக்கு ஆற்றியுள்ள தொண்டு எண்ணிலடங்கா. செல்லும் வழியெல்லாம் எதிர்ப்புகளும் கொலை மிரட்டல்களும் அவரைத் துரத்தின. எதற்கும் அஞ்சாமல் நலம் தரும் ஒரே சொல்லான நாராயண மந்திரத்தை மட்டும் நம்பி தனது வைணவக் கொள்கையை பரப்புவதை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்.

(தொடர்கிறது)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக