செவ்வாய், 31 மே, 2016

பஞ்சாச்சார்ய பதாச்ரயர்

-திருநின்றவூர் ரவிக்குமார் 

எம்பெருமானார்,

1. பெரியநம்பிகளிடம் பஞ்சஸம்ஸ்காரம் பெற்றார்.
திருவாய் மொழி தவிர்த்த மூவாயிரத்தின் ஆழ்பொருள்கள் பெற்றார்.

2. திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரகஸ்யத்திரய ஆழ்பொருள்களைக் பெற்றார்.

3. திருமாலையாண்டானிடம் திருவாய்மொழியின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.

4. திருவரங்கப் பெருமாளரையரிடம் ஆச்சாய நிஷ்டையின் ஆழ்பொருளை பெற்றார்.

5. பெரியதிருமலை நம்பிகளிடம் ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகங்களின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.

இதனால் ராமானுசர் ‘பஞ்சாச்சார்ய பதாச்ரயர்’ (ஐந்து குருவை பணிந்தவர்) என்ற திருபெயரை பெற்றவரானார்.

திங்கள், 30 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11

 -இரா.சத்தியப்பிரியன்


பரமபதம்


ராமானுஜர் நமக்குக் காட்டிய வைனவ நெறியானது உன்னதமானது. நமது சனாதான தர்மங்களின் அடிப்படையில் எழுப்பட்ட நெறியாகும்.

ஸ்ரீவைணவத்தில்ல் ஏழை -பணக்காரன், உயர்ந்த குடியில் பிறந்தவன்- தாழ்ந்தகுடியில் பிறந்தவன் என்ற பேதம் கிடையாது என்பதை உரக்கக் கூறியது.

ஒருவிதத்தில் கிரிமிகண்டன் என்னும் மன்னன் நல்லது செய்தான் என்றுதான் கூறவேண்டும். அந்த மன்னனின் கொடியகரங்களிலிருந்து தப்பிக்கவே ராமானுஜர் சாளுக்கிய மட்டும் ஹொய்சாள மன்னர்களின் சமஸ்தானங்களுக்குச்சென்றார். இதன்மூலம் அங்குள்ள வைணவத் தலங்களில் நமது திராவிட வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தை முழங்கச் செய்தார்.

கிரிமிகண்டன் மறைந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டு ராமானுஜர் தனது இருபத்திரண்டு வருட தலைமறைவு வாழ்க்கையை விட்டு தமிழகம் திரும்ப முடிவு செய்கிறார். திருவரங்கம் செல்ல நாள் குறிக்கிறார். மேல்கோட்டை வைணவப்பெருமக்கள் வருந்துகின்றனர். அவர்கள் வருத்தத்தைப் போக்க தன்னைப் போலவே ஒரு உலோகப்பிரதிமையை செய்து அதனுள் தனது சக்தி முழுவதைய்ம் பிரவேசிக்க செய்து அதனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.

ராமானுஜர் தனது சீடர்களுடன் கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் திருவரங்கத்தில் இருந்து வைணவ நெறியைத் தழைத்தோங்க செய்தார்.

இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் தம் தொண்டர்களுடன் குழுமியிருந்தபோது ஒருநாள் யதிராஜர் அசையாமல் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். கூடியிருந்த தொண்டர் குழாம் காரணம் கேட்க ராமானுஜர் “ஸ்ரீபெரும்புதூரில் என் அன்பர்கள் என் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து அதற்கு கண்மலர் திறந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தச் சிலையில் எழுந்தருளிவிட்டு வந்தேன்” என்றாராம். அதைக் கேட்டு பக்தர்களின் கண்களில் ஆனதைக் கண்ணீர் பெருகியது. தனது அந்திமக்காலம் நெருங்கிவிட்டதை ராமானுஜர் குறிப்பால் உணர்த்தினார்.

அவருடைய பக்தர்கள் அவர்மேல்கொண்ட பக்தியை கணக்கிடவே முடியாது. அவரருளிச் செய்த நெறிகள் அவர்களது வாழ்வின் கோட்பாடுகளாகவே மாறியிருந்தன. அவரை தரிசித்தும். அவருடைய பொன்மொழிகளை கேட்டும் தங்கள் வாழ்க்கையை அவர்கள் மேம்படுத்திக் கொண்டனர். எனவே அவருடைய பிரிவைத் தாங்கும் சக்தியின்றி கதறி கண்ணீர் விட்டனர். ராமானுஜர் அவர்களைச் சமாதனம் செய்கிறார்.

“தேவரீர்! நீங்கள் சொல்வதெல்லாம் நிஜம். இருப்பினும் தங்கள் திருமேனியைப் பிரிந்திருக்கும் வேதனையை எங்களால் தாள முடியவில்லை. இன்னும் சில நாட்கள் எங்களுக்காக இந்தத் திருமேனியைக் காத்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டதற்கிணங்க மேலும் மூன்று நாட்கள் இந்தப் பூவுலகில் வாழ சம்மதிக்கிறார்.

பிறகு இந்த மூன்று நாட்களில் தமது சீடர்களுக்கு எழுபத்திநான்கு இரத்தினங்கள் என்று போற்றப்படும் உபதேசங்களை அருளிச் சென்றார்.

பின்னர் சீடர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க தனது திருமேனியை மூன்றே நாட்களுக்குள் சிலையாக வடிக்க அனுமதி அளிக்கிறார். மூன்றே நாட்களின் யதிராஜரின் சிலைவடிவம் சித்தமாகியது. பிறகு அந்தச் சிலைவடிவை காவேரி நீரில் நீராட்டி அதை பீடத்தில் ஏற்றினார்கள். ராமானுஜர் பிரம்ம மந்திரத்தின் மூலம், தனது சக்தியை அந்த சிலைவடிவினுள் பிரயோகித்தார்.

பிறகு தனது பக்தர்களை பார்த்து “குழந்தைகளே எனக்கும் இந்தச் சிலைக்கும் வேறுபாடு இல்லை. இதில்தான் இனிமேல் நான் வாசம் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு அவருடைய சீடர்களில் ஒருவரான எம்பார் என்பவரின் மடியில் தலையையும், வடுகநம்பி என்பவரின் மடியில் திருவடியையும் வைத்துக் கொண்டே சக ஆண்டு 1059 (கி.பி.1137) மாக மாதம், சுக்லபட்சம் தசமி திதியில் பரமபதம் அடைந்தார்.

ராமானுஜர் நமக்கு அருளிச் சென்றுள்ள 74 நன்னெறி ரத்தினங்களையும் பூரணமாகக் கற்று அவற்றின் வழி நடப்பதே நாம் இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்.

திருமால் திருவடிகளே சரணம்!


(நிறைவு)
.

ஞாயிறு, 29 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10

 -இரா.சத்தியப்பிரியன்

 

 

திருமலையும் ராமானுஜரும்


ராமானுஜ வைபவம் என்றாலே அதில் விசிஷ்டாத்வைதத்தின் ஸ்தாபிதம் இருக்கும். பாகவதப் பெருமக்களிடம் அவருக்கு உள்ள பக்தி இருக்கும். ஸ்ரீவைணவத்திற்காக அவருடைய புண்ணியத்தல யாத்திரை இருக்கும். அவர் இயற்றிய பாஷ்யங்களும் வியாக்கியானங்களும் இருக்கும். பிறப்பு, குலம் எதுவும் பாராத வைணவ பக்தி இருக்கும்.

இந்த தேசத்தில் அவர் காலடி படாத வைணவத் தலங்களே இல்லை என்று கூறலாம். வைணவக் கோவில்களில் வடமொழி வேதத்துடன் திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் மங்கள சாசனம் செய்யப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர் ராமானுஜர்.

திருமலையில் ராமானுஜர் சற்றேறக் குறைய ஒருவருட காலம் தங்கியிருந்து பகவத் கைங்கரியம் செய்தார். திருமலையைக் கண்டதுமே அவர் கண்கள் பனித்தன. எம்பெருமானின் நினைப்பு எப்போதும் அவரிடம் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஒருமுறை பெர்யநம்பியின் மகள் அத்துழாய்க்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ராமானுஜர் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் அரிசியையோ தானியங்களையோ கொண்டு உணவு சமைத்து சாப்பிடுபவர். இதில் சில நிபந்தனைகள் உள்ளன. ஒருவேளை உணவுக்கான தானியங்களைத்தான் பிக்ஷையாகப் பெற வேண்டும். பிக்ஷை பெற்ற தானியம் பூராவையும் சமைத்துவிட வேண்டும். மறுவேளைக்குக்கூட சேமித்து வைக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று வேளைக்குமேல் ஒருவீட்டில் பிக்ஷை கேட்கக் கூடாது. அப்படி ஒருநாள் பெரியநம்பியின் வீட்டு வாசலில் ராமானுஜர் நின்று பிக்ஷை கேட்கிறார். ராமானுஜரின் நாவு எப்போதும் ஆண்டாளின் திருப்பாவை முணுமுணுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆண்டாளிடம் ராமானுஜருக்கு அப்படி ஒரு ப்ரீத்தி.

நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!

நூறு தடாவில் வெண்ணையும், நூறு தடாவில் அக்காரவடிசிலும் திருமாலிருஞ்சோலைப்பெருமாளுக்கு படிப்பதாக ஆண்டாள் அன்று வேண்டிக்கொண்டால் என்பதற்காக தன்காலத்தில் அதே அளவு வெண்ணெயையும் அதே அளவு அக்கார வடிசிலையும் ஆண்டாளுக்காக ஸ்ரீ ராமானுஜர் சாதித்தார் என்றால் அவருடைய பாகவத பிரியத்தை என்னென்று சொல்லுவது?

இப்படிப்பட்ட ராமானுஜர் உஞ்சவிருத்தி எடுத்து வரும்போது பெரியநம்பியின் வீட்டு வாசலில் நிற்கிறார். அத்துழாய் உஞ்சவிருத்திக்கு வந்த பிராமணரை வரவேற்கக் கதவை திறக்கிறாள். அத்துழாய் கதவைத் திறந்ததைப் பார்த்த மறுகணம் ராமானுஜர் மூர்ச்சையாகி விழுந்து விடுகிறார். அத்துழாய்க்கு என்ன செய்வதென்று புரியாமல் தந்தையிடம் ஓடிப்போய் ராமானுஜர் விழுந்ததைச் சொல்லுகிறாள்.

பெரியநம்பி மகளைப் பார்த்து சிரிக்கிறார். அத்துழாய்க்கு வியப்பு. வாசலில் ராமானுஜர் மூர்ச்சையாகிக் கிடப்பதை பதைபதைப்புடன் சொல்கிறோம் தந்தையார் இப்படி சிரிக்கிறாரே!

“அத்துழாய் ! நீ வருத்தப்படவேண்டாம். இராமானுசன் ஒரு பரம பக்தன். நாராயணனையும் அவன் பாகவதர்களையும் தவிர அவன் நினைப்பில் வேறு சிந்தையே கிடையாது. அவன் வாய் எப்பொழுதும் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களை முணுமுணுத்தவாறே இருக்கும். நீ கதவைத் திறக்கும்போது  ‘உந்து மகா களிற்றன்’ பாசுரத்தை பாடியிருப்பான். அதில் ஈற்றில் நந்தா கோபன் மகளே நப்பின்னாய் என்ற வரிகள் பாடிக் கொண்டிருக்கும்போது நீ கதவைத் திறந்திருப்பாய். உன்னை அப்படியே நப்பின்னையாகவே நினைத்துக் கொண்டு மூர்ச்சையாகியிருப்பான். பயப்படாதே! சிறிது நேரத்தில் அவனே தெளிந்து விடுவான்” என்றார் சாதாரணமாக.

அவருடைய நாராயணின் மீதான பற்று அத்தனை உயர்த்தியானது. எனவேதான் அவர் முதல்முதலாக திருமலைக்கு செல்லும்போது ஒருவிஷயத்தில் பிடிவாதமாக இருந்தார்

ராமானுஜர் திருமலைக்கு வந்ததன் நோக்கம் அங்கு வசித்த பரம பக்தரும், பண்டிதருமான பெரியதிருமலை நம்பி என்பவரிடம் ராமாயணம் பாடம் சொல்லிக் கொள்ளத்தான். ராமானுஜரின் மிகச் சிறந்த குணங்களில் ஒன்று பாகவத விஷயங்களைக் கற்க வேண்டுமென்றால் அந்த விஷயத்தில் யார் நிபுணத்துவம் பெற்றிருக்கிறாரோ அவர் எங்கிருந்தாலும் அந்த ஊருக்குச் சென்று அவரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டு கற்பது என்பதாகும்.

திருப்பதியில் இருக்கும் பெரிய திருமலை ராமாயணத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதைப் புரிந்துகொண்ட ராமானுஜர் அவரைத் தேடி திருமலைக்கு வருகிறார்.

திருமலையில் அவரைச் சிறந்த முறையில் வரவேற்று மலைக்கு செல்ல அழைக்கின்றனர். கைலாயத்தைப் பார்த்ததும் காரைக்கால் அம்மையாருக்கு ஏற்பட்ட அதே சிந்தனை ராமானுஜருக்கு ஏற்பட்ட்டது. பரமேஸ்வரன் குடிகொண்ட திருக்கயிலையை என் கால்களால் மிதிக்கமாட்டேன் என்று அம்மையார் தலையால் நடந்து சென்றதாகக் கூறுவார்கள்.

இங்கே ராமானுஜருக்கு வேங்கடவன் குடிகொண்ட திருமலையை தன் கால்களால் தீண்டுவதா என்ற தயக்கம் ஏற்பட்டது.தயங்கினார். மூன்று நாட்கள் கீழ் திருப்பதியிலேயே வாசம் செய்தார்.

இவரது உள்ளக்கிடக்கையை அறிந்துகொண்ட பெருமக்கள் “அய்யனே ! நீங்களே திருமலையின் மேல் கால்படலாகாது என்று கூறிவிட்டால் பின்பு வேறு யார் திருமலைக்கு வருவார்கள்? பின்பு பெருமாளின் புகழ் உலகெங்கும் பரவுவது எங்கனம்?” என்று விண்ணப்பிக்கவே இளைய பெருமாளும் மனம் மாறி திருமலையின் மேல் ஏறிச்சென்று வேங்கடவனை தரிசித்தார்.

பாகவத சம்பந்தம் வைணவர்களிடையே எந்த அளவுக்குப் போற்றப்படுகிறது என்பதற்கு திருமலையில் நடந்த ஒரு விஷயம் உதாரணம்.

ராமானுஜர் வருகிறார் என்று தெரிந்ததும் வயதில் மூத்தவரும் நன்கு கற்றவருமான பெரிய திருமலை ராமனுஜருக்கு தன் கைகளில் தீர்த்தத்தையும் பிரசாதத்தையும் எடுத்துவந்து அளிக்கிறார். ராமானுஜர் பதறிப் போகிறார்.  “என்ன ஒரு அபச்சாரம். இதை தாங்கள் தங்கள் கைகளினால் செய்ய வேண்டுமா? உங்களை விடச் சிறிய ஒருவரிடம் இதை அனுப்பியிருக்கலாமே ? “ என்று கேட்டார்.

அதற்கு பெரிய திருமலை என்ற அந்த முதியவர் , பண்பாளர் “என்னைவிடச் சிறியவனை தேடிப் பார்த்தேன். அப்படி எவரும் கிடைக்கவில்லை . எனவேதான் நானே கொண்டு வந்தேன்” என்கிறார். இறைவனுக்கு ஆற்றும் தொண்டில் தன்னை மிக எளிமையாகக் காட்டிக் கொள்வதில் ஒரு வைணவனுக்கு எவ்வளவு ஆனந்தம் பாருங்கள்.

ராமானுஜரும் திருமலையில் ஒரு வருட காலம் தங்கி பெரிய திருமளையிடமிருந்து ராமாயணம் முழுவதையும் கற்றுக் கொண்டார்.

திருமலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததா? என்று ஐயப்படும் அளவிற்கு ஒரு விஷயம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதில் காலகுழப்படிகளும் உள்ளன.

ராமானுஜர் திருமலை சன்னதியிலுள்ள அர்ச்சாவதாரம் அதாவது சிலைத்திருமேனி நாராயண அம்சமே என்று நிறுவியதாக வழங்கப்படும் கதை. இதனைக் கட்டுக்கதை என்றும் விலக்கி விடவும் முடியாது. வைணவர்களின் குருபரம்பரையிலும் ஸ்ரீ ராமானுஜ வைபவத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன.

ராமானுஜர் முதன்முதலாக திருமலைக்கு வந்து பெரிய திருமலையிடம் ராமாயணம் கற்றுக் கொள்ளும்போது இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை. பின்னர் ராமானுஜர் சாரிசாரியாக அடியார்களை அழைத்துக் கொண்டு திக்விஜயம் செய்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

திருமலையில் உள்ள சிலைத்திருமேனி நாராயணனின் அம்சமென்றும், சிவனின் அமசமென்றும் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்தது. இரண்டு சமயத்தினரும் கச்சைகட்டிக் கொண்டு வீதியில் கோஷம் எழுப்புகிறார்கள். தொண்டைமன்னனுக்கு இது பெரிய தலைவலியாகப் போய் பொறுப்பை ராமானுசரிடம் விட்டு விடுகிறான்.

ராமானுஜர் கரியத்திருமேனி முன் நின்று சைவர்களின் அடையாளமான திருநீற்றை ஒரு இலை நிறைய வைக்கிறார். நாரண அம்சமான சங்கு சக்கரங்களையும் முன்வைக்கிறார். பிறகு சிலைத்திருமேனி முன்பு நின்று “எம்பெருமானே ! நீ நாரண அம்சம் என்றால் சங்கு சக்கரத்தை உன் மேனியில் தரித்துக்கொள். சிவனின் அம்சமென்றால் திருநீற்றைப் பூசிக் கொள்” என்று கூறி சன்னிதியின் கதவை அடைத்துவிட்டு வருகிறார்.

இரவு முழுவதும் அனைவரும் காத்திருக்கின்றனர். மறுநாள் திருப்பள்ளியெழுச்சி பாடி சன்னதி கதவு திறக்கபப்டுகிறது. எம்பெருமான் தன சிலைத்திருமேனியில் இரண்டு தோள்களிலும் சங்கு சக்கரங்களை ஏந்திக் கொண்டு நின்றார். பக்தர்கள் மெய்சிலிர்த்து அந்தச் சிலைமேனி நாராயணின் அம்சம் என்று ஒப்புக்கொண்டனர்.

ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது பல வைனவத்தலங்களை ஒரு ஒழுங்குமுறைக்குக் கொண்டுவருகிறார். திருவரங்கத்தை அவர் புனர்நிர்மாணம் செய்து வழிப்படுத்தினார். அதைப்போலத் தான் இந்த நிகழ்ச்சியும் நிகழ்ந்திருக்க வேண்டும்.

(தொடர்கிறது)

சனி, 28 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9

 -இரா.சத்தியப்பிரியன்வேற்று சாதியினரும் ராமானுஜரும்


ராமானுஜர் செய்த சில செயற்கரிய செயல்களே அவரை உன்னத மகானாக மாற்றியது எனலாம். வைதீகர்கள் இடையில் சாதிப்பித்து தலைக்கேறியிருந்த காலத்தில் அவர் பேரருளாளன் முன்பு அனைவரும் சமம் என்ற செய்தியை உரக்கக்கூவினார்.

தனது இளம் பருவத்திலேயே திருக்கச்சி நம்பி. பெரியநம்பி போன்றோர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எம்பெருமானின் புகழ் பாடும் காரணத்தால் அவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களை வணங்குதல், சேர்ந்து உண்ணுதல், இல்லத்தில் அனுமதித்தல் போன்ற செயலகளை ஊர் எதிர்த்தாலும் செய்து வந்தார்.

திருக்கோட்டிநம்பி ரகசியமாக சொன்ன மந்திரத்தை மற்ற அனைத்து தரப்பு மக்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்று மதில்மேல் நின்றுகொண்டு கூவினார்.

ராமானுஜர் மட்டுமல்ல, அவருடைய ஆச்சாரியரான ஆளவந்தான் சுவாமிகளும், அவருடைய பிரதான சிஷ்யரான பெரியநம்பியும் சாதிபேதம் பார்க்காதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தானோ என்னவோ ராமானுஜரால் ஸ்ரீமன் நாராயணனை சகலருக்கும் கொண்டு செல்ல முடிந்தது.

இந்தப் பரமபத கூட்டத்தில் மாறனேர்நம்பி வந்து சேர்ந்தவிதம் ஒரு சுவையான நிகழ்ச்சியாகும். ஒருமுறை தாழ்குலத்தில் பிறந்த மாறனேர்நம்பி நீர்வயலில் அமர்ந்து சேற்றை எடுத்து உண்டுகொண்டிருப்பதை ஆளவந்தார் கண்ணுற்றார். மாறனேர்நம்பியிடம் சென்று அவர் சேற்றை உண்ணும் காரணத்தைக் கேட்டார். அதற்கு மாறனேர்நம்பி தன்னைப் பொருத்த வரையில் சேறும் சோறும் ஒன்றுதான் என்று கூறியதும் நம்மாழ்வாரைப போன்று இவரும் பிறவி ஞானி என்பதை உணர்ந்த ஆளவந்தார் பஞ்ச சம்ஸ்காரம் செய்து அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டார்.

இந்த மாறனேர்நம்பி இறந்ததும் பெரியநம்பி தானே முன்னின்று ஈமக் கிரியைகள் செய்து வைத்தார். இதை மற்றவர்கள் எதிர்க்கும்போது ராமானுஜர் பெரியநம்பியின் மீது ஐயம் கொண்டு அவர் செய்கைக்கு விளக்கம் கேட்டார்.

“ஜடாயு வெறும் பறவை. அதற்கு ஸ்ரீராமன் இறுதிச் சடங்குகளை செய்தான். விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். தருமன் அவருக்கு இறுதிக் கிரியை செய்தான். எம்பெருமானின் பக்திக்கு ஆளானவர்களுக்கு குலம், கோத்திரம் கிடையாது. மாறனேர்நம்பி என்னிடம் உபதேசம் பெற்றவன். பரமனின் பரமபக்தன். எனவே அவனுக்கு நான் இறுதிச் சடங்கு செய்வதில் தவறில்லை” என்றார்.

இதை கேட்ட மறுகணமே ராமானுஜர் பெரியநம்பியின் பாதங்களில் விழுந்து வணகினார். இத்தனைக்கும் அந்தச்சமயம் ஸ்ரீரங்கம் மடத்தின் ஆச்சாரியராக ராமானுஜர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார். இந்தத் தூய்மைதான் அவரை மகானாக மாற்றியது.

இதேபோல சோழநாடுவிட்டு நெடுந்தூரம் வடக்கே பயணமான ராமனுஜரும் அவருடைய சீடர்களும் ஒரு புலையர்களின் குடியிருப்புப் பகுதியில்தான் அடைக்கலம் புகுந்தனர். அந்தப் புலையர்கள் கொடுத்த பழங்களையும் நீரையும் பருகிவிட்டு அந்த நாட்டு அரசனான விட்டலதேவன் அரசவைக்கு செல்கின்றனர்.

இங்கே மீண்டும் ஒரு அரசகுமாரி அவளுக்கும் மனோவியாதி பீடித்திருக்கிறது. அந்த அரசகுமாரியின் நோயை போக்கியதோடு சமண சமயம்பால் பற்று வைத்திருந்த அந்த விட்டலதேவனின் மனதை வைணவம் பக்கம் மாற்றுகிறார். அரசவையிலிருந்த சமணப் பண்டிதர்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடம் சமயவாதம் செய்து அவர்களில் பெரும்பாலோரை வைணவ மதத்திற்கு மாற்றுகிறார். மன்னனும் சமண சமயத்தை விடுத்து வைணவ மதத்திற்கு மாறினான். அந்த மன்னனின் விட்டலதேவன் என்ற பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றி வைக்கிறார்.

அங்கிருந்துபுறப்பட்டு யதுகிரி என்ற இடத்தை அடைகிறார். அங்கே பூமிக்கடியில் மிகப்பெரிய நாராயண மூர்த்தியின் கற்சிலை கிடைக்கிறது.

இஸ்லாமியரின் படையெடுப்பின்போது கொடிய இஸ்லாமிய மன்னர்களுக்கு அஞ்சி நமது கடவுளின் திருவுருவச் சிலைகளை காப்பாற்றுவதற்காக மண்ணில் புதைத்து வைப்பது நமது முன்னோர்களின் வழக்கம் . அப்படி ஒரு சிலைதான் ராமானுஜருக்குக் கிடைக்கிறது. அந்தச் சிலையை பிரதிஷ்டை பண்ணி அந்த ஊர் மன்னன் மூலமாக ஒரு கோவிலும் எழுப்புகிறார். அந்தக் கோவில் காரணமாக அருகல் ஒரு கிராமமே உருவாகிறது. இந்த நகரம் இன்று மேலக்கோட்டை என்று வழங்கப்படுகிறது.

நமது தென்னிந்தியக் கோவில்களில் இறைவனுக்கு இரண்டு மூர்த்திகள் உண்டு. ஒன்று மூலமூர்த்தியான கற்சிலை. இரண்டாவது உற்சவமூர்த்தி. இந்த உற்சவமூத்தி ஐம்பொன்னால் செய்யபட்டிருக்கும். மூலவரைவிட அளவில் மிகச் சிறியதாக தூக்கிச் செல்வதற்கு எளிதாக இருக்கும். யதுடிரியில் ராமனுஜருக்கு மூலவிக்கிரகம் மட்டுமே கிடைத்தது. உற்சவமூர்த்தி கிடைக்கவில்லை. இந்தக் கவலையுடனே அவர் இருந்தார். ஒருநாள் கனவில் ஸ்ரீமன் நாராயணனே எழுந்தருளி “ராமானுஜா!என்னுடைய செல்லப்பிள்ளையை –அதாவது உற்சவ மூர்த்தியை- தில்லி பாதுஷா கொண்டு சென்றிருக்கிறான். அவன் அரண்மனையில் தேடு கிடைக்கும்” என்கிறார்.

உடனே ராமனுஜரும் அங்கிருந்து நெடுந்தொலைவில் உள்ள தில்லி நோக்கி பயணிக்கிறார். தில்லி பாதுஷா ராமானுஜரின் தோரணையைக் கண்டு அவருக்கு தக்க மரியாதை செலுத்தி (இவ்வாறு நடந்திருக்க சாத்தியமே இல்லையென்றாலும்,  நமக்குக் கிடைக்கும் செய்திகளைக் கொண்டுதான் சிலநேரங்களில் வரலாற்றை எழுத வேண்டியுள்ளது) தான் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்த விக்கிரகங்களை ஒரு மண்டபத்தில் போட்டுவைத்திருப்பதாகவும் அந்த அறைக்குள் சென்று அவர் தேடிவந்த விக்கிரகத்தை எடுத்தக் கொள்ளும்படியும் கூறுகிறான்.

பலவிக்கிரகங்களுக்கு மத்தியில் ராமானுஜரால் செல்லப்பிள்ளை என அழைக்கப்பட்ட அந்த உற்சவமூர்த்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது தில்லி பாதுஷா தனது மகள் பீபீ லகிமார் என்ற அரசகுமாரி ஒரு நாராயண விக்ரகத்தின் மேல் மாறாக் காதல் கொண்டுள்ளாள் என்று ஒரு விக்கிரகத்தைக் காட்டினார். அந்த விக்கிரகம்தான் மேல்கோட்டை நாராயணின் உற்சவமூர்த்தி என்பதைக் கண்டு கொண்ட ராமானுஜர் மன்னனின் அனுமதியோடு அதனை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார்.

ராமானுஜர் தனது அடியார்களுடன் தெற்குநோக்கி விரைந்து சென்றார். ஏனெனில் மன்னரின் மகள் அந்த விக்கிரகம் காணாமல் கண்டிப்பாகத் தேடுவாள் அரசனும் மீண்டும் விக்கிரகத்தை எடுத்துக் கொள்ள, தங்களை பின்தொடர்வார்கள் என்பதால் விரைந்து சென்றனர்.

அவர்கள் பயணத்தின்போதுசில புலைய சாதியை சேர்ந்த மக்கள் ராமனுஜருக்கு உதவினார்கள். அவர்கள் உதவியுடன் மேல்கோட்டையில் ஒரு ரகசியமான இடத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். புலையர்கள் இந்தத் தொண்டிற்கு உதவியதால் அன்றுமுதல் வருடத்தில் மூன்று நாட்கள் அவர்கள் ஆலயத்தினுள் சென்று வழிபடும் உரிமையை ராமானுஜர் பெற்றுத் தந்தார்.

ஆலயப்பிரவேசம் என்று சென்ற இரு நூற்றாண்டுகளாகத் தான் நாம் கூறுகிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வைதீகர்களின் பார்வையில் கீழ்ஜாதி எனக்கருதப்பட்டவர்களும் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று புரட்சி செய்தவர் ராமானுஜர்.

அதன்பிறகு அந்த பீபீ லகிமாரும் அவள் காதலனும் அந்தச் செல்லப்பிள்ளையைத் தேடி மேல்கோட்டை வருகின்றனர். அரசகுமாரியும் இளவரசனும் நாராயணின்மேல் பக்தியாகி ராமனுஜரின் ஆசிக்கு ஆட்படுகிறார்கள். அந்த இறைவனுக்குத் தொண்டு செய்து ஸ்ரீரங்கத்திலேயே தங்கி விடுகின்றனர். ராமானுஜரைப் பொருத்தவரை இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்பதாகும்.

(தொடர்கிறது)வெள்ளி, 27 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8

 -இரா.சத்தியப்பிரியன்

மதமேறிய மன்னன்


நமது தேசத்தின் இருகண்களாகக் கருதப்படுபவை சைவமும், வைணவமும்.  இரண்டுமே அடிப்படை தத்துவத்தில் வேறுபட்டிருந்தாலும், இரு சமயத்தினரிடமும் சகிப்புத்தன்மையும் பரஸ்பரம் விட்டுகொடுக்கும் தன்மையும் உள்ளன. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அத்தைகைய சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து காணப்பட்டது. என் சமயம்தான் உயர்ந்தது என்ற கொடியை இரு சமயத்தினரும் ஓங்கிப் பிடித்தனர்.

சைவம் தனது நெறியில் ஓங்கி இருக்கும் வேளையில் வைணவம் அடக்கிவாசிப்பதும், மாறாக வைணவம் ஓங்கியிருக்கும் வேளையில் சைவம் அடங்கியிருப்பதும் சகஜம். ஆட்சியாளர்கள் இதற்குள் தலையை கொடுக்காமல் போனால் விபரீதம் எதுவும் நிகழாது. மாறாக மன்னனுக்கு மதமேறிவிட்டால் அவ்வளவுதான் மாற்று சமயத்தினரின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

அப்படி ஒரு மன்னனாவே கிரிமிகண்டன் என்ற மன்னன் விளங்கினான்.காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு சோழ மன்னன் ஆண்டுவந்தான். கிரிமிகண்டன் என்பது அவனுடைய பெயர். சைவ சமயத்தின் மீது மாறாப் பற்றுடையவன். இதன்காரணமாக வேறு எந்த மதமும் தனது தேச எல்லைக்குள் செழிப்பதை அவனால் அனுமதிக்க முடியவில்லை.

அணுக்கத்தொண்டர்கள் 74 பேருடன் ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைத தத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வைணவ மதம் தழைத்து வருவதைக் கண்டு பொறுக்காத அந்த கிரிமிகண்டன் ராமானுஜருக்கு ஏகப்பட்ட இன்னல்களை அளித்து வந்தான். இறுதியில் அவரது உயிரை மாய்த்திடவும் திட்டமிட்டான்.

ராமானுஜரிடமும் அவருடைய பிரதம சீடரான கூரத்தாழ்வாரிடமும் ‘ சிவனே உயர்ந்தவர். சிவனைவிட உயர்ந்த கடவுள் இல்லை ‘ என்ற வாக்கியத்தை எழுதி வாங்கிவிட்டால் அவர்கள் இருவரையும் மன்னித்துவிட்டுவிடலாம் அவ்வாறு அவர்கள் இருவரும் மறுக்கும்பட்சத்தில் அவர்களைக் கொன்றுவிடலாம் என்று நாலூரான் என்ற வைணவத்தைச் சேர்ந்த அமைச்சனின் தலைமையில் திட்டம் தீட்டினார்கள்.

ஒரு பெரிய படையே ராமானுஜரை பிடித்துவர அவருடையமடம் இருக்கும் ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டது. இதற்கு நடுவில் இந்தச் செய்தி ராமானுஜரின் சீடர்களின் செவிகளை எட்டியது. அவர்கள் ராமானுஜரை காப்பாற்றத் தயாரானார்கள். வருகின்ற வீரகளுக்கு யார் ராமானுஜர் யார் கூரத்தாழ்வான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இருவரும் தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்வது என தீர்மானமாயிற்று.

இதற்கு ராமானுஜர் இறுதிவரையில் ஒப்புகொள்ளவில்லை. ஆனால் அவருடைய சீடர்கள் ஸ்ரீ வைணவம் இந்த தமிழக மண்ணில் தழைக்க வேண்டுமென்றால் இதனைத் தவிர வேறுவழியில்லை என்று மன்றாடி கேட்டனர். முடிவாக ராமானுஜர் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். கூரத்தாழ்வான் அணித வெள்ளை வேட்டியை ராமானுஜரும், ராமானுஜரின் காவியுடையை, திரிதண்டத்தை கூரத்தாழ்வானும் அணிந்து கொண்டனர்.

ராமானுஜர் தனது தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினார். இவருடன் 45 அணுக்கத் தொண்டர்கள் உடன் சென்றனர். ஐந்து நாட்கள் நெடிய பயணத்திற்கு பின்பு சோழ எல்லையைக் கடந்தனர்.

இதற்கு நடுவில் ராமானுஜரைப் பிடித்துவர ஏவப்பட்ட வீர்கள் கூரத்தாழ்வானை ராமானுஜர் என்று நினைத்துப் பிடித்து சென்றுவிட்டனர். அவருடன் பெரியநம்பியும் , கூரத்தாழ்வானின் மகளான அத்துழாயும் உடன்சென்றனர்.

அவையில் பண்டிதர்களுக்கு நடுவில் சிவனே உயர்ந்த தெய்வம் என்று எழுதிக் கொடுக்குமாறு கிரிமிகண்டன் ஆணையிட்டான். ராமானுஜரின் வைணவப் பாசறையில் வளர்ந்த புலியல்லவா கூரத்தாழ்வான்? அரசனின் ஆணையை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

“இந்தச் சபையில் உள்ள பண்டிதர்களை உனது வாதத்தின் மூலம் ஜெயித்துவிடு. நீ நாராயணனே பெரியகடவுள் என்பதை நிறுவவேண்டும். உன்னால் முடியவில்லை என்றால் உன் தலை துண்டிக்கப்படும்” என்றார் மன்னர்.

வாதம் தொடங்கியது. ஒருதலைப்பட்ச வாதத்தால் கூரத்தாழ்வாரால் எதிர்வாதம் செய்ய முடியாமல் போனது. கொக்கரித்து எக்காளமிட்ட சைவப்பண்டிதர்கள், கூரத்தாழ்வாரிடம் “சிவனைவிட வேறு சிறந்த பொருள் இல்லை.சிவாத் பாதாம் நாஸ்தி” –அதாவது சிவனே பெரியவர் என்ற வாசகத்தை எழுதிக் கொடுத்து கையொப்பமிட சொன்னார்கள்.

அதற்கு கூரத்தாழ்வார் “த்ரோனமச்தி தாதா: பரம் அதாவது மரக்கால் சிவத்தை விடப் பெரியது” என்றார். இங்கே துரோணம் என்பதும் சிவம் என்பதும் அந்தக் காலத்தில் நெல் அளக்க பயன்படும் பழங்காலக் கருவிகள். துரோணம் அளவில் பெரியது என்பதால் துரோணம் சிவத்தைவிடப் பெரியது என்ற சிலேடை மொழியில் பாடினார். அரசனும் அரசவையினரும் ஆத்திரமுற்றனர்.

ராமானுஜர் ஒருமுறை கிரிமிகண்டனின் சகோதரிமேல் ஏறியிருந்த பிரம்மராக்ஷசை விரட்டியிருப்பதால் ராமானுஜரைக் கொல்ல வேண்டாம் என்று கருதி.   (அதாவது ராமானுஜர் போல இருக்கும்) கூரத்தாழ்வாரை கண்களை மட்டும் கூரிய வாளால் குத்திவிட்டு அனுப்பிவிடச் சொல்லிவிடுகிறான். பெரியநம்பியும் அத்துழாயும் துடி துடிக்க, கூரத்தாழ்வாரின் கண்கள் பிடுங்கப்படுகின்றன. ஆச்சாரியாருக்காக தனது கண்களைக் கொடுப்பதற்கு கூரத்தாழ்வார் அச்சமில்லாமல் நின்றார்.

அதன்பிறகு மூவரும் காட்டுவழியில் திருவரங்கம் ஏகினர். வழியில் மூப்பின் காரணமாக பெரியநம்பி இறந்து விடுகிறார். காட்டிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கிரிமிகண்டன் தீர்க்க முடியாத நோய் ஒன்றினால் இறந்தான். அவன் சிறந்த சிவபக்தனாக இருந்தும் வைணவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். சிவனும் விஷ்ணுவும் பரம்பொருளின் இரண்டு வடிவங்கள் என்பதை அறியாமலே இறந்துவிட்டான்.

(தொடர்கிறது)

வியாழன், 26 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7

 -இரா.சத்தியப்பிரியன்வெற்றி எட்டு திக்கும் எட்ட…


தண்ணீர் ததும்பி வழியும்குளத்தை பறவைகளும் விலங்குகளும் தேடி தேடி வருவதை போல ராமானுஜரின் ஞானப்பெருவேள்ளத்தில் மூழ்கிக் களிக்க அவரிடம் சீடர்களாக வந்து சேர்ந்தவர்கள் ஏராளம். அத்தனை சீடர்களையும் ,தனது அடியார்களையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணன் புகழ் பாடி அவனது வெற்றிக்கொடியை நாட்ட ராமானுஜர் தீர்மானித்து திக்விஜயம் புறப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் தொடங்கிய திக்விஜயம் திருக்குடந்தை, மதுரை, அழகர்கோவில், திருக்குறுங்குடி வழியாக நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார்த்திருநகரி சென்டைகிறது. ராமானுஜரும் நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் திருவாய்மொழிப் பாசுரங்களை பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து கேரளதேசம் சென்று அங்கு திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபனை சேவித்துவிட்டு வடக்கே தனது யாத்திரையை மேற்கொள்கிறார்.

செல்லுமிடமெல்லாம் அனைத்து வைணவத் தலங்களிலும் நாலாயிர திவ்யபிரபந்தம் பாடுமாறு வரையறுக்கிறார். திருவனந்தபுரத்தில் இதனைக் கோவில் நம்பூதிரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

அங்கிருந்து வடக்கு நோக்கி யாத்திரையைத் தொடங்கினார். துவாரகை , வடமதுரை, பிருந்தாவனம், சாலகிராமம், அயோத்தி, பத்ரி, கேதார்நாத், புஷ்கரம் போன்ற புனித தலங்களில் ஸ்ரீமன் நாராயணனை தரிசித்துவிட்டு இறுதியில் காச்மீரத்தில் சாரதாபீடத்தை வந்தடைந்தார். அங்கே பீடத்தில் இருந்த சாரதா தேவி அவருடைய கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணி என்ற உபநிடத வாக்கியத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்து ராமானுஜருக்கு ‘பாஷ்யகாரர்’ என்ற பட்டத்தை வழங்கியதாக ஒரு சிறப்புக் கதை வழங்குகிறது.

சாரதாதேவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவர் காசி சென்றார். பின் புரி நகரில் எம்பார் என்ற பெயரில் வைணவ மடம் ஒன்றை நிறுவுகிறார். வழியில் ஸ்ரீகூர்மம், சிம்மாசலம் போன்ற இடங்களில் வைணவ நெறியை பரப்பி கருடமலை அடைந்து அங்கு சிலகாலம் தங்கி அகோபிலம் என்ற இடத்தில் ஒரு மடத்தை நிறுவுகிறார்.

அங்கிருந்து திருப்பதிக்கு வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தி சைவக் கடவுளா வைணவக் கடவுளா என்ற சர்ச்சையை தீர்த்து ஏழுமலையான் நாராயணின் திருமூர்த்திஅம்சமே என்பதை நிறுவிவிட்டு தம் சீடர்களுடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.

ஆதிசங்கரரைப் போல ராமானுஜரும் வைணவ நெறிக்கு ஆற்றியுள்ள தொண்டு எண்ணிலடங்கா. செல்லும் வழியெல்லாம் எதிர்ப்புகளும் கொலை மிரட்டல்களும் அவரைத் துரத்தின. எதற்கும் அஞ்சாமல் நலம் தரும் ஒரே சொல்லான நாராயண மந்திரத்தை மட்டும் நம்பி தனது வைணவக் கொள்கையை பரப்புவதை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்.

(தொடர்கிறது)


புதன், 25 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6

 -இரா.சத்தியப்பிரியன்ஆளவந்தாரும் திருவரங்கமும்


ஆளவந்தாரின் பாட்டனார் நாதமுனி என்னும் வைணவப் பெருந்தகை. யமுனைத்துறைவன் என்ற பூர்வ பெயருடன் விளங்கிய ஆளவந்தார் ஒருமுறை கோலாகலர் என்ற வடக்கத்தி புலவரின் திக்விஜயத்திலிருந்து மதுரை மாநகரைக் காப்பாற்றியதால் அரசன் அளித்த பாதி ராஜ்யத்தை அரசாண்டு வந்தார். நாதமுனிகள் தமது இறுதி காலத்தில் தன் பெயரன் எல்லாம்வல்ல இறைவனை நாடாமல் உலக இன்பங்களில் மூழ்கிஇருப்பது கண்டு மனம் வருந்தி மணக்கால்நம்பி என்ற சீடரை அனுப்பினார்.

மனக்கால்நம்பியும் ஆளவந்தாரிடம் அவருடைய தன்மைக்கேற்ப ஒரு பெருநிதி இருக்கும் இடத்திற்கு கூடி செல்வதாகக் கூறி ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து சென்று எம்பெருமான் முன் கொண்டு நிறுத்துகிறார். அந்தக் கருணைப்பெருநிதியைக் கண்ட யமுனைத்துவரின் கண்கள் வேறு எந்த நிதியையும் நாடாமல் இருந்தது. பின்னர் ஸ்ரீரங்கம் மடத்தினை கட்டி காப்பாற்றும் பொறுப்பை வகிக்கிறார். வைணவக் கோட்பாடுகளை நிறுவுகிறார்.

காஞ்சிபுரத்தில் வசிக்கும் ராமானுஜர் புதியதாக துவைத கோட்பாடுகளை விளக்கிவருவது குற்த்து அவரைக் காண ஆவல்கொள்கிறார். ஆனால் ராமானுஜர் யாதவப்பிரகாசரின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைக் கண்டு மனம் வாடுகிறார். பின்னர் தனது சீடர்களில் ஒருவரான பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்துவர பணிக்கிறார். பெரியநம்பியும் ஆறு மாதங்கள் இராமானுசருடன் ஒரே வீட்டில் குடியிருந்து அவருக்குள்ள வேத ரகசியங்களையும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார்.

ராமானுஜரின் நல்ல நேரமா போதாத நேரமா தெரியவில்லை பெரியநம்பியும் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் இல்லை. செட்டி குலத்தைச் சேர்ந்தவர். இவருடைய இல்லாளிடம் தஞ்சமாம்பாள் பேதம் பாராட்டி நடந்துகொள்ளவே ராமானுஜர் முழுவதுமாக துறவறம் மேற்கொள்கிறார்.

வரதராஜப் பெருமானின் சன்னிதிமுன் சென்று “இறைவா எம்பெருமானே ! இன்றுமுதல் நான் உனக்கு அடிமை. இந்த அடிமையைக் கடைத்தேற்றவேண்டியது இனி உன் பொறுப்பு” என்கிறார்.

காவியுடை அணிகிறார். திரித்தண்டம் ஏந்துகிறார். கோவிலுக்கு முன்பிருக்கும் குளத்தில் அக்னி வளர்த்து பொருளாசையையும் பெண்ணாசையையும் துறப்பதாக சங்கல்பம் செய்து கொள்கிறார்.

ஆளவந்தாரின் மறைவுக்கு பின்பு ராமானுஜர் பெரியநம்பியை தனது ஆச்சாரியராகக் கொள்கிறார். பெரியநம்பியிடம் நியாச தத்துவம், கீதார்த்த சங்க்ரஹம்,பஞ்சசாத்திர ஆகமம் ஆகிய நூல்களைப் பயில்கிறார்.

அதன் பிறகு சற்று தொலைவில் இருந்த திருக்கோட்டியூர் சென்று அங்கு ஆச்சாரியராக விளங்கும் திருகோட்டியூர் நம்பியிடம் சீடனாக சேர்ந்து பாடம் பயிலச் செல்கிறார்.

திருகோட்டியூர்நம்பி அவ்வளவு எளிதில் ராமானுஜரின் விண்ணபத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பதினோரு முறை நிராகரிக்கிறார்.

ஒருநாள் இரவில் எம்பெருமானே கனவில் தோன்றி ராமனுஜரை சீடனாக ஏற்றுக் கொள்ளச் சொல்லியும் கூட ஒப்புக்கொள்ளாமல் எம்பெருமானிடம் திருமந்திரத்தை கற்றுக் கொள்ளும்சீடன் சிறந்த ஒழுக்க சீலனாகவும் தவ வலிமை உடையவனாகவும் இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். “எல்லா தகுதிகளும் ராமானுஜனிடம் இருக்கிறது. அவனை நீ சீடனாக ஏற்றுக் கொள்” என்று எம்பெருமான் ஆணையிடுகிறார்.

அதன்பிறகே திருகோட்டியூர்நம்பி ராமானுஜரை சீடனாக ஏற்றுக்கொள்கிறார். எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கும் முன்னர் “இந்த மந்திரத்தின் பெருமை அந்த வைகுந்தனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. உன்னைத் தவிர வேறுயாருக்கும் இந்த மந்திரத்தை கேட்கும் தகுதி கிடையாது. இந்த மந்திரத்தை கேட்டவுடன் அவன் இறந்தபின்பு வைகுந்தப்பதவியை அடைவது உறுதி”.

இதைச் செவியுற்றதும் ராமானுஜருக்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. அந்த எட்டெழுத்து மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் திருக்கோட்டியூர்நம்பியிடம் கற்றுக் கொண்டார். பிறகு ஒருநாள் திருகோட்டியூரில் குடிகொண்டிருந்த எம்பெருமான் ஆலயச் சுவரில் ஏறி அமர்ந்துகொண்டு “எம்பெருமானின் பரம பக்தர்களே ! அனைவரும் இங்கே வாருங்கள். இந்த அற்ப மானுடப் பிறவி முடிந்தபின்னர் நீங்கள் வைகுந்தம் செல்ல நான் உங்களுக்கு ஒருமந்திரத்தை சொல்லித் தருகிறேன்” என்று அழைத்தார்.

மக்கள் பெருந்திரளாக அந்த கோவிலின் மதில் அருகில் கூடினார்கள். எந்த மந்திரத்தை மிகவும் ரகசியமாகவும், தவம் செய்தும் ஆச்சாரியானிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி திருக்கோட்டியூர்நம்பி ராமானுஜருக்கு சொல்லி கொடுத்தாரோ அந்த எட்டெழுத்து மந்திரத்தை அனைவரும் அறியும் வண்ணம் உரக்கக் கூவினார். ஊர்ஜனங்களும் அந்த எட்டெழுத்து மந்திரத்தை கூறி மனதில் ஆனந்தம் அடைந்தனர்.

இதைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர்நம்பி ராமானுஜர் மேல் அடக்கமுடியாத சினம் கொண்டார்.  “எவ்வித பக்தி சிரத்தையுமில்லாமல் போவோர் வருவோருக்கெல்லாம் இந்த மந்திரத்தை உபதேசித்த உனக்கு அந்த நரகத்தில்தான் இடம் கிடைக்கும்” என்று சீறியருளினார்.

அதற்கு ராமானுஜர் “நான் ஒருவன் நரகம் சென்று இந்த மந்திரத்தினால் இந்த மக்கள் வைகுந்தம் புகுவார்கள் என்றால் எனக்கு அதில் உடன்பாடுதான்” என்றார்.

இதைச் செவியுற்றதுமே திருக்கோட்டியூர்நம்பி தனது சினத்தை முற்றிலும் மறந்து  “ராமானுஜா! இன்றுமுதல் நான் உனக்கு ஆச்சாரியன் இல்லை. நீதான் எனக்கு ஆச்சாரியான்” என்று கூறுகிறார். இதனை மறுத்த ராமானுஜர் அங்கிருந்து திருவரங்கம் செல்கிறார்.

திருவரங்கத்தில் பெரியநம்பியிடம் சிலகாலம் பாடம் பயில்கிறார். ஆளவந்தாரிடம் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும்பொருட்டு ஸ்ரீபாஷ்யதிற்கு வியாக்கியானம் எழுதுகிறார்.ஆளவந்தாரின் பிரதம சீடர்களான பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருகோட்டியூர்நம்பி, திருமலையாண்டான், திருவரங்கப்பெருமாளரையர் ஆகியோரிடம் பாடம் பயின்றார். ராமானுஜரின் அறிவுக்கனல் சுடர்விட்டு பிரகாசித்தது. அவருடைய புகழ் எட்டு திக்கும் பரவியது.

ராமானுஜர் திருவரங்கமடத்தின் பொறுப்பையேற்கிறார். அந்தக் கோவிலின் தலைமை அர்ச்சகருக்கு இதுவரையில் காணிக்கை கணிசமாக வந்து கொண்டிருந்தது. ராமானுஜர் பொறுப்பேற்றதும் கோவில் நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். எனவே தலைமை அர்ச்சகரின் வரும்படி கணிசமாகக் குறைந்தது. எனவே ஒருநாள் ராமானுஜரை தனது இல்லத்தில் உணவருந்த கூப்பிட்டு உணவில் விஷம் கலந்து கொன்றுவிடலாம் என்று திட்டம் தீட்டுகிறார். அர்ச்சகரின் மனைவியும் கணவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் உணவு சமைத்து அதில் விஷமும் கலந்து விடுகிறார்.

உணவு உண்ண ராமானுஜர் வருகிறார்.அவருடைய கல்மிஷம் இல்லாத முகத்தைப்அந்த அம்மையார் பார்க்கிறார். அதில் தகிக்கும் ஞானப் பிரகாசம் அவரை வெட்கமுறச் செய்தது. இந்த ஞானிக்கா நாம் விஷம் கலந்த உணவை கலந்து கொடுக்க போகிறோம் என்று வருத்தமுருகிறார். தன் கணவருக்குத் தெரியாமல் அன்னத்தில் விஷம் கலந்த விஷயத்தை கூறிவிடுகிறார். அந்த உணவை சாப்பிடாமல் ராமானுஜர் சென்று விடுகிறார். வேறு எவரிடமும் இதைப் பற்றி கூறாமல் உள்ளுக்குள்ளே புகைந்து கிடந்தார்.

தனது திட்டம் தன் மனைவிமூலம் சர்வநாசம் அடைந்தது தெரிந்த தலைமை அர்ச்சகர் மறுநாள் எம்பெருமான் சன்னிதியில் அளிக்கப்படும் தீர்த்தத்தில் விஷம் கலந்து வைத்துவிடுகிறார். தீர்த்ததைப் பெற்றுக் கொள்ளும் ராமானுஜர் அதனைப் பருகியதும் ஒருவித உன்மத்த நிலையை அடைகிறார். அந்த விடம் அவருக்கு ஊறு விளைவிக்கவில்லை. மாறாக அவருடைய பேரானந்தத்தை வெளிக்கொணர்ந்தது.

அங்குகூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அந்த இளையபெருமாள் இலக்குவனனே நேரில் வந்து தரிசனம் தந்ததைப்போல ஆனந்தம் கொண்டனர். தலைமை அர்ச்சகர் அப்பொழுதுதான் ராமானுஜரின் மகிமையை உணர்ந்து கொண்டார். கண்ணில் நீர்மல்க மன்னிப்பு கேட்டார். ராமானுஜர் அவரை மன்னித்து தனது மேன்மையைப் பறைசாற்றினார்.


(தொடர்கிறது)செவ்வாய், 24 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5


-இரா.சத்தியப்பிரியன்மனைவி அமைவதெல்லாம்


தஞ்சமாம்பாள்
வைதீக குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய தந்தை சிறந்த வேதநெறியில் ஒழுகிய அந்தணர். அந்தக் காலத்தில் ஜாதியில் ஏற்ற தாழ்வு பெரிய அளவில் பார்க்கப் பட்டது. அந்தணர் அல்லாத வேற்றுஜாதி மனிதர்களுக்கு உணவு வழங்கினால் மீண்டும் அடுப்பு சமையல் பாத்திரங்களை கழுவிய பின்பே வீட்டு மனிதர்களுக்கு புதிதாக சமைக்க வேண்டும் என்ற நெறி கடைபிடிக்கப்பட்டது. தனது தந்தை இல்லத்தில் வளர்ந்த தஞ்சமாம்பாள் புகுந்த வீட்டிலும் அதே நெறியைப் பின்பற்றுகிறார். ஆனால் ஸ்ரீராமானுஜர் அவதார புருஷன் அல்லவா?

இராமானுஜருக்கு ஸ்ரீமன் நாராயணன் ஒருவன்தான் பரம்பொருள் மற்ற அனைத்து ஜீவராசிகளும் அவனுடைய அடிமைகள். இன்னும் சொல்லப் போனால் மகாவிஷ்ணு ஒருவர்தான் ஆண் மற்ற அனித்தும் யோனிகளே என்ற தீவிர விசிஷ்டாத்வைதக் கொள்கையில் ஊறித் திளைத்தவர். எனவே அவர் கண்களுக்கு ஏழை, செல்வந்தன், குடிப்பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களில்லை. எனவே மனைவி இவ்வாறு பேதம் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் வெதும்புவர். இந்த வேதனை அறச் சீற்றமாக வெளிக்கிளம்ப இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருகச்சி நம்பி என்பவர் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்த வேலாள குலத்தைச் சேர்ந்த பெருமகனார் ஆவார். எப்படிப்பட்ட கைங்கரியம் என்கிறீர்கள்? எந்தக் காலத்திலும் வரதராஜப் பெருமான் வெப்பத்தால் வாடக் கூடாது என்பதற்காக வெட்டிவேரினில் விசிறி செய்து அந்த விசிறியை நன்றாக குளிர்ந்த நீரில் நனைத்து அந்த விசிறியை அசைத்து எம்பெருமானுக்கு குளிர்ந்த காற்றினை வீசும் கைங்கரியம். இதுபோன்ற தொண்டுகளை எம்பெருமானுக்கு செய்வதால் தொண்டனுக்கு ஏற்படும் ஆனந்தத்தைப் போல ஓர் ஆனந்தம் வேறு எதுவும் இருக்கமுடியாது. நமது சைவ புராணத்தில் கூட குங்கிலிக்கலய நாயனார், சிறுத்தொண்டர் போன்றவர்களின் இறைத்தொண்டும் இத்தகையதே. ஏன் ஸ்ரீ ராமானுஜர்கூட இப்படி ஒரு கைங்கையத்தை வரதராஜப் பெருமாளுக்கு செய்து வந்தார். அதற்குக் காரணமானவர் திருக்கச்சிநம்பி அவர்கள் தாம்.

வேட்டுவ தம்பதிகள் எந்தக் கிணற்றடியில் ராமானுஜரை பத்திரமாகக் கொண்டு சேர்த்தார்களோ அன்றிலிருந்து அந்தச் சால கிணற்றிலிருந்து குடங்களில் நீர்சுமந்து எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கு நீர் கொடுப்பது அவருடைய நித்திய கைங்கரியங்களில் ஒன்று. சரி நாம் இந்த திருக்கச்சிநம்பி விஷயத்திற்கு வருவோம்.

திருக்கச்சி நம்பியின் முகத்தில் எப்போதும் அமைதியும் அன்பும் குடிகொண்டிருக்கும். சதா சர்வ நேரமும் வரதராஜப் பெருமாளை மனம் தியானித்தபடியே இருக்கும். எம்பெருமானுக்கு சபரியைபோல தீங்கனிகளை தேடி தேடி எடுத்து வந்து கொடுப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார். இறைவன்பால் அவருக்கிருந்த பற்றினைப் பார்த்த அனாவ்வரும் அவர் அந்த வைகுண்ட வாசனால் நேரிடையாக காஞ்சிக்கு அனுப்பப்பட்டவர் என்றே நம்பினார்கள்.

ஒருமுறை அவருடைய பேரொளியின் வெளிச்சம் தாங்காமல் அவர் இறைவனுக்கு தொண்டு செய்பவர் அவரிடம் சாதிபேதம் கூடாது என்று இராமானுஜர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கப் போனார் . திருகச்சிநம்பி இராமானுஜரை தடுத்துவிட்டார்.

“அந்தணகுலத்தில் பிறந்த நீங்கள் உங்களினும் கீழான குலமான வேளாள குலத்தில் பிறந்த என்னை வணங்கக் கூடாது”

“என்னைப் பொறுத்தவரை அந்த நாராயணனுக்குத் தொண்டு செய்யும் அனைவரும் உயர்ந்த குலத்தை சேர்ந்தவர்கள்தான் “ என்று இராமானுஜர் எவ்வளவோ சொல்லி பார்த்தார்.ஆனால் திருகச்சிநம்பி உள்ளம் மாறவில்லை.

இந்த திருக்கச்சி நம்பிதான் ஸ்ரீரங்கத்தில் வேதவித்துவாகவும் சிறந்த வைணவராகவும் விளங்கிய ஆச்சாரியரான ஆளவந்தாருடன் ஒரு தொடர்பினை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்.

ராமானுஜர் யாதவப்பிரகாசரிடமிருந்து வெளியில் வந்த பிறகு தானே பாடங்களை கற்றுக் கொள்வது என்றிருந்தார். இருபினும் உரிய குரு கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் அவரிடம் மிகுந்து காணப்பட்டது. சிறந்த வைணவ பக்தரான திருக்கச்சி நம்பியிடம் தன்னை மாணாக்கனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். இறைவன்பால் பற்றுள்ள தனக்கு இராமானுஜர் அளவிற்கு கல்வியறிவு கிடையாது என்பதை வெள்ளிடைமலையாக ஒப்புக் கொண்டு திருக்கச்சி நம்பி மறுத்துவிட்டார்.

“ஒன்றுசெய் ராமானுஜம் . தினமும் சாலக்கிணற்றிலிருந்து நீர்கொண்டுவந்து வரதராஜபெருமானின் திருமஞ்சனதிற்கு அளித்து வா.நல்லது நடக்கும் நீ விரும்பிய ஆச்சாரியார் உன்னைத் தேடி வருவார்”  என்றார். இராமானுஜரும் அன்றிலிருந்து சாலக் கிணற்றிலிருந்து குடங்களில் நீர் கொண்டு வரதராஜபெருமாளுக்கு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அப்படி இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் ஸ்ரீரங்கத்திலிருந்து வரதராஜப் பெருமானை தரிசிக்க வந்த ஆளவந்தார் இராமானுஜரை பார்க்கிறார்.  ‘சத்யம் ஜ்ஞானம் அனத்தம் பிரம்மம்’ என்ற உபநிடத மந்திரத்திற்கு அற்புத விளக்கம் அளித்தவர் இந்த இராமானுஜர் என்பது தெரிந்தது. இராமானுஜரின் திவ்யத் தோற்றமும், அவருடைய அறிவுப்பிரகாசமும் ஆளவந்தாரை மயக்கியது என்றால் மிகையில்லை. அதன்பிறகு அவர் கொண்ட தீர்மானமும் அதனால் நிகழ்ந்தவைகளையும் குறித்துப் பின்னால் பார்க்கலாம். இப்போது திருக்கச்சி நம்பியிடம் தஞ்சமாம்பாள் தனது குலப்பெருமையை காட்டி அவமதித்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

ஒருமுறை இராமானுஜர் திருக்கச்சி நம்பியை தனது இல்லத்திற்கு அழைத்து அமுதுபடைக்க வேண்டும் என்று பிரியப்பட்டார். தஞ்சமாம்பாளின் குணத்தை அறிந்து வைத்திருந்த திருக்கச்சிநம்பி ஆனமட்டும் இராமானுஜரின் கோரிக்கையை மறுத்துப்பார்த்தார். இராமானுஜர் விடுவதாக இல்லை. முடிவில் இராமானுஜரின் பிடிவாதத்தினால் அவருடைய இல்லத்தில் உணவருந்த ஒப்புக் கொண்டார்.

இராமானுஜர் தன் மனைவியிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். தஞ்சமாம்பாளும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அறுசுவை உணவை சமைத்தார். இராமானுஜர் திருகச்சிநம்பியை அழைத்துவர அவருடைய ஆசிரமத்திற்கு விரைந்தார். இராமனுஜரின் மனைவியின் நோக்கத்தை அறிந்த திருக்கச்சிநம்பி வேறொரு பாதைவழியாக இராமானுஜரின் இல்லத்தை அடைந்தார். தஞ்சமாம்பாள் அவரை இராமானுஜர் வரும்வரையில் காத்திருந்து உணவு அருந்த அழைத்தாள். திருகச்சினம்பியோ தனக்கு அவசர வேலையிருப்பதாகவும் சீக்கிரம் உணவு பரிமாறுமாறு தஞ்சமாம்பாளை கேட்டுக் கொண்டார். அந்த அம்மையாரும் அவருக்கு தலைவாழையிலை போட்டு அறுசுவை உணவு பரிமாறினார். உணவை உண்டதும் திருக்கச்சி நம்பி தானே இலையை எடுத்து வெளியில் எறிந்துவிட்டு தான் சாப்பிட்ட இடத்தை சாணம் போட்டு மெழுகினார். பிறகு கிளம்பிச் சென்றார். இதுவாவது பரவாயில்லை. இதற்குப் பிறகு தஞ்சமாம்பாள் நடந்துகொண்டது கொடுமையானது. எஞ்சியிருந்த உணவை பணிப்பெண்ணிற்கு கொடுத்துவிட்டு அடுப்பையும் சமையல் கூடத்தையும் மீண்டும் கழுவி சுத்தம் செய்து அதன்பிறகே புது உணவு சமைத்து இராமானுஜருக்காகக் காத்திருந்தார்.

இராமானுஜர் வருகிறார்.

இராமானு: அங்கே ஆசிரமத்தில் திருக்கச்சி நம்பியைக் காணவில்லை. அவர் இங்கே வந்திருந்தாரா?

தஞ்சா: ஆமாம் வந்திருந்தார்.

இராமானு: ஆஹா அப்படியா சங்கதி. நீ அவரை இருக்கச் சொன்னாயா?

தஞ்சா: நீங்கள் வரும்வரையில் காத்திருக்கச் சொன்னேன்.

இராமானு: அதற்கு அவர் என்ன சொன்னார்?

தஞ்சா: அவசரவேலையிருக்கிறது என்பதால் சீக்கிரம் உணவு பரிமாற சொன்னார்.

இராமானு: நீ ஒழுங்காகப் பரிமாறினாயா?

தஞ்சா: நானும் பரிமாறினேன் . அவரும் திருப்தியாக உணவு அருந்தி விட்டு சென்றார்.

இராமானு: சரி சரி எனக்கு பசிக்கிறது. இலையைப் போடு . சாப்பிடவேண்டும்.

தஞ்சா: கொஞ்சம் இருங்கள் சாதம் உலையில் கொதிக்கிறது .

இராமானு: நீ ஒருவருக்காகவா சமைத்தாய் ? அவர் சாப்பிட்ட மிச்சம் இருக்குமே அதைப் பரிமாறு.

தஞ்சா: அவர் சாப்பிட்ட மிச்சத்தை நீங்கள் ஏன் சாப்பிடவேண்டும்? அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். உங்களுக்கு முழுவதும் புதிதாகவே அன்னம் சமைத்திருக்கிறேன்.

இராமானு: பேரருளாளனின் உண்மை பக்தர் அவர். அவரையா கீழ்க்குலம் என்று பேதம் பார்க்கிறாய்? வேண்டாம் தஞ்சமாம்பாள். உன்னிடம் பரமபக்தர்களிடம் பேதம் பார்க்கும் குணம் அதிகம் இருக்கிறது. அது உன்னை நாசம் செய்துவிடும்.

-உண்மையில் அந்த சாதிபேதம் பார்க்கும் குணம் தஞ்சமாம்பாளை அழித்தது என்றே சொல்லலாம். மீண்டும் ஒருமுறை ஆளவந்தாரின் சீடரான பெரியநம்பியிடமும் இவ்வாறே நடந்துகொள்ள நேரிட, அதுகண்டு பொறுக்காமல் இராமானுஜர் தஞ்சமாம்பாளை அவருடைய பிறந்தவீட்டில் கொண்டு விட்டு துறவு மேற்கொள்கிறார்.

இறுதிவரையில் தஞ்சமாம்பாள் தனது கணவரின் பேரன்புமிக்க பேதமற்ற விசாலமான மனதைப் புரிந்துகொள்ளாமல் சாதிப்பெருமையில் உழன்று தனது வாழ்வைக் கெடுத்துகொண்டார். இராமனின் பெருமையை உலகறியச் செய்ய ஒரு கைகேயி தேவைப்பட்டதுபோல இராமானுஜரின் பெருமையை உலகறியச் செய்ய தஞ்சமாம்பாள் போன்றோர் தேவைப்பட்டனர் என்றுதான் மனதை சமாதானம் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது.


(தொடர்கிறது)

திங்கள், 23 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4

 -இரா.சத்தியப்பிரியன்அரசிளங்குமரிஒருமுறை காஞ்சி மன்னனின் மகளுக்குத் தீராத மனோவியாதி ஏற்பட்டது. மற்ற மானுடப்பென்களைப் போலன்றி மனப்பிறழ்வில் அதீதமாக நடந்துகொள்ளத்தொடங்கினாள்.பார்க்கும் வைத்தியர்கள் அனைவரும் அரசிளங்குமரிக்கு பிரம்மராக்ஷஸ் பற்றிக் கொண்டிருக்கிறது எனவே பிரம்மராக்ஷசை விரட்டும் மாந்த்ரீகனைத்தான் அழைத்து வரவேண்டும் என்று கூறிவிட்டனர். யாதவபிரகாசருக்கு மாந்த்ரீக வைத்தியம் தெரியும் என்பதால் அரசன் அவரை அழைத்துவர ஆள் அனுப்பினான்.

யாதவபிரகாசர் அரண்மனையின் அந்தப்புரத்தில் அரசிளங்குமரியின் இல்லம் நோக்கி சென்றார். தனக்குத் தெரிந்த மந்திரங்களை பிரயோகித்தார். அவரை எள்ளி நகையாடிய பிரம்மராஷஸ் இடிச்சிரிப்புடன் கூறியது.

“யாதவப்பிரகாசரே ! உனது மந்திரம் என்னிடம் பலிக்காது.நீ கற்ற மந்திரங்கள் என்னைவிரட்டும் அளவிற்கு சக்தி உடையவையல்ல. நான் இங்கிருந்து அகலவேண்டுமென்றால் உனது சீடனான இராமானுஜனை இங்கே அனுப்பு “ என்றது.

யாதவப்பிரகாசருக்கு இதுபொறுக்கவில்லை. எனினும் அரசனின் ஆணையை நிறைவேற்றவில்லை என்றால் அதன் விளைவுகளை தான்தான் சந்திக்க நேரும் என்பதால் இராமானுஜரை அரண்மனைக்கு அனுப்பினார்.

இராமானுஜர் அரண்மனைக்கு சென்றார். அந்தபுரத்தில் அரசிளங்குமரியை சந்தித்தார். தனக்குத் தெரிந்த மந்திரங்களை கூறத் தொடங்கினார்.

பிரம்மராக்ஷஸ் பயங்கரமாக சிரித்துக் கொண்டு “ நான் இந்த இளவரசியை விட்டு அகலவேண்டுமானால் உங்கள் பாதம் என்மீது படவேண்டும்” என்றது.

இராமானுஜர் , “ஹே! பிரம்ம ராக்க்ஷசே நீயோ ரூபமற்றவன். உன் மீது என் பாதங்கள் எப்படி படும்? ” என்று வினவுகிறார்.

பிரம்மராக்ஷஸ்  “சுவாமி ! தங்கள் திருப்பாதங்களை இந்த இளவரசியின் தலைமீது வையுங்கள். அது என்மீது படும்” என்றது.

இராமானுஜர்  “நீ இந்த அரசிளங்குமரியை விட்டு அகன்று விட்டாய் என்பதற்கு என்ன சாட்சி ? “ எனக் கேட்கிறார்.

அதற்கு பிரம்மராக்ஷஸ்  “நான் இந்த பெண்ணைவிட்டு அகன்றதும் அந்தப்புரத்தின் அருகில் உள்ள அரசமரத்தின் பெரியகிளை ஒன்று முறிந்துவிழுவதைக் காணலாம்” என்றது

பிரம்மராக்ஷஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க இளவரசியின் சிரசின் மீது இராமானுஜர் தனது பாதத்தை வைத்தார். மறுகணமே வெளியில் இருந்த அரசமரத்தின் பெரிய கிளை ஒன்று பெருத்த சப்தத்துடன் முறிந்து விழுந்தது. இளவரசியும் மயக்கமுற்று எழுபவளைப் போல எழுந்துவிட்டாள்.

பிரம்மராக்ஷஸ் அவளைவிட்டு அகன்றதால் மீண்டும் பழைய நிலையை அடைந்தார். அரசனும் மகிழ்வுற்று இராமானுஜருக்கு சிறப்பு செய்து அனுப்பினான்.

யாதவப்பிரகாசரின் பாடசாலை தொடர்ந்து நடந்தது. இராமானுஜரும் அவரிடம் தொடர்ந்து பாடம் கற்று வந்தார். ஒரு நாள் சாந்தோக்ய உபநிடத்தில் ஒரு மந்திரத்திற்கு பொருள் கூறிக் கொண்டிருந்தார்.  “சர்வம் கல்விதம் பிரம்மம்” என்பது ஒரு சூத்திரம்.  “நேக நாநாஸ்தி கிஞ்சன” என்பது வேறொரு சூத்திரம். முதல் சூத்திரத்திற்கு இங்கு எல்லாமே பிரம்மம் என்ற அத்வைத கோட்பாடு விளங்கும்படியான விளக்கத்தை யாதவர் அருளினார். அடுத்த சூத்திரத்திற்கு இங்கு எதுவும் பலவாக இல்லை என்ற மீண்டும் அத்வைதக் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கம் கூறினார். இதனை துவைத கொள்கையில் மனம் ஊறிப்போயிருந்த இராமானுஜரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

இராமானு: இதை நான் மறுக்கிறேன்

யாதவ: ஆச்சாரியானை மறுக்கும் போக்கு உன்னிடம் அதிகமாகி வருகிறது இராமானுஜா! மாற்றிக் கொள்

இராமானு: அதற்காக ஆச்சாரியார் பிழைபடகூறி அதன்மூலம் அவருக்கு அவப்பெயர் ஏற்படுமேயானால் அதனை பொறுத்துக் கொண்ட சிஷ்யன் எங்கனம் சிறந்த சிஷ்யனாவான்?

யாதவ: சாமர்த்தியமாகப் பேசுவதாக அர்த்தமா?

இராமானு: நிஜத்தை சொன்னேன் சுவாமி

யாதவ: அப்படி என்ன நிஜத்தைக் கண்டாய் ? உன் விளக்கத்தைக் கூறு பார்க்கலாம்.

இராமானு: சர்வம் கல்விதம் பிரம்ம என்பதற்கு இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் பிரம்மம் என்று அர்த்தம் கொள்ளலாம். ஏன் என்றால் பிரபஞ்சம் தோன்றுவது, சாஸ்வதமாக இருப்பது, மறைவது ஆகியவை இந்தப் பிரம்மத்தால்தான் நடைபெறுகிறது என்பதால் அது பிரம்மத்துடன் தொடர்புடையது என்று கொள்ளலாம். மீனுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பைப் பாருங்கள். மீன் நீரிலே பிறந்து அதிலேயே வளர்ந்து அதிலேயே மரிக்கின்றது. நீரில்லாமல் மீனால் எப்படி உயிர்வாழ முடியாதோ அதைப்போல பிரம்மமின்றி இப்பிரபஞ்சம் இல்லை. நேக நாநாஸ்தி கிஞ்சன என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?

யாதவ: இங்கே எதுவும் பலவாக இல்லை என்பதே இதன் பொருள்

இராமானு: தவறு சுவாமி.

யாதவ: என்ன தவறு கண்டாய் ? இதற்கு உன் விளக்கம் என்ன?

இராமானு: நேக நாநாஸ்தி கிஞ்சன என்பதற்கு இங்கு எதுவும் பலவாக இல்லை என்பதல்ல பொருள்.உலகிலுள்ள பொருட்களுக்கு தனித்தனி தன்மை கிடையாது.ஜீவாத்மா என்ற ரீதியில் அவை அனைத்தும் ஒன்றே.எம்பெருமான் தனி ஒரு பொருளான பரம்பொருள் என்றால் உயிருள்ளவை உயிரற்றவை என்ற மற்ற அனைத்து ஜீவராசிகளும் ஜீவாத்மா என்ற போர்வையில் அடங்குபவை. ஒரு முத்து மாலையை எடுத்துக் கொள்ளுங்கள். முத்துக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி என்பது போல தோன்றும். ஆனால் ஒரு ஊடுசரம் அவற்றை ஒன்றிணைத்து ஒரு மாலையாக்குகிறது. எனவே அந்த முத்துக்கள் அந்த மாலையைப் பொறுத்தவரை தனிதனி கிடையாது. அதைப்போல எம்பெருமான் நம் அனைவர்க்கும் ஊடுசரமாக இருக்கிறான் என்றுதான் இதற்குப் பொருள்.

- தன்னுடைய துவைதக் கோட்பாடுகளை தனியாக  ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற பெயருடன் ஸ்ரீராமானுஜர் ஸ்தாபிப்பதற்கு யாதவப்பிரகாசர் ஒரு கருவியாக இருந்தார் என்றுதான் கொள்ள வேண்டும்.அப்படி ஸ்தாபிப்பதற்கு ஸ்ரீ ராமானுஜர் தனது உயிரைப் பணயம் வைக்க நேர்கிறது. இந்த உயிர்ப் பணயம் இவரது வாழ்க்கை நெடுகிலும் தொடர்கிறது. ஸ்ரீரங்கத்தில் ஒரு அர்ச்சகராலும், கிரிமிகண்டன் என்ற சைவ மன்னனாலும் இவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு எம்பெருமானின் அருளால் தப்பிப் பிழைக்கிறார்.

இராமானுஜர்மேல் கோபம் கொண்ட யாதவப்பிரகாசர் எங்கே தான் போதித்து வரும் அத்வைத கொள்கைக்கு பங்கம் நேருமோ என்ற அச்சத்தில் இராமானுஜரைப் பார்த்து  “அப்பா இராமானுஜா! உனக்கு சொல்லித்தரும் தகுதி இனிமேல் எனக்கில்லை. எனவே நாளை முதல் பாடம் கற்றுக் கொள்ள என்னிடம் வராதே” ன்கிறார்.

ஸ்ரீராமானுஜர் தண்டனிட்டு குருவை வணகி  “அப்படியே ஆச்சாரியாரே” என்று கிளம்பினார். அன்றிலிருந்து ஸ்ரீராமானுஜரும் யாதவப்பிரகாசரிடம் பாடம் கற்க செல்லவில்லை. ஆனால் இந்த ஆச்சாரியரே தனது சிஷ்யனிடம் தானே ஒரு சிஷ்யனாக நேர்ந்த அற்புதத்தை காலம் ஏற்படுத்தியது .

(தொடர்கிறது)


ஞாயிறு, 22 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3

-இரா.சத்தியப்பிரியன்

 

ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்பெரும் மகான்களின் வாழ்க்கையை உற்று நோக்கும்போது அவர்கள் பெரும்பாலும் தமது கோட்பாடுகளை நிறுவ வாதத்திறமையை வளர்த்துக் கொள்வதோடு புத்திசாதுரியத்தால் தங்களது இன்னுயிரையும் காத்துக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆள்ளாகின்றனர். அப்படி ஒரு நிர்பந்தம் இராமானுஜர் வாழ்வில் ஏற்பட்டது. அதுவும் தான் பாடம் கற்றுக் கொண்ட குருவிடமிருந்தே வந்தது.

இராமானுஜரின் துவைதம் பற்றிய விளக்கங்கள் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு யாதவப்பிரகாசர் மனக்கிலேசம் அடைகிறார். அதுவே நாட்பட நாட்பட வன்மமாக உருவெடுக்கிறது. மிகவும் மோசமான முடிவுக்கு செல்கிறார். இராமானுஜரை உயிருடன் உலாவ விட்டால்தானே இது போன்று தனது வியாக்கியானங்களும், கீர்த்தியும் கெடுகிறது எனவே அவரைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறார்.தனது சீடர்களை அழைத்து திட்டம் தீட்டுகிறார். காசிவரையில் புனித யாத்திரை மேற்கொள்ளப்போவதாகவும் அதில் இராமானுஜரையும் கலந்துகொள்ள அழைக்கலாம்;அவ்வாறு இராமானுஜர் உடன் வரும்போது அவரை காட்டுவழியில் அடித்து தாகிக் கொன்றுவிட்டு பழியை மிருகங்கள்மேல் போட்டுவிடலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர்.

இந்த விஷயம் இராமானுஜரின் சிற்றன்னை மகனான கோவிந்தனுக்குத் தெரியவருகிறது. கோவிந்தன் இராமானுஜரை தடுப்பதற்குள் அவர் பிரயாணத்தை மேற்கொண்டுவிடுகிறார். கோவிந்தரும் இராமானுஜரை தனிமையில் அழைத்து விஷயத்தைக் கூறுகிறார். தான் தெய்வத்திற்கும் மேலாக மதிக்கும் ஆச்சாரியார் தனது உயிருக்கு உலைவைக்கப் போகிறவர் என்பதை கேள்வியுற்று மனம் பதைக்கிறார். உள்ளம் வெம்புகிறார். இருப்பினும் இறைவனுக்குத் தொண்டுசெய்ய இந்த பூத உடலின் அவசியம் அறிந்து இரவோடு இரவாக அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிர் பாதையில் பயணிக்கிறார். மறுநாள் யாதவப்பிரகாசரும் அவரது சீடர்களும் இராமானுஜரைத் தேடுகின்றனர். அவர்கள் கண்களுக்குத் தென்படாமல் போகவே தங்கள் கைகளினால் நேரவிருந்த அசம்பாவிதம் நிஜமாகவே மிருகங்களினால் ஏற்பட்டுவிட்டது என்றுநம்பி ஒருவித நிம்மதிப் பெருமூச்சுடன் காசி எனும் புனிதத்தலம் நோக்கி யாத்திரையைத் தொடர்ந்தனர்.

காசியில் கங்கையில் குளிக்கும்போது இராமனுஜரின் ஒன்றுவிட்ட சகோதரனான கோவிந்தனுக்கு ஒரு பாணலிங்கம் கிடைக்கிறது. அதனைக் கொண்டுவந்து கோவிந்தன் காஞ்சியில் பிரதிஷ்டை செய்து மிகச் சிறந்த சிவபக்தனாக மாறுகிறார்.

ஆச்ச்சாரியரால் கைவிடப்பட்ட இராமானுஜர் காட்டில் அலைந்து திரிந்து உண்ணை உணவின்றி, பருக நீரின்றி மிகவும் சோர்ந்து ஒருமரத்தின் கீழ் சுருண்டு விழுகிறார்.

தான் உண்மையென்று கருதும் நாராயணன் தன்னை ஒருபோதும் கைவிடமாட்டான் என்ற திடமான சித்தம்இராமானுஜரிடம் இருந்தது. இறைவன் தனது தொண்டர்களைக் காப்பாற்ற பலநேரங்களில் மனிதவடிவில் வருவதுண்டு. அப்படி பரமேசுவரன் மனித உருவில் வந்து மதுரையம்பதியில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம்.இராமானுஜருக்கும் அப்படி ஒரு தெய்வக்காட்சி வேட்டுவ தம்பதியர் உருவில் கிட்டியது.

வழியில் வேற்றுமனிதர்களை சந்திப்பதும் அவர்கள் நமக்கு உதவுவதும் அதன் பின்னர்நமது நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போவது உண்டு. அவ்வாறு உதவிசெய்தவர்களை நாம் தெய்வமாக நினைப்பதுமுண்டு. ஆனால் இங்கே இராமானுஜர் வாழ்வில் அமானுஷ்யமாக ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.

இராமனுஜரை வழியில் சந்தித்த வேட்டுவ தம்பதியர் அவருடைய குலம் கோத்திரம் முதலியவற்றை விசாரிகின்றனர். அவர்களும் புனிதயாத்திரை மேற்கொண்டு காஞ்சிபுரம் வழியாக இராமேசுவரம் வரை செல்வதாகவும் தங்களுடன் வந்தால் ஒருவருக்கொருவர் உதவியுடன் இருப்பதோடு விரைவில் காஞ்சிபுரமும் சென்றுவிடலாம் என்றும் கூறுகின்றனர். இராமானுஜரும் இதற்கு சம்மதித்து அவரகளுடன் பயணம் மேற்கொள்கிறார்.

அவர்கள் மூவரும் நடந்தபடியே ஓர் இடத்தை அடைகின்றனர். நன்றாக இருட்டி விட்டது. களைப்புமிகுதியால் வேடனின் மனைவி தாகத்திற்கு தண்ணீர் பருகக் கேட்கிறாள்.வேடுவன் காலையில் விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிடுகிறான். அந்த மூவரும் அந்த இரவை அந்தக் காட்டில் கழிக்கின்றனர்.

மறுநாள் காலையில் கண்விழிக்கும் இராமானுஜர் சுற்றும்முற்றும் பார்க்கிறார். ஒரு பெரிய கிணறு தெரிகிறது. உள்ளே குளிர்ந்த நீர் நிறைந்து இருந்தது. உள்ளே செல்வதற்கு வசதியாகப் படிகள் இருந்தன. உள்ளே சென்று கை கால் முகம் கழுவிக்கொண்டு குடிக்க தண்ணீர் கேட்ட வேட்டுவ பெண்ணிற்கு நீர் முகர்ந்து கொண்டுவந்து கொடுத்தார். இவ்வாறு மூன்றுமுறை நீர் முகர்ந்துவந்து கொடுத்தும் அவள்தாகம் தீரவில்லை. நான்காவதுமுறையும் இராமானுஜர் நீர் முகர்ந்து வருவதற்கு அந்தக் கிணற்றின் படிகளில் இறங்குகிறார். அப்போதுதான் அந்த அமானுஷ்யம் நிகழ்கிறது.

நீர் முகர்ந்துவந்த இராமானுஜர் சுற்றும் முற்றும் அந்த வேட்டுவ தம்பதிகளைத் தேடினார். கண்பார்வை செல்லும்வரையில் அவர்கள் தென்படவேயில்லை.என்ன ஆச்சரியம். இது என்ன இடம் என்று பார்க்கிறார். அது ஒரு நகரம் போல காட்சியளிக்கிறது. மாடங்களுடன் கூடிய வீடுகள், இறைவனின் திருக்கோவில்கள், வேதம் முழங்கும் பாடசாலைகள் என்று அவருக்கு மிகவும் பரிச்சயப்பட்ட நகரம்போல காட்சியளிக்கிறது.

எதிரில் வந்த ஒருநபரிடம் அந்த ஊரைப்பற்றி விசாரிக்கிறார்.

வந்த நபர் அந்த நகரம் காஞ்சிபுரம் என்றும் அங்கு இராமானுஜரை அவர் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் கூறுகிறார். மேலும் இராமானுஜர் நீர்முகர்ந்த கிணறு பல நோய்களைத் தீர்க்கும் தன்மையுள்ளது என்கிறார்.

இராமானுஜருக்கு மெய்சிலிர்க்கிறது. பெருமாளும் தாயருமே வேடுவர்களாக வந்து தம்மை காத்து உரிய இடத்தில் சேர்ப்பித்திருக்க வேண்டும் என்று நம்பினார். நாராயணின் மீதான பக்தி வேரூன்றியதற்கு இந்த நிகழ்ச்சி இராமானுஜர் வாழ்வில் முக்கியமான நிகழ்ச்சியாகும்.

இராமானுஜர் திரும்பி வந்ததை ஊரே கொண்டாடுகிறது. இராமானுஜரின் தாயாரும் சிறிய தாயாரும், மனைவியும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். தனக்கு நேர்ந்த அனைத்தையும் தனது வீட்டுப் பெண்களிடம் கூறிய இராமானுஜர் அவற்றை வெளியில் சொல்லவேண்டாம் அதனால் தனது ஆச்சாரியாரின் பெயருக்குக் களங்கம் நேரிடும் என்கிறார். என்னே ஓர் உன்னத உள்ளம் அந்த மகானுக்கு.

புனிதயாத்திரையை முடித்துக் கொண்டு யாதவப்பிரகாசர் தனது சிஷ்யர்களுடனும் இராமானுஜரின் சகோதரர் கோவிந்தனுடனும் காஞ்சி வந்தடைந்தார். அவருடைய மனதில் இராமானுஜருக்கு தாம் இழைத்த இன்னலின் காரணமாக எழுந்த குற்றவுணர்ச்சி அவரை யாத்திரை முழுவதும் வாட்டியவண்ணம் இருந்தது. காஞ்சிபுரம் வந்ததும் இராமானுஜர் உயிருடன் இருப்பதை அறிந்ததும் மற்ற அனைவரைக் காட்டிலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது யாதவப்பிரகாசராகத்தான் இருக்கவேண்டும்

ஆச்சாரியார் முன்பு ஒன்றுமறியாதவர் போல இராமானுஜர் போய் நிற்கிறார்.. யாதவப்பிரகாசர் அவரைத் தழுவியபடி மீண்டும் பாடம் கற்றுக் கொள்ள ஆணையிடுகிறார். இராமானுஜரும் பழைய விஷயங்களை மனதில் கொள்ளாமல் மறுநாளிலிருந்து அவரிடம் பாடம் கற்றுக் கொள்ளச் செல்கிறார்.

இதற்கு நடுவில் இராமானுஜரின் துவைத கோட்பாட்டு வியாக்கியானங்கள் அவருக்கு பெரும்புகழை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. வைணவப் பெரியவர்களில் அந்தக் காலத்தில் சிறந்துவிளங்கிய ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தபோது துவைதக் கொள்கைகளை நிறுவிய இராமானுஜரைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்துபார்த்தார். அப்போதே அவர் மனதில் ஒரு தீர்மானம் விழுந்து விடுகிறது. அந்தத் தீர்மானத்தை பிறிதொரு அத்தியாயத்தில் கூறுகிறேன். 

துவைதம் என்ற தோணியைப் பற்றிக் கொண்டு வாழ்க்கை என்ற கடலில் இராமானுஜர் சந்த்தித்த சவால்களை சொல்லுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.இதுபோன்ற அறிவில் சிறந்தவர்களின் பார்வை இராமானுஜர் மேல் விழ விழ, யாதவப்பிரகாசர் மேலும் பொறாமைத் தீயில் கருகத் தொடங்கினார். இவருடைய பொறாமை உச்சத்தை அடையும்வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

 (தொடர்கிறது) 

 

 .

 

 

சனி, 21 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2

-இரா.சத்தியப்பிரியன்

 

குருவை மிஞ்சிய சிஷ்யன்


யாதவப்பிரகாசர் தனது சீடர்களுக்கு காலைநேரப் பாடங்களை போதித்த பின்  எண்ணெய்க் குளியல் எடுக்க எண்ணினார். அந்தக்கால குருகுலவாசத்தில் சீடர்களே குருவுக்குத் தேவையான சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  குரு ஆணையிடுவார். சீடர்கள் மறுக்காமல் சிரம் மேற்கொண்டு செய்வர். எண்ணெய்க் குளியலுக்கு ஆச்சாரியாரின் பாதாதி கேசம் ராமானுஜர் எண்ணெய் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு மாணவரும் உடனிருந்தார்.

மாணவன்: தேவரீர்.  இன்று காலையில் தாங்கள் நடத்திய பாடத்தில் பொருள் விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாக உள்ளது.

யாதவ: எந்தப் பாடம் ?

மாணவன்: சந்தோக்ய உபநிடத்தில் ஆறாவது பகுதியில் வரும் ஏழாவது மந்திரம்.

யாதவ: எங்கே அந்த மந்திரத்தை ஒருமுறை கூறு.

மாணவன்:  தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக -மேவமக்ஷிணி

யாதவ: இதில் உனக்கு என்ன சந்தேகம்?

மாணவன்: இதில் வரும் கப்யாசம் என்ற பதத்தின் பொருள் என்ன?

யாதவ: கப்யாசம் என்ற சொல்லை கபி + ஆசாம் என்று பிரி. கபி என்றால் குரங்கு என்று பொருள். ஆசாம் என்றால் பிருட்டபாகம். அதாவது குரங்கின் ஆசனவாயானது தாமரையைப் போல மலர்ந்திருக்கும் . அப்படிப்பட்ட சிவந்த கண்களையுடைய மகாவிஷ்ணு என்று பொருள்.

இந்த விளக்கத்தை ராமானுஜன் கேட்கிறான். எம்பெருமானுடைய கண்களை குரங்கின் பிருட்டபாகத்துடன் ஆச்சாரியார் உவமை கூறியவுடன் தாங்க முடியாத துக்கம் ராமானுஜனுக்கு ஏற்பட்டது. அந்தத் துக்கம் கண்களில் கண்ணீராக உடைத்துக் கொண்டு வந்தது. அப்படிப் பீறிட்டுக் கொண்டு வந்த கண்ணீர் சூடாக ஆச்சாரியாரின் திருமேனியில் பட்டது. ஆச்சாரியார் நிமிர்ந்து பார்க்கிறார். எம்பெருமானின் மீது இருந்த மாளாத காதல் காரணமாக ராமானுஜன் அழுதுகொண்டிருந்தான்.

யாதவ: ராமானுசா நான் அப்படி என்ன சொல்லி விட்டேன் என்று நீ அழுகிறாய் ?

ராமானு: மன்னிக்க வேண்டும் குருவே. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் நித்ய கல்யாண குணங்களைக் கொண்டவன். எனவே அவனுடைய கண்களைக் குரங்கின் பிருட்டபாகத்துடன் தாங்கள் ஒப்பிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

யாதவ: இது நான் கூறிய விளக்கமில்லை. வழி வழியாக பல ஆச்சாரியர்கள் கூறி வரும் விளக்கம். ஆதிசங்கரர் கூட இதற்கு இப்படித் தான் விளக்கமளிக்கிறார்.

ராமானு: மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறட்டும். என் பிரபுவை நான் குறைத்து ஒப்பிட மாட்டேன்.

யாதவ: அப்படி என்றால் இந்த செய்யுளுக்கு நீயே விளக்கம் கொடு.

ராமானு: கப்யாசம் என்ற சொல்லை இப்படியும் பிரிக்கலாம். கம்+பீபதி+ஆசம். இதில் கப் என்றால் தண்ணீர் என்று பொருள். பிபதீ என்றால் குடித்தல் என்று பொருள். எனவே இதனை கம் ஜாலம் பிபதீ கபி: ஸுர்ய: என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் சூரியனால் மலர்ந்தது என்ற பொருள் வரும். எனவே சூரியனால் மலரும் தாமரையைப் போன்ற கண்களை உடையவன் எம்பெருமான் என்ற அருமையான விளக்கம் கிடைக்கும்.

யாதவ: உன் இலக்கண அறிவு பளிச்சிடுகிறது. என்றாலும் நீ அத்வைதத்தை மறுக்கிறாயோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது ராமானுஜா.

இவ்வாறு குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கிய ஸ்ரீ ராமானுஜர்,  ஸ்ரீபெரும்புதூரில் கி.பி 1017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி அதாவது கலி ஆண்டு 4118-இல் சக ஆண்டு 938-இல் பிங்கள ஆண்டு சித்திரை மாதம் 12-ஆம் நாள், சுக்லபட்ச பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய தந்தை ஆசூரி கேசவாச்சாரியார் ஆவார். தாயார் காந்திமதி அம்மையாவார்.

ஸ்ரீ பாகவதத்தின் பதினோறாவது ஸ்கந்தத்தில் “பெரிய பெரிய வைணவ பக்தர்கள் திராவிட நாட்டில் பாலாறு, காவிரி, தாமிரபரணி, பெரியாறு, வைகை என்ற ஆறுகள் பாயும் இடங்களில் தோன்றுவார்கள்’’ என்று கூறியுள்ளது. அது ராமனுஜரின் அவதாரத்தால் உண்மையாயிற்று.

கேசவாச்சாரியார் தனது குழந்தைக்கு  ‘ராமானுஜர்’ என்று நாமகரணம் சூட்டினார். அதே நேரம் காந்திமதியின் சகோதரி தீப்திமதியும் ஒரு ஆண் மகவை ஈன்றார். அதற்கு  ‘கோவிந்தன்’ என்று பெயரிட்டனர்.

இருவரும் உபநயனம் முதலிய சம்ஸ்காரங்கள் மூலம் வேதம் பயிலச் சென்றனர். ஆரம்பத்தில் அவரது தந்தையான கேசவாச்சாரியாரே வேத பாடம் செய்வித்தார். படிக்கும் பாடங்களை எளிதில் கிரகித்துக் கொண்டு மீண்டும் திருப்பி ஒப்புவிக்கும் மகனின் கூர்மையான அறிவினைக் கண்டு தந்தை அகமகிழ்ந்தார்.

ராமானுஜருக்கு அவரது பதினாறாவது பிராயத்தில் தஞ்சமாம்பாள்என்ற வடிவில் மிக அழகான பெண்ணை மணம் முடித்து வைத்தார்.

ராமானுஜருக்கு மணம் முடிந்த மறுவருடமே அவருடைய தந்தை கேசவாச்சாரியார் பரமபதம் அடைந்தார். எனவே கல்வியில் தன் மேற்படிப்படித் தொடர ராமானுஜர் காஞ்சிபுரம் செல்ல முடிவெடுத்தார்.

காஞ்சிபுத்தின் அருகில் திருப்புட்குழி என்ற இடத்தில் யாதவப்பிரகாசர் என்ற வேதவித்து மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார் என்பதை கேள்விப்பட்ட ராமானுஜர் அவரிடம் பாடம் கற்கச் சென்றார்.

ஆரம்பத்தில் யாதவப்பிரகாசருக்கு ராமானுஜரால் பெரிய வில்லங்கம் வந்து சேரும் என்று தெரியாது. ராமானுஜரின் வேத அத்தியயனத்தைக் கண்டு வியந்து அவரைத் தனது மாணாக்கனாகச் சேர்த்துக் கொள்கிறார்.

ராமானுஜருக்கும் அவரது குருவிற்கும் மீண்டும் ஒருமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த முறை அந்த கருத்து வேறுபாடு விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.

வேத பாடம் நடக்கிறது. யாதவப்பிரகாசர் தனது மாணாக்கர்களுக்கு  பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

யாதவ: கவனமாகக் கேளுங்கள். ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம.

ராமானு: சுவாமி இது எந்த உபநிடதத்தில் வருகிறது?

யாதவ: தைத்ரீக உபநிடதத்தில் வரும் மந்திரம்.

ராமானு: இதன் பொருள் என்ன சுவாமி?

யாதவ: (ஒரு பிரளயமே வரப்போகிறது என்பது தெரியாமல் ) ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் இவையே பிரம்மமாகும்.

ராமானு: இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை சுவாமி.

யாதவ: உன்னிடம் மறுத்துப் பேசும் குணம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது ராமானுஜா. உன்னை மாற்றிக் கொள்.

ராமானு: எடுத்ததற்கெல்லாம் மறுப்பது என் குணமில்லை சுவாமி. உங்களை மறுத்துப் பேசியதற்கு க்ஷமிக்க வேண்டும். இருப்பினும் தாங்கள் உபநிடதத்திற்கு தவறான பொருள் கூறிவிடக் கூடாது அல்லவா?

யாதவ: சரி நீயே மேதாவி என்று வைத்துக் கொள்வோம். உன்னுடைய விளக்கம், இந்த மந்திரத்திற்கு என்னவென்று கூறு.

ராமானு: ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் போன்றவை பிரம்மத்தின் குணங்களே அன்றி அவையே பிரம்மமாக வாய்ப்பில்லை. இதுதான் என் விளக்கம். இந்த உடலானது என்னுடையதானாலும் கூட இந்த உடல் நானாக மாட்டேனோ அதைப் போல இந்த குணங்கள் பரமனுடையவை என்றாலும் இந்த குணங்களே பரமனாக மாட்டா.

யாதவ: நீ அதிமேதாவியாகி விட்டாய் ராமானுஜா. இனிமேல் உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் யோக்கியதை எனக்கு இல்லை. இனிமேல் நாளைமுதல் நீ என் வகுப்புக்கு வர வேண்டாம்.

இருப்பினும் ராமானுஜரிடம் துவைதக் கோட்பாடு வேரூன்றிவிட்டது.

இறைவன்தான் எல்லாம் என்பது அத்வைதம். அதாவது இறைவன் வேறு ஜீவாத்மா வேறு என்ற துவைதக் கோட்பாட்டின் எதிர்ப்பதம் இந்த அத்வைதம். துவைதம் என்றால் இரண்டு என்ற சொல்லிலிருந்து வந்தது.

பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மற்ற எல்லா ஜீவராசிகளும் தனித் தனி என்பது துவைத சித்தாந்தம். இந்த சித்தாந்தத்திலிருந்து ராமானுஜர் தன் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை.

சங்கரர் போன்ற முந்தைய குருமார்களின் வியாக்கியானங்களை மதியாமல் ராமானுஜர் புதிதாகக் கிளம்புகிறாரே என்ற ஆத்திரம் பொறாமையாக யாதவப்பிரகாசரிடம் உருவெடுக்கிறது. போதாதற்கு ராமானுஜர் தன்னுடைய இந்தப் புதிய விளக்கத்தின் மூலம் வேதவித்தகர்கள் நடுவில் பெரும் புகழும் அடைகிறார். இதுவேறு யாதவப்பிரகாசரின் கண்களை மறைக்கிறது. மிக மோசமான முடிவெடுக்கிறார்.


(தொடர்கிறது)

வெள்ளி, 20 மே, 2016

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

-இரா.சத்தியப்பிரியன்

 
ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீ ராமானுஜர்

(தோற்றம்: பொ.யு.பி. 1017, சித்திரை- திருவாதிரை)
(முக்தி: பொ.யு.பி. 1137, மாசி மாதம் , சுக்கில தசமி திதி)

*

***

வாழ்விக்க வந்த ஆச்சாரியன்

.

பரம்பொருளின் காலத்தை எவ்வாறு நம் சிற்றறிவினால் கணக்கிட முடியாதோ அவ்வாறே இந்து சமயத்தின் காலத்தையும் நம்மால் கணிக்க முடியாது.

வேதம் அநாதியானது. கல்பங்களுக்கும், மன்வந்திரங்களுக்கும், யுகங்களுக்கும் அப்பாற்பட்டது. இந்தச் சாதாரண பட்டறிவினால் வேதங்களையும், வேதாங்கங்களையும், உபநிடதங்களையும் அறிந்து கொள்வது என்பது கிணற்றில் வசிக்கும் தவளை அந்த கிணற்றை சாகரம் என்று நினைத்துக் கொள்வது போல.

அந்த சாகரத்திலிருந்து கிடைத்த இரண்டு நல்முத்துக்கள் . ஒன்று சைவம்;  மற்றொன்று வைணவம்.

ஆதி சிவனே அனைவரது ஆத்மாவிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்பது சைவம். வேதங்கள் மூலம் அறியப்பட்ட சிவன் பின்னர் பத்தி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த தத்துவத்தின் மூலம் விளக்கப்படுகிறான்.

நாராயணனே சர்வ வியாபி; ஆதிமூலம். வேதத்தை அறிவது ஸ்ரீமன் நாராயணனை அறியும் முயற்சியாகும் என்பது ஸ்ரீ வைஷ்ணவம்.
எனவே வேதம் என்று தோன்றியதோ அன்றே சைவமும், வைணவமும் தோன்றி விட்டன. ஒரு இந்துவின் இரண்டு கண்கள் சைவமும் வைணவமும் என்றால் அது மிகையில்லை.

இஸ்லாமியருக்குப் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் தங்களுடன் தங்கள் கிறிஸ்தவ மதத்தையும் கொண்டுவந்தனர்.  ஊர் ஊராக மதம் பரப்புவதை பன்னெடுங்காலமாகச் செய்துவந்த மேலைநாட்டினருக்கு நமது பாரத மண்ணில் இரண்டு கண்களாக தழைத்தோங்கி வரும் சைவமும்,  வைணவமும் அடிமுடி காண முடியாத நிலையில் இருப்பது, அவர்கள் சிந்தனையை கொதிக்கச் செய்தது.

உலகில் உள்ள மற்ற மதங்களுக்கு காலநிர்ணயம் உள்ளதுபோல ஹிந்து மதத்திற்கு இல்லாமல் இருப்பது அவர்களை யோசிக்க வைத்தது. ஹொரேஸ் ஹெமேன் என்ற வரலாற்றியலாளர் 1840-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் உரையாற்றும்போது இந்தியச் சமயங்களில் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தி அவற்றை உண்மை என்று நிறுவி இந்திய அறிவாளிகளை கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொள்ளும்பொருட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்கள்.

1874-ஆம் ஆண்டு வெப்பர் என்பவர்  ‘கிருஷ்ண ஜன்மாஷ்டமி பண்டிகையின் தோற்றத்தைப் பற்றிய ஓர் ஆராய்ச்சி’ என்ற கட்டுரையை வெளியிடுகிறார். ஹாப்கின்ஸ், கென்னெடி, மாக்னிகல் போன்றவர்கள் பெருவாரியாக ஸ்ரீ வைணவத்தின் தோற்றத்தை ஆராய்வதில் ஆர்வம் காட்டினார்கள். ‘இந்தியச் சமயங்கள் ‘ என்ற நூலில் ஹாப்கின்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்து  சமயத்தின் கொள்கைகளை மறுக்க வேண்டுமானால் நுட்பமான வாதத் திறமையும் ஆழ்ந்த அறிவும் வேண்டும்.”

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரோமாபுரியில் கீழைநாட்டு அறிஞர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கட்டுரை வாசித்த பிரஜேந்திர நாத் என்ற இந்தியப் பெருமகனார் “ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு விலை மதிப்பற்ற சில கூறுகளை வழங்கும் தகுதி வைணவத்திற்கு உண்டு என்று வாதிட்டார். அவருடைய வாதங்கள் பெரும்பாலும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டன. பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘கிருஷ்ண சரித்திரம்’ என்ற ஆராய்ச்சிநூல் மிகவும் முக்கியமான நூலாகும்.

பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட போதிலும் வைணவத்தின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இறுதியான விஷயம். நமக்குக் கிடைக்கபெறும் ஆவணங்களும், இலக்கியச் சான்றுகளும் புராணவழிச் செய்திகளும் வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். எல்லா ஆராய்ச்சி முடிவுகளு இறுதியில் வந்து சேரும் இடம் ஸ்ரீ வைணவத்தின் தோற்றம் அநாதியானது என்பதாகும்.

அத்துணை சிறப்புவாய்ந்த ஒரு சமயம் தனது அற்புதமான கோட்பாடுகளாலும் பல ஆன்மிகத் தலைவர்களின் வழிநடத்துதலினாலும் பல யுகங்களையும் கடந்து தழைத்தோங்கி வருகின்றது.

வேத வியாசர், கிருஷ்ண சைதன்யர்,  ஆதி சங்கரர், ஸ்ரீ ராகவேந்திரர், பன்னிரு ஆழ்வார்கள் என பல மகான்களின் போற்றுதலில் வைணவம் வளர்ந்தாலும்,  ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ வைணவத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
‘வைதீகம்’ என்ற பெயரில் மேட்டுக்குடி மக்களிடம் சிக்கிக் கிடந்த வைணவத்தினை பாமரனும் பின்பற்றும் வண்ணம் அவர் மாற்றிய தொண்டு மிகப் பெரியது.

கீழ்க்கண்ட நன்னெறிகளை ஒரு மடத்தின் தலைவராக இருந்துகொண்டு தொண்டாற்றிய ஸ்ரீ ராமானுஜர் 120 ஆண்டுகள் இந்த மண்ணுலகில் வாழ்ந்து அருள்பாலித்தவர்.
  • லக்குமினாதனான ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள்.
  • எம்பெருமானை மற்ற தேவதைகளுக்கு சமாக பாவிக்கக் கூடாது. அது பகவத் அபசாரமாகும்.
  • கல்வியினால் அகந்தை, செல்வத்தினால் அகந்தை, குடிப்பிறப்பினால் அகந்தையின்றி இருக்க வேண்டும்.
  • நல்ல நெறிமுறையில் எப்பொழுதும் நம்மால் அடுத்தவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்க வேண்டுமோ அவ்வளவு உதவியாக இருக்க வேண்டும்.
  • உலக விஷயங்களில் ஆசையின்றி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
குரு எனப்படும் ஆச்சாரியானின் வழிநடத்தலோடு பரமனின் இணையடி நிழலை அடையலாம் என்றுதான் எல்லா சமயங்களும் கூறுகின்றன. குரு பரம்பரை என்று சைவ மதமும்,  ஆச்சாரியப் பரம்பரை என்று ஸ்ரீ வைணவமும் கூறுகின்றன.

இங்கே ஆச்சாரியனின் பங்கு தனிச்சிறப்புடையது. ஆச்சாரியன் தான் முதலில் நன்னெறியில் நடக்க வேண்டும். நன்னெறி என்பது நமது சனாதன தர்மம்; தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது.  தனது சமயக் கொள்கைகளை பாரத கலாசாரம் முன்வைப்பதைப் போன்று வேறு எந்த சமயமும் முன்வைக்கவில்லை என்றே கூறலாம். ஆச்சாரியனின் ஒழுக்கம் மிக உயர்ந்த ஒழுக்கமாக போற்றப்படுகிறது.

ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு மனிதன் தனது மகனை அழைத்து வந்தார். மகனுக்கு அளவுக்கு அதிகமாக இனிப்பு உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் அதனை மாற்ற அவனுக்கு புத்திமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

பரமஹம்சர் அந்தத் தந்தையிடம் பத்து நாட்கள் கழித்து அவர் மகனை அழைத்து வரும்படி கூறினார்.பிறகு அந்தச் சிறுவனிடம் இனிப்பு உண்பதால் உண்டாகக் கூடிய தீமைகளை விளக்கிவிட்டு “இனிமேல் அதிகமாக இனிப்பு உண்ணாதே’’ என்று கூறினார்.

சிறுவனின் தந்தை “இந்த அறிவுரையை பத்து நாட்களுக்கு முன்பே கூறியிருக்கலாமே ?’’  என்று கேட்க, அதற்கு பரமஹம்சர்    “ பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு இனிப்பு உண்ணும் பழக்கம் இருந்தது. என்னிடம் அந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு இந்தச் சிறுவனுக்கு புத்திமதிகூற எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என் இனிப்பு உண்ணும் பழக்கத்தை விட்டொழிக்க எனக்கு பத்து நாள் காலாவகாசம் வேண்டியிருந்தது. அதனால் தான்’’ என்றாராம்.

-இது ஒரு உதாரணம்தான். தனது  ‘விசிஷ்டாத்வைத’க் கொள்கையை நிலைநாட்ட ராமானுஜருக்கு தனது குருவையே எதிர்வாதம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதுமட்டுமல்ல, இரண்டு முக்கிய காலகட்டங்களில் தனது கொள்கைக்காக அந்நியர்களின் சூழ்ச்சியால் உயிருக்கு ஆபத்து நேர்ந்து அதன்பின் எம்பெருமானின் திருவருளால் ராமானுஜர் உயிர் தப்பி 120 ஆண்டுகள் இந்த பூவுலகில் எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்தவண்ணம் ஸ்ரீ வைஷ்ணவத்தை அனைவரும் பின்பற்றும் வண்ணம் பல வழிமுறைகளை ஏற்படுத்தினார்.

(தொடர்கிறது)

குறிப்பு:
தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர்களுள் ஒருவரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன்,  ஆன்மிக எழுத்தாளர். தனது எழுத்துப் பணிக்காக, வங்கி வேலையிலிருந்து விலகி, முழுநேர எழுத்தாளராக மாறியவர்.


.

வியாழன், 19 மே, 2016

சமத்துவம் கண்ட அன்பின் திருவுரு

 -என்.ராஜேஸ்வரிதீர்க்காயுசு என்ற முழுமையான வாழ்வுச் சுற்றான 120 ஆண்டுகள் வாழ்ந்தவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்குள் இன்றும் காட்சி அளிப்பவர். விசிஷ்டாத்துவைதத்தைப் பிரபலப்படுத்தியவர். பிரம்ம சூத்திரத்துக்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரையை எழுதியவர். சீர்திருத்தவாதியான இராமானுஜரின் காலம் 1017- 1137. இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

புதன், 18 மே, 2016

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

-நம்பி நாராயணன்திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ?

ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கும் அம்மையார் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த 81 கருத்துக்கள்தான் இந்த ரகசியம்.

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் திருக்கோளூர். 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. தாமிரபரணிப் படுகையில் உள்ள நவ திருப்பதிகளிலும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரின் ஜென்மஸ்தலம். திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள்.

செவ்வாய், 17 மே, 2016

ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...

-ஆசிரியர் குழு

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள், தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு சார்பாக, ஸ்ரீபெரும்புதூரில் 2016,  மே 10, செவ்வாய்க்கிழமை தொடங்கின. அந்த விழாவின் சில புகைப்படங்கள் இங்கு பதிவுகளாக...


ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி தொடக்க விழாவில் உரையாற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஷேத்ரோபாஸனா அறக்கட்டளை  நிர்வாக அறங்காவலர் பிரேமா பாண்டுரங்.மேடையில் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், ஆர்.எஸ்.எஸ். தென்பாரத அமைப்பாளர் கோ.ஸ்தாணுமாலயன் உள்ளிட்டோர்.

விழா மேடையில் இராமானுஜம்1000.காம் இணையதளம் துவங்கப்பட்டது. கணினியுடன் நிற்பவர், தே.சி.க. சென்னை நிர்வாகிகளுள் ஒருவரான திரு. பத்ரிநாராயணன்.

மேடையில் உரையாற்றுகிறார் வைணவப் பெரியார் ஒருவர்.

விழாவில், ஆமருவி தேவநாதன் (இடமிருந்து இரண்டாவது) எழுதிய ‘நான் ராமானுஜன்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி நூலை வெளியிட, நந்தனார் பேரவைத் தலைவர் தடா பெரியசாமி பெற்றுக் கொண்டார்.

விழாவில் உரையாற்றுகிறார் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி.


திங்கள், 16 மே, 2016

ஆயிரம் ஆண்டுகளாக வாழும் ராமானுஜர்!

-ராஜேஷ்ராமானுஜரின் வரலாறு என்பது ஒரு பெரிய மனிதரின் வரலாறு மட்டுமன்று; தமிழகத்தின் ஒரு காலப் பகுதியின் வரலாறும் ஆகும். பல்லவர்களின் செல்வாக்கு குறைந்து சோழர்களின் ஆட்சி மலர்ந்து இருந்தது. அந்த நேரத்தில் சமண பௌத்த நெறிகள் மங்கிப் போய் சைவமும், வைணவமும் வளர்ந்த காலத்தில் தோன்றியவர்தான் ராமானுஜர்.அந்த வரலாற்றோடு இணைந்தே ராமானுஜர் வரலாறும் அமைந்திருக்கின்றது.

ஞாயிறு, 15 மே, 2016

நெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே!

 -ரஞ்சனி பாசு


ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்து, பக்தியில் திளைத்த பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டது  ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம’. வேத வேதாந்தங்களின் சாரத்தைப் பக்தியில் தோய்த்து, ஈரத்தமிழால் பாடப்பட்டவை ஆழ்வார்களின் பாசுரங்கள் எனலாம்.

வேதவியாசர் வேதங்களை நான்காகத் தொகுத்ததுபோல், நாதமுனிகள் என்னும் வைணவ ஆச்சாரியார் இப்பாசுரங்களைச் சற்றொப்ப ஆயிரம் பாடல்கள் அடங்கி இருக்குமாறு தொகுத்து வரையறுத்தார்.

சனி, 14 மே, 2016

ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா ஸ்ரீபெரும்புதூரில் தொடக்கம்

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி தொடக்க விழாவை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கும் ஸ்ரீபெரும்புதூர் ஷேத்ரோபாஸனா அறக்கட்டளை  நிர்வாக அறங்காவலர் பிரேமா பாண்டுரங்.விழாவில், ஆமருவி தேவநாதன் எழுதிய ‘நான் ராமானுஜன்’ என்ற புத்தகத்தை முன்னாள் துணைவேந்தர் கலாநிதி வெளியிட, நந்தனார் பேரவைத் தலைவர் தடா பெரியசாமி பெற்றுக் கொண்டார்.ஸ்ரீபெரும்புதூர், மே 10: ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள், தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு சார்பாக, ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

 வைணவப் பெரியார் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு 2016 மே 10 முதல் 2017 மே 1 வரை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாதம்- திருவாதிரை செவ்வாய்க்கிழமை வந்ததையொட்டி, இவ்விழாவின் தொடக்கம், அவர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.

வெள்ளி, 13 மே, 2016

இராமானுஜர் என்ற புரட்சித் துறவி.-.பூமாகுமாரிவியத்தகு மாற்றத்தைக் கொண்டு வருபவரே புரட்சியாளர். ஸ்ரீ இராமானுஜர் (பொ.யு.பி. 1017-1137 ) என்ற ஹிந்து இறையியலாளரும் தத்துவவாதியும் ஆனவர், ஸ்ரீ வைணவ தத்துவத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் துறவி ஆவார்.

துறவியில் என்ன புரட்சித் துறவி

சிறு வயதில் குரு யாதவ பிரகாசர் அவர்களிடம் இராமானுஜர் பாடம் கற்றுக்கொண்டார். எம்பெருமான் நாராயணனின் கமல விழிகளைப் பற்றிக் கூறுகையில் 'கப்பியாசம் புண்டரி எவம் அக்ஷ்ணா' என்று வருகிறது. ஆசிரியர் அர்த்தம் கூறுகையில் குரங்கின் ஆசனவாயைப் போன்ற சிவந்த கண்கள் என்று சொல்ல- அதை ஏற்க மறுத்த இராமானுஜர், பதினாறு வயதில் விளக்கம் சொன்னார். சூரியனால் அன்றலர்ந்த தாமரை போன்ற கண்கள் என்று மங்கலான அர்த்தத்தில் தான் சொல்லப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர், குருவை மிஞ்சிய சிஷ்யர் இருக்கப் பெறுவது ஒரு புரட்சி அல்லவா?

திருக்கச்சி நம்பிகள் என்ற பெரிய வைணவ குருவிடம் இராமானுஜர் பாடம் சொல்லிக் கொள்ளும்போது,  அவர் மணம் முடித்து மனைவியுடன் வாழ்ந்து வந்தார். பெருமாள் மீது அளவு கடந்த பிரியமும், நல்ல ஞானமும் வாய்க்கப்பெற்ற திருக்கச்சி நம்பி வைசியர். அவர் தன் வீட்டில் விருந்து உண்டு மகிழ வேண்டும் என ஆசைப்பட்டார் இராமானுஜர்.  நம்பிக்கு அவர் மனைவி பற்றித் தெரியும். இராமானுஜர் இல்லாத நேரமாகப் பார்த்து வந்தார். நடு வீட்டிற்கு வெளியே நம்பியை அமர்த்தி உணவு பரிமாறின இராமனுஜரின் மனைவி அப்படியே அவரை திருப்பி அனுப்பிவிட்டுக் குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாளாம். இம்மாதிரியான ஆசாரங்களை பொதுவாக பிராமணர்கள் எல்லோரும் நம்பிய கால கட்டத்தில்,  இராமானுஜர் மன வருத்தம் அடைந்தார் வைசியர் ஆனாலும் அவரிடம் ஞானம் இருந்ததை அங்கீகரித்தவர் இராமானுஜர், அப்படிப்பட்ட தனது குருவை தன் மனைவி அவமதித்து விட்டதாகவே கருதினார் இராமானுஜர்.

திருக்கச்சி நம்பிகளின் வழிகாட்டுதலின் பேரில ஸ்ரீரங்கம் வந்து பெரிய நம்பியின் முலம்  பஞ்ச சமஸ்காரம்’ பெற விளைந்தார். பெரிய நம்பியின் அவர் மனைவியும் காஞ்சிபுரம் வந்து இராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்துப்போக வந்தனர். இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்தனர்.  பெரிய ஏரியில் பெரிய நம்பி ஸ்ரீ ராமானுஜருக்கு சமஸ்ரயணம் செய்து வைத்தார். பெரிய நம்பியின் திவ்ய பிரபந்தமும், வியாச சூத்திரங்களையும் கற்றுக்கொண்டிருந்த போது, அவருக்கு தனது மனைவியின் பழங்கால கட்டுப்பாடான நடவடிக்கைகள் சரியாகப் படவில்லை. ஒரு முறை பசியுடன் வேலையாள் பணி செய்ய, அவனுக்கு உணவு பரிமாறச் சொன்னார். மனைவியோ, வீட்டில் உள்ளவர்கள் உணவு உண்ட பின்னரே பிராமணர் அல்லாதோருக்கு உணவு பரிமாற முடியும் என பிடிவாதம் செய்தார். பெரிய நம்பியும் அவர் மனைவியும் கிணற்று நீரினால் பிரச்னை வந்ததும் இராமானுஜரிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்றுவிட, இராமானுஜரும் சந்தர்ப்பத்தில் துறவரம் பூண்டு மனைவியை விலகினார். இதுவும் ஒரு பெரிய புரட்சிகரமான விஷயமே.  அந்தக் காலத்தில் ஜாதி பாராமல், ஞானம் இருக்கும் இடத்தை மரியாதை செய்து, அதற்கு மறுத்த மனைவியையே விலக்கி வைப்பதும் பெரும் புரட்சியே.

ஆளவந்தார் மற்றொரு குரு. ஆனால் இராமானுஜருக்கு ஆளவந்தாரிடம் நேரடியாக வைணவத்தைக்கற்கும் வாய்ப்பு கிட்டவில்லை. தூரத்தில் இருந்தே இவர்தான் என் பிரதான சீடன், இவரே வைணவத்தை வளர்த்தெடுப்பான் என அக்குரு மனதில் எண்ணம் வரக் காரணமாக இருந்தது  ஸ்ரீ இராமானுஜரே. சிஷ்யர் மனதில் வைத்து பூஜித்த குரு ஆளவந்தாரை நெருங்கிப் பார்க்கையில் குருவின் உயிர் பிரிந்திருந்தது. மூன்று விரல்கள் மூடி இருப்பதைக் கண்ட இராமானுஜர் விசாரிக்கிறார். அவர் மனதில் நிறைவேறாத ஆசை இருக்கிறதா என விசாரிக்கிறார்.

வியாசன், பராசரன் என இரு குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், நம்மாழ்வாரின் திருவாய் மொழியைப் பிரபலம் செய்தல்,  வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதுதல் என மூன்று நிறைவேறாத ஆசைகள் இருப்பதாக அவர்தம் சீடர்கள் கூறினர்.  மூன்றையும் பெருமாளின் சம்மதத்துடன் நிறைவேற்றுவேன் என சபதம் பூண்டார்; அவற்றை நிறைவேற்றவும் செய்தார் - புரட்சி ஞானி அல்லவா அவர்!

பார்த்து, பேசி, பழகி,  தொண்டு செய்து, ஆசானாக ஏற்று அவரிடத்தில் வித்தை கற்ற எத்தனையோ சீடர்கள் இருக்க, இராமானுஜரைத் தனது வாரிசாக பிரதம சீடராக, தனக்குப்பின் வைணவத்தை சீர் செய்ய வந்த மகனாக ஆளவந்தார் மனதில் ஸ்ரீ இராமானுஜர் தோன்றியதும், அவர் ஒரு புரட்சிகரமான ஞானி என்பதால் தான்.

அதேபோல குருவாக வரித்துக் கொண்டவரின் பூதவுடலில் 3 விரல்கள் மூடியிருப்பது கண்டு, விசாரித்து நான் செய்கிறேன் என சபதம் செய்ததும் ஆளவந்தார் கைவிரல்கள் தானாக நேரானதும் எதனாலே ?  புரட்சி ஞானி பொறுப்பேற்றதாலே!

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்கள் - ஆளவந்தாரின் பிரதான சீடர். அவரிடம் திருமந்திரார்த்தத்தை உபதேசம் பெற வேண்டி இராமானுஜர் நடையாய் நடக்கிறார். சுமார் 18 முறை மறுக்கப்படுகிறது. 18வது முறை  சரி நீ தனியாக வா, சொல்லித் தருகிறேன்” என்கிறார் திருக்கோஷ்டியூர் நம்பி. இவரோ முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகிய இரு பிரதான சீடர்களை அழைத்துச்சென்றார். கேட்ட போது, சந்நியாசி திரிதண்டம், பவித்ரம் இல்லாமல் எப்படி வர முடியும்? இவர்கள் இருவரும் எனது திரிதண்டமும் பவித்ரமும் போலத்தான். அவர்கள் இருக்கும் போதே உபதேசம் செய்யுங்கள் என்று சொன்னார். இதுவும் அன்றைய காலகட்டத்தில மட்டுமல்ல, இன்றும் கூட நம்மில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட பரந்த மனம் வரும்?

இரகசிய உபதேசம் வழங்கப்பட்டதுயாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டார் குரு. ஆனால், நேரே கோவிலுக்குச் சென்ற இராமானுஜர்,  பெரிய திருமந்திரத்தை, அதன் அர்த்தத்தை அங்கிருந்த சகலருடனும் பகிர்ந்து கொண்டார். ஞானம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் அடைபடலாகாது என அவர் ஆத்மார்த்தமாக நம்பினார். அதற்காக சத்தியத்தை மீறிவிட்டாரே? ’பரவாயில்லை, நான் அதனால் நரகம் செல்கிறேன், குரு வார்த்தையை மீறியவனானேன். ஆனால் உங்கள் உபதேசம் இவர்களுக்குக் கொண்டு சேர்ந்த திருப்தி எனக்கு உண்டு, அது கேட்ட இவர்களும் நிச்சயம் மோட்சம் போவார்களே’ என்று தனது குரு திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கேட்டராம். அவர் வாயடைத்து நின்று விட்டார். இது மிகப் பெரும் புரட்சியல்லவா?

பகவத்கீதையின் சிறந்த ஸ்லோகம் சரமஸ்லோகம். அதை கேட்கச் செய்கிறார் இராமானுஜர்.  திருக்கோஷ்டியூர் நம்பியிடமே கற்றுகொள்கிறார் முடிந்ததும், இதை கூரத்தாழ்வானுக்கும் சொல்கிறேனே எனக் கேட்க, ’ஒரு வருஷகாலம் குருவிற்கு சேவை செய்தால் நீ சொல்லிக் கொடு’ என்கிறார். நடக்குமா? ஒரு வருஷத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

எனவே நடைமுறை சாத்தியமாகாது. ஒரு மாதம் உபவாசம்  இருந்து சோதனையில் வெற்றி பெற்றால் உனக்குச் சொல்லித் தருகிறேன் என்று இறங்கி வருகிறார் இராமானுஜர் குருபக்தி, தன்னை வருத்திக்கொண்டு இதற்காக காத்திருத்தல் என எதையும் வேண்டாமெனவும் கூறாமல், மாசோ உபவாசம் செய்வதும் சம்பத்ர சேவைக்கு இணையானதே எனக் கொண்டு அதைச் செய்து முடித்த கூரத்தாழ்வானுக்கு இரகசியம் போதித்தார் இராமானுஜர். இலவசமாக, எதுவும் இன்றி வெறுமனேவும் செய்யவில்லை, அதற்காக குரு சொன்னதை அப்படியே பின்பற்றுவது நடைமுறை  சாத்தியமில்லை என்பதையும் புரிந்துகொண்டு வழிவகை செய்ததும் புரட்சிதானே!

ஆளவந்தான் இறைவனடி சேர்ந்த பின், அவரது சீடர்களுக்கு வழி காட்ட யாருமில்லை.  எப்படியாவது ஸ்ரீ இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு கூட்டி வந்து விட வேண்டும் என தீர்மானித்தனர். இராமானுஜரின் மானசீக குருவல்லவா ஆளவந்தார்?

ஸ்ரீ ஆளவந்தாரின் மகன் திருவரங்க பெருமாள் அரையர்  காஞ்சி சென்று அபிநயத்துடன், மிக அழகான குரலில் பிரபந்தத்தைப் பாடி கவன ஈர்ப்பு செய்வது என முடிவாயிற்று. எல்லோரும் அதற்கு மயங்கினர். புதிலாக ஸ்ரீ இராமானுஜர் அவருடன் ஸ்ரீரங்கம் செல்வது என ஒப்புக்கொண்டனர். தனக்கு மிக மிகப் பிடித்தமான காஞ்சி ஸ்ரீ வரதராஜ சுவாமி திருக்கோவிலை விட்டு, திருக்கச்சி நம்பி அவர்கள் விட்டு, காஞ்சி மக்களின் ஒப்புதலுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார் இராமானுஜர். முதலியாண்டான், கூரத்தாழ்வர், பெருமாள் அரையர் ஆகியோருடன் வந்தவரை, பெரிய நம்பி வரவேற்று காவிரியில் நீராடி கோவிலுக்குச் சென்றார்.

வந்தவர் முதல் பார்வையிலேயே ஸ்ரீ ரங்கநாதரின் கொள்ளை அழகினால் ஆட்கொள்ளப்பட்டார். முதல் அடியாக 'கோயில் ஒழுகு'என்ற ஒன்றை இயற்றினார்- தினசரி பூஜைகள்,  உத்சவங்கள் வருஷம் பூராவும் எவ்விதம் செய்யப்பட வேண்டும்.  இதற்கு ஆதரவு தருவது யார்?  எங்ஙனம்?  என எழுதினார். 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும்,  ஸ்ரீரங்கம் கோவிலில் வழுவாமல் அது இன்றும்  பின்பற்றப்பட்டு வருகிறது. இதனாலேயே அவர் 'உடையவர்' என அழைக்கப்படுகிறார்.

பூஜாகிரமம், உத்சவம் காலங்களில் ஆழ்வார்களின் பாடல்கள் ஒழுங்காகப் பாடப் படுகின்றன. இன்றளவும் பின்பற்றப்படும் எல்லா முறைகளுமே இராமானுஜர் அருளிச் செய்ததே. பாசுரங்கள் இன்னிசையாக எல்லா பெருமாள் கோவில்களிலும் பாடப்பட்டு தமிழகத்தின் எதிரொலித்தது இராமானுஜராலே தான். அவர் செய்த பெரிய புரட்சிகளில் இதையே தலைசிறந்ததாகக் கொள்ளலாம்.

தமிழ் மொழி, புரிந்து இறைவனை வணங்குதல், ஒழுங்காக பூஜைகளைச் செய்தல், எவ்வாறு செய்ய வேண்டும், அதற்கு ஆதாரம்   என சகலத்தையும் யோசித்து, செய்து காட்டி ஆயிரம் வருஷங்களாக நடைமுறையில் இருக்கும் படியான ஒன்றை  சாதாரணர்களால் செய்துவிட முடியாது என்றால், அவர் பெரும் புரட்சியாளரே!

'ஓம் நமோ நாராயணாய'  மந்திரத்தை பக்தர்கூட்டமும் அவருடன் சேர்ந்து சொன்னதால் பழைய கர்மாக்கள் தீர்ந்தன;  அதனால், புதிதாய் சொர்க்கத்தை நோக்கி வழி செய்யப்பட்டதாக,  ஒதுக்கி வைக்கப்பட்டதாய் நொந்தவர்களும் மனம் நிறைந்தனரே , அதுவல்லவா புரட்சி!

 சோழ நாட்டின் மன்னர்கள் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். இராமானுஜரை தர்பாருக்கு அழைத்து மிரட்ட எண்ணினர். கூரத்தாழ்வாரும், பெரிய நம்பியும் செய்த சூழ்ச்சியால் இராமானுஜர் தப்பிக்கிறார். சோழ எல்லையைக் கடந்து செல்கிறார். தொண்டனூரின் ராஜாவின் நட்பு கிடைக்கிறது. தொண்டனூரின் ஏரி மிகப்பெரியது. குறுக்கு அணை கட்ட எல்லா உதவியும் செய்கிறார் இராமானுஜர். ஆயிரம் ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் நலன் காக்கிறது அணை!

திருநாராயணபுரத்தில் (மைசூர் மாண்டியா அருகில்)  காட்டில் விஷ்ணுவின் சிலை கிடைக்கிறது. இஸ்லாமியப் படைவீரர்கள் உத்சவ விக்ரகத்தை டில்லி எடுத்துச் சென்றதை அறிந்த இராமானுஜர், அதை டில்லி சென்று மீட்கிறார். சம்பத்குமாரா என்று அதற்குப் பெயரிடுகிறார். அப்போது சிலர் அவரைத் தாக்கும் போது, அங்குள்ள ஹரிஜனங்கள் உதவியுடன் விக்ரகத்தைக் காப்பாற்றுகிறார். அவர்களைத் 'திருக்குலத்தோர்' என்று மன நெகிழ்வுடன் நன்றியுடன் அழைத்தவர், பெரிய புரட்சி மகானாகத் தானே தோன்றுகிறார்!

இப்படி பல விதமான செயல்பாடுகளில், எண்ணங்களில், நடத்தையில் அவர் புரட்சி ஞானியாக ஒளிர்கிறார். அவரது வாழ்க்கையில் இருந்து ஏதோ ஒரு அம்சத்தையேனும்  நம்மால் பின்பற்ற முடிகிறதா எனப் பார்பதே நமக்கு இவற்றை அறிந்ததன் பலனாகும்.


குறிப்பு:

திருமதி ம.பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும், எழுத்தாளர். திருச்சியில் வசிக்கிறார்.